உலகம் பலவிதம்
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர். மணிலாவில் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
பாரம்பரியத்துக்கு மரியாதை
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர். மணிலாவில் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அந்த இடத்துக்கு அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவில் வந்திறங்கிய மோடி, பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய பாரம்பரியமான 'பரோங் தகலோக்' ஆடையை அணிந்திருந்தார். இதேபோன்ற பாரம்பரிய உடையை பெர்டினாண்ட்டும் அணிந்திருந்தார். வெளிநாட்டுப் பயணங்களில் அந்தந்த நாட்டின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் மதிக்கும் வகையில் உடையணியும் மோடியின் அணுகுமுறை இந்த நிகழ்விலும் கவனம் பெற்றது.
ஜெபமாலையை வீசலாமா?
Advertisement
Advertisement
பெரு நாட்டில் பயணம் செய்து வரும் போப் ஆண்டவர் 14-ஆம் லியோ, லாஸ் பால்மாஸ் விமானப்படைத் தளத்தில் பொதுமக்கள் முன்பாகத் தோன்றினார். உற்சாகமடைந்த கூட்டத்தினர் சிலர் ஜெபமாலைகளை போப்பை நோக்கி வீசினர். அதில் ஒரு ஜெபமாலை போப் முகத்தில் விழுந்து லேசான கீறல் ஏற்பட்டது. அவர் தனது முகத்தைத் தடவிக்கொண்டார். இந்தச் சம்பவத்தின் புகைப்படங்களும், விடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. ஜெபமாலையை வீசுவதால் என்ன பயன் என்று சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
இன்னும் 6 பாக்கி
நடிகையும் பாடகியுமான ஜெனிபர் லோபஸ் தனது நான்கு திருமணங்கள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ரசிகர் ஒருவர் அவரைக் கிண்டல் செய்யும் வகையில், 'உங்களுக்கு இன்னும் ஆறு விரல்கள் இருக்கின்றன!'' என்று நகைச்சுவையாகக் கூறினார். இன்னும் 6 பேரைக் கல்யாணம் செய்யலாம் என்று அவர் கேலி செய்துள்ளார். அதற்குப் பதிலளித்த ஜெனிபர் லோபஸ், 'ஆமாம், எனக்குத் தெரியும்'' என்று கூறிவிட்டு, 'அடக் கடவுளே! நான் இதுவரை கேட்டதிலேயே இதுதான் மிகவும் வேடிக்கையானது'' என்று தெரிவித்தார். மேலும், ரசிகர் கூறிய இந்த நகைச்சுவை வாசகத்தை டி-ஷர்ட்டில் அச்சிட்டு வெளியிட வேண்டும் என்றும் அவர் வேடிக்கையாகக் குறிப்பிட்டார். அரங்கில் சிரிப்பொலி.
விண்கலத்தில் எலான் மஸ்க்!
விண்வெளிக்குச் சென்று பூமிக்குத் திரும்பிய 171 அடி உயரமுள்ள ஸ்டார்ஷிப் விண்கலம், வரலாற்றுச் சாதனையாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஏவுதளத்துக்குத் திரும்பி வந்து, அணைத்து பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விண்கலத்தின் வெப்பத் தடுப்புப் பாதுகாப்பு ஓடுகளை ஆய்வு செய்வதற்காக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் எலான் மஸ்க் கிரேன் ஒன்றில் ஏறிச் சென்று பார்வையிட்டார். விஞ்ஞானிகளுக்குப் பதிலாக, எலான் மஸ்க் ஏறியது பலருக்கும் ஆச்சரியம் தந்துள்ளது.