அண்ணா அனுமதித்திருக்க மாட்டார்!
ரூ. 10 கூடுதல் வசூலுக்கு அரசு தரப்பில் இதைக் காரணமாக கூறி முறைகேட்டை மறைத்தாலும் அந்த திட்டமும் இன்னமும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) சில்லறை மதுபான விற்பனைக் கடைகளில் மது பாட்டிலுக்கான அதிகபட்ச சில்லறை விலையைவிட (எம்ஆர்பி) கூடுதலாக ரூ. 10 முதல் 20 வரையில் வசூலிப்பது மட்டுமல்லாது, கேட்கும் மது வகைகளும் கிடைக்காததால் பல ஊர்களில் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது.
கடந்த 2003-ஆம் ஆண்டு வரையில் சில்லறை மதுபான விற்பனைக் கடைகளை தனியார் நடத்தி வந்தனர். கடைகளை ஏலம் விடுவதில் கிடைத்த வருமானத்தை அரசு பெற்று வந்தது.
கொள்முதல், நிர்வாகம், விற்பனை என அனைத்தையும் தனியாரே பார்த்துக் கொண்டதால் அதில் அவ்வளவாக புகார்கள் இல்லை. போலி மதுபான விற்பனை குறித்த புகார்கள் மட்டுமே ஆங்காங்கே கூறப்பட்டு வந்தன.
Advertisement
Advertisement
மதுபானக் கடைகளை ஏலம் விடுவதில் தனி நபர்கள் கூட்டுக்குழு (சிண்டிகேட்) அமைத்து குறைந்த தொகைக்கு குத்தகை எடுத்துக் கொண்டு அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தி வந்ததால் அப்போதைய அதிமுக ஆட்சியில் மதுபானக் கடைகள் அரசுடைமை ஆக்கப்பட்டன. கடந்த 23 ஆண்டுகளாக அரசு ஏகபோகமாக மதுபான சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான 'திராவிட மாடல்' திமுக ஆட்சியில் பாட்டிலுக்கு அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிடக் கூடுதலாக ரூ. 10 முதல் 20 வரை வசூலிப்பது தொடங்கியது. மது அருந்தும் கூடங்களின் உரிமையாளர்களிடம் சட்ட விரோத பண வசூல், ஆயத்தீர்வை செலுத்தாத மது பாட்டில்கள் விற்பனை குறித்த விசாரணைகள் நிலுவையில் உள்ளன.
ஜோசப் விஜய் தலைமையில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 முதல் 20 வசூல் முடிவுக்கு வரும் என மது அருந்துவோர் எதிர்பார்த்தனர். கடைகளுக்கு மதுபானங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கான வாடகை, இறக்குவதற்கான கூலி, சேதமடைந்த மது பாட்டில்களால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு அரசு தனியாக நிதி அளிக்காததால் இந்த கூடுதல் வசூல் தொகையை கொண்டுதான் அந்த செலவுகளை ஈடுகட்ட வேண்டியதாக இருக்கிறது என்று அது நியாயப்படுத்தப்பட்டது.
இப்போது ஊழியர்களுக்கு ஊதியம் மட்டுமல்லாது நிர்வாகச் செலவுகள் சிலவற்றையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் பிறகும் கூடுதல் தொகை வசூல் செய்த புகாரின்பேரில் மாநிலம் முழுவதும் சுமார் 160 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
"மலைப் பகுதிகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற வேண்டும். அதற்கான வைப்புத் தொகையாக ரூ. 10 வசூலித்துக் கொண்டு பாட்டிலை திரும்பப் பெறும்போது அந்தப் பணத்தை கொடுக்க வேண்டும். இந்த முறையை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்" என்று வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ரூ. 10 கூடுதல் வசூலுக்கு அரசு தரப்பில் இதைக் காரணமாக கூறி முறைகேட்டை மறைத்தாலும் அந்த திட்டமும் இன்னமும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
தமிழ்நாட்டில் தற்போதுள்ள 11 மதுபான உற்பத்தி ஆலைகளில் 8 ஆலைகளில் இருந்து மது கொள்முதல் செய்யப்படுவதாகவும், அதிலும் குறிப்பிட்ட இரண்டு, மூன்று ஆலைகளிலிருந்து அதிக அளவு கொள்முதல் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனினும், அண்மைக் காலமாக மது அருந்துவோர் விரும்பும் குறிப்பிட்ட சில வகை மதுபானங்கள் கடைகளில் கிடைப்பதில்லை என்று கூறி மது அருந்துவோர் திருச்சி, விருத்தாசலம், புவனகிரி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர்.
பெரும்பாலான மது உற்பத்தி ஆலைகள் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செல்வாக்கு பெற்றவர்களுக்கு சொந்தமானவை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கொள்முதலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்தான் அதற்குக் காரணம்.
மொத்தம் 4,765 மதுபானக் கடைகள் தமிழகத்தில் இருந்தன. புதிய ஆட்சி ஏற்பட்ட உடன் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 717 கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. எஞ்சிய கடைகளுடன் சுமார் 2,900 மது அருந்தும் கூடங்களும் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கிடைக்கும் வருவாய் சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி.
இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் நிறுவனர் பொதுச் செயலாளருமான 'அண்ணா' என்று அன்புடன் அழைக்கப்படும் சி.என். அண்ணாதுரையின் 118-ஆவது பிறந்த தினம். மொழிக் கொள்கையில் தொடங்கி இலவச அறிவிப்புகள் வரை அண்ணா காட்டிய வழியில் பயணிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் இன்றைய ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட 'கழக' கட்சிகள், 'மதுவிலக்கு' என்று வரும்போது மட்டும் வசதியாக அவரை மறந்துவிடுகிறார்கள்.
மதுவிலக்குக் கொள்கையை எந்தக் காரணத்துக்காகவும் கைவிட முடியாது என்று பிடிவாதமாக இருந்த அண்ணா, தனது வழித்தோன்றல்களின் ஆட்சியில் வரி வருவாய்க்காக அரசே நேரடியாக மது விற்பனையில் ஈடுபடும் அவலத்தை கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அதனால், மதுபான விற்பனையை தனியாரிடம் ஒப்படைத்து விடலாம் என்று பொதுவெளியில் எழுந்துள்ள விவாதம் குறித்து அரசு ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டும்.
கூட்டுக்குழு அமைத்து கடைகளை ஏலம் எடுப்பது, போலி மது விற்பனை போன்றவற்றை அரசு கண்காணித்துக் கொண்டால் போதும். கொள்முதல், நிர்வாகம், விற்பனை என அனைத்தையும் தனியாரே பார்த்துக் கொள்ளும் பழைய ஏல முறைக்கு மாறுவதுதான் சரியான முடிவாக இருக்க முடியும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.