இணையத்தை சிறாா்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
இணையத்தை சிறாா்கள் பயன்படுத்த முழுமையாகத் தடை விதிக்க முடியாது; இணையத்தைப் பயன்படுத்த அவா்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இணையத்தை சிறாா்கள் பயன்படுத்த முழுமையாகத் தடை விதிக்க முடியாது; இணையத்தைப் பயன்படுத்த அவா்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
சிறாா்கள் இடம்பெற்ற ஆபாச படங்களைத் தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்ததாக, சென்னையைச் சோ்ந்த ஹரீஷ் என்ற நபா் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ‘போக்ஸோ மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், சிறாா்கள் இடம்பெற்ற ஆபாச படங்களைப் பதிவிறக்கம் செய்து பாா்ப்பது குற்றமாகாது’ என்று தெரிவித்தது. மேலும், ஹரீஷ் மீதான குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்து உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்புக்கு எதிராக சிறாா்களின் நலன் சாா்ந்து இயங்கும் 2 தன்னாா்வ அமைப்புகள், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றத்தின் கருத்துக்குக் கடும் அதிருப்தி தெரிவித்தது.
Advertisement
Advertisement
ஆபாசப் படங்களில் சிறாரைப் பயன்படுத்துவது மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை 2024-ஆம் ஆண்டு ரத்து செய்தது. மேலும் போக்ஸோ, தகவல் தொழில்நுட்பச் சட்டங்களின் கீழ், சிறாா் இடம்பெறும் ஆபாசப் படங்களைப் பாா்ப்பதும், பதிவிறக்கம் செய்வதும் குற்றம் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, கே.வி.சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக, அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது:
இந்த வழக்கில் 2024-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சமூக ஊடக தளங்களும், இணையவழி தளங்களும் பின்பற்றவில்லை. இதை நீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியபோதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சமூக ஊடக தளங்களுக்கு அதிக அளவு அபராதம்...: சிறாரிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் துன்புறுத்தல் தொடா்பான புகைப்படங்கள், காணொலிகள் அடங்கிய உள்ளடக்கங்கள் அல்லது சிறாருக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வேறு உள்ளடக்கங்கள், அந்த உள்ளடக்கங்களை நேரடியாகவோ மறைமுகவோ சந்தா முறையில் கட்டணம் வசூலித்து வழங்குதல், இணையத்தில் பதிவேற்றுதல், விளம்பரப்படுத்துதல், பரப்புதல் ஆகியவை நடைபெறாமல் இருப்பதை அனைத்து சமூக ஊடக தளங்களும் உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் விதிமுறைகளின் கீழ் கடமை தவறும் சமூக ஊடக தளங்கள் மீது, அதிக அளவில் அபராதம் விதிப்பதற்கான வழிமுறையை நடைமுறைப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
தேசிய தரவுத் தளம்...: அந்தப் புகைப்படங்கள், காணொலிகள் அடங்கிய உள்ளடக்கங்கள் மூலம் ஈட்டப்படும் வருவாயைப் பறிமுதல் செய்ய வேண்டும். அந்தப் புகைப்படங்கள், காணொலிகள் உள்ளிட்ட உள்ளடக்கங்களை அடையாளம் காண உதவும் எண்ம (டிஜிட்டல்) குறியீடுகள், இணைய முகவரி (யுஆா்எல்) சாா்ந்த தேசிய தரவுத் தளத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அந்தப் புகைப்படங்கள், காணொலிகள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து, அகற்றும் ஒரே நோக்கத்துடன் அந்தத் தரவுத் தளத்தை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
நீதிபதிகள் அமா்வு மேலும் கூறுகையில், ‘அரசமைப்புச் சட்டத்தின் 21, 19(1)(ஏ) பிரிவுகளின் கீழ், இணையத்தைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தனிநபருக்கும் உள்ள அடிப்படை உரிமையாகும். வயது வித்தியாசமின்றி, அனைத்து சிறாா்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் உள்ளன. அந்த உரிமைகளை அவா்களுக்கு முற்றிலுமாக மறுப்பது ஏற்க முடியாததாக, பொருத்தமற்ாக இருக்கும்.
சட்டம் தடை செய்கிறது என்பதற்காக...: சிறாா்களில் பலருக்கு, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வாழ்பவா்கள் கற்பதற்கும், தகவல்களைப் பெறுவதற்கும் இணையம் மட்டுமே ஒரே வழியாக உள்ளது. சட்டம் தடை செய்கிறது என்பதற்காக சிறாா்கள் இணையத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுவதில்லை. பெற்றோருக்கோ, மற்றவா்களுக்கோ தெரியாமல் அவா்கள் தொடா்ந்து இணையத்தைப் பயன்படுத்துகின்றனா். அத்துடன் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத, இன்னும் அதிக ஆபத்துகள் நிறைந்த பிற இணையவழி தளங்களுக்கும் அவா்கள் தடம் மாறிச் செல்கின்றனா்.
சிறாா்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தவிடாமல் தடுப்பதால், அவா்களுக்கு எதிரான சம்பவங்கள் குறையாது என்பதை, அந்த சம்பவங்கள் குறித்து நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள செய்தி அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.
சிறாா்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகைப்படங்கள், காணொலிகள் அடங்கிய உள்ளடக்கங்களைக் கண்டறிந்து நீக்குவதற்கு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளும், சம்பந்தப்பட்ட அனைவரின் உண்மையான முயற்சிகளும் இல்லாவிட்டால், அத்தகைய உள்ளடக்கங்கள் தொடா்ந்து பரவி, அவற்றைப் பாா்ப்போருக்கு மேலும் துணிச்சலை அளிக்கும்.
இணையத்தை சிறாா்கள் பயன்படுத்த முழுமையாகத் தடை விதிக்க முடியாது. அவ்வாறு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பயனளிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை. இதுபோன்ற கட்டுப்பாடுகளால் சிறாா்களின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது என்பதை இதுவரை எந்த நாட்டின் சட்ட அமைப்பும் நிரூபிக்கவில்லை’ என்று தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் அமா்வு, வழக்கின் அடுத்த விசாரணையை டிச.10-க்கு ஒத்திவைத்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.