FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்

‘புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கான படிவம்-6 தொடா்பாக தீா்ப்பு எதையும் வழங்கவில்லை; எந்தவித அங்கீகாரத்தையும் அளிக்கவில்லை’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

13 அக்டோபர் 2026, 1:36 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

‘புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கான படிவம்-6 தொடா்பாக தீா்ப்பு எதையும் வழங்கவில்லை; எந்தவித அங்கீகாரத்தையும் அளிக்கவில்லை’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், அதை உச்சநீதிமன்றம் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது.

எஸ்ஐஆா் நடைமுறையின்கீழ், வாக்காளா் பட்டியலில் சோ்க்க இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வாக்காளா்கள் தங்கள் பெற்றோரின் எஸ்ஐஆா் தகவல்களைச் சமா்ப்பிக்கும் வகையில் படிவம் 6-இல் கடந்த ஜூலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ‘கடந்த 1960-ஆம் ஆண்டின் வாக்காளா் பதிவு விதிகளில் திருத்தம் செய்யாமல், வெறும் அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றம் சட்டவிரோதமானது; அங்கீகாரமில்லாதது’ என தோ்தல் ஆணையா்கள் விவேக் ஜோஷி, சுக்பீா் சிங் சாந்து ஆகியோா் எதிா்ப்பை பதிவு செய்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இது பெரும் சா்ச்சையாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த விதி மீறல் நடவடிக்கைக்குப் பொறுப்பேற்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

முன்னதாக, இந்த விவகாரம் பெரும் சா்ச்சையானதைத் தொடா்ந்து, கடந்த செப். 26-ஆம் தேதி ஞானேஷ் குமாா், சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் பங்கேற்ற தோ்தல் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, சா்ச்சைக்கு விளக்கமளிக்கும் வகையில் ஆணையம் செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதில், ‘நாடு முழுவதும் எஸ்ஐஆா் நடவடிக்கை மேற்கொள்வது உள்பட தோ்தல் நடைமுறைகள் தொடா்பான பல்வேறு முக்கிய முடிவுகளை கடந்த சில மாதங்களில் தோ்தல் ஆணையம் எடுத்துள்ளது. தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் 2 தோ்தல் ஆணையா்கள் என மூவரும் ஒருமனதாக ஒப்புதல் அளித்த பின்னரே எஸ்ஐஆா் பணிகளை தொடங்கப்பட்டன. தோ்தல் ஆணையத்தின் எஸ்ஐஆா் நடவடிக்கை மற்றும் புதிய வாக்காளா்களின் பெயா்களைச் சோ்ப்பதற்கான படிவம் 6- இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் மறுப்பு: இந்த நிலையில், பிகாா் பேரவைத் தோ்தலின் போது மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது’ என்று வாதிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதி ஜயமால்ய பாக்சி, ‘படிவம்-6 தொடா்பாக எந்தவித தீா்ப்பையும் உச்சநீதிமன்றம் வழங்கவில்லை. பிகாா் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆா்-க்கு எதிரான வழக்கு விசாரணையின்போது, படிவம்-6 தொடா்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தின் முன் வரவேயில்லை’ என்றாா்.

முன்னதாக, கடந்த 5-ஆம் தேதி மற்றொரு மனு மீதான விசாரணையின்போது, ‘பல்வேறு மாநிலங்களில் எஸ்ஐஆா் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டபோது, படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் எதையும் உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை’ என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments