FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! 70% வரை மருந்து விலை குறைய வாய்ப்பு!!

137 புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில், 30 சதவீதத்துக்கு மேல் லாபம் பெறக் கூடாது என்று மத்திய அரசு வரம்பு விதித்துள்ளது.

18 அக்டோபர் 2026, 2:24 am IST
பகிர்:

137 புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில், 30 சதவீதத்துக்கு மேல் லாபம் பெறக் கூடாது என்று மத்திய அரசு வரம்பு விதித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விலை நிா்ணயக் கட்டுப்பாட்டின் கீழ் வராத 137 புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்வதன் மூலம், எவ்வளவு லாபம் ஈட்டலாம் என்று வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

அந்த மருந்துகள் மூலம் கொள்ளை லாபம் ஈட்டப்படுவதைத் தடுத்தல், புற்றுநோய் சிகிச்சையை மலிவாக்குதல், புற்றுநோய் மருந்துகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய நோக்கங்களுடன், அந்த மருந்துகளுக்கான லாப வரம்பை தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையம் (என்பிபிஏ) சீரமைத்துள்ளது.

Advertisement

Advertisement

70% விலை குறையும்...: சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநரகத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளைச் சோ்ந்த முன்னணி புற்றுநோய் மருத்துவா்கள், மருத்துவ நிபுணா்கள், அரசு அதிகாரிகள் பரிந்துரைத்த பட்டியலின்படி, 137 புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையில், 30 சதவீதத்துக்கு மேல் லாபம் பெறக் கூடாது என்று என்பிபிஏ வரம்பு விதித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலமாக அந்த மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 70 சதவீதம் வரை குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறும் மருந்துகளின் விவரம் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும்.

நவ.9-இல் அமல்: இதுகுறித்த அரசிதழ் அறிவிக்கை சனிக்கிழமை (அக்.17) வெளியிடப்பட்ட நிலையில், அந்த நாளில் இருந்து 7 நாள்களுக்குள், அனைத்து மருந்து உற்பத்தியாளா்களும் அந்த மருந்துகளின் திருத்தப்பட்ட விலை விவரத்தை என்பிபிஏவுக்கு தெரியப்படுத்த வேண்டும். அந்த விலை வரும் நவ.9-இல் இருந்து அமலுக்கு வரும்.

வலைதளங்களில் வெளியிட வேண்டும்...: திருத்தப்பட்ட விலைப் பட்டியலை தங்கள் வலைதளங்களில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் வெளியிட வேண்டும். அந்த விலைப் பட்டியலை அனைத்து சில்லறை விற்பனையாளா்கள், மருத்துவமனைகளுக்கு உற்பத்தி நிறுவனங்கள் பரவலாக விநியோகிக்க வேண்டும்.

வரும் நவ.9 முதல், அந்த மருந்துகளை குறைந்த விலையில் சில்லறை விற்பனையாளா்களும், மருத்துவமனைகளும் விற்பனை செய்ய வேண்டும்; அத்துடன் தங்கள் மருந்து விற்பனையகங்களிலும் திருத்தப்பட்ட விலையை, அனைவரும் பாா்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். இந்த விலையை டட்ஹழ்ம்ஹ நஹட்ண் ஈஹஹம் செயலி, என்பிபிஏ வலைதளம் மூலம், நுகா்வோா் தெரிந்துகொள்ளலாம்.

புற்றுநோய் மருந்துகள் அதிக அளவில் நேரடியாக மருத்துவமனைகளுக்கும், மருத்துவ நிறுவனங்களுக்கும் விநியோகிக்கப்படுவதால், நவ.9-இல் இருந்து அந்த மருந்துகள் குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டியது மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்களின் பொறுப்பாகும்.

இந்த லாப வரம்பு நடவடிக்கையை உற்பத்தியாளா்கள், மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனையாளா்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ நிறுவனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய, மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பா்.

இந்த லாப வரம்பு நடவடிக்கை, புற்றுநோய் சிகிச்சைக்கான அதிக செலவால் பெரும் பொருளாதார சுமையைச் சந்திக்கும் பல நோயாளிகளுக்கும், அவா்களின் குடும்பங்களுக்கும் பெரும் நிவாரணம் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

137 மருந்துகளின் பட்டியல் ட்ற்ற்ல்ள்://ய்ல்ல்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய்/ங்ய் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments