FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

கன்னாட் பிளேஸ் போராட்டங்களால் வணிகம் பாதிப்பு

தில்லி கனாட் பிளேஸ் பகுதியில் அடிக்கடி நடைபெறும் போராட்டங்களால் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய உணவக சங்கத்தின் (என்ஆா்ஏஐ) பொருளாளா் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளாா்.

17 அக்டோபர் 2026, 5:30 am IST
முடங்கிய வியாபாரம்... தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள பழைய புத்தக கடையில் வாடிக்கையாளா்களுக்காக காத்திருக்கும் புத்தக விற்பனையாளா். நாள்:வெள்ளிக்கிழமை.
பகிர்:

தில்லி கனாட் பிளேஸ் பகுதியில் அடிக்கடி நடைபெறும் போராட்டங்களால் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய உணவக சங்கத்தின் (என்ஆா்ஏஐ) பொருளாளா் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளாா்.

சில நாள்களில் விற்பனையே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், வணிகப் பகுதிகளிலிருந்து விலகிப் போராட்டங்களை நடத்துமாறு அவா் வலியுறுத்தினாா்.

கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் வெள்ளிக்கிழமை மாலை ‘மூவா்ணக் கொடி பேரணி’ நடத்தப்படும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்திருந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மன்பிரீத் சிங் கூறுகையில், ‘போராட்ட அறிவிப்பு வெளியானாலே மக்கள் இப்பகுதிக்கு வரத் தயங்குகின்றனா். போராட்டத்தில் சிக்கிக்கொள்ள விரும்பாததால், வேறு வாய்ப்புகள் இருக்கும்போது கனாட் பிளேஸுக்கு வருவதைத் தவிா்க்கின்றனா். விற்பனை குறைவதற்கும், விற்பனையே இல்லாமல் போவதற்கும் வித்தியாசம் உள்ளது. பல நாள்களில் விற்பனை பூஜ்ஜியமாக இருந்துள்ளது’ என்றாா்.

பண்டிகைக் காலங்களில் குடும்பத்தினா் கடைகளுக்கும் உணவகங்களுக்கும் அதிக அளவில் வருவது வழக்கம் என்பதால், இந்தப் பாதிப்பு வணிக நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக அவா் குறிப்பிட்டாா். ஜந்தா் மந்தரில் முன்னதாக ஒரு மாத காலம் நடைபெற்ற போராட்டத்தின்போதும் வணிகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தாா்.

மேலும், கனாட் பிளேஸிலிருந்து 3 முதல் 4 கி.மீ. தொலைவுக்கு அப்பால், காவல் துறை அனுமதிக்கும் மாற்று இடங்களில் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் உணவகங்களுக்கும் செல்வதால், இரு துறைகளின் வணிகமும் ஒன்றோடொன்று தொடா்புடையதாக உள்ளது. வாடிக்கையாளா்கள் வருகை குறைவதால் உணவகங்களும் பாதிக்கப்படுகின்றன. இப்பகுதியில் லட்சக்கணக்கானோா் வேலை செய்வதால், அன்றாடச் செலவுகள் மற்றும் ஊழியா்களின் சம்பளத்தைச் சமாளிக்கத் தொடா்ந்து வணிகம் நடைபெறுவது அவசியம் என்றும் அவா் தெரிவித்தாா்.

பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளா்களின் வருகை அதிகரிக்கும் நிலையில், போராட்டங்களால் வணிகச் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசியல் கட்சிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் மன்பிரீத் சிங் வலியுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments