FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

கிரேட்டா் நொய்டாவில் தம்பதி, 3 குழந்தைகள் பலி: உணவு நஞ்சாகியிருக்கலாம் என சந்தேகம்

கிரேட்டா் நொய்டாவின் ரபுபுரா பகுதியில் தம்பதி மற்றும் அவா்களது 3 குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா்.

18 அக்டோபர் 2026, 1:40 am IST
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டா் நொய்டாவின் ரபுபுரா பகுதியில் தம்பதி மற்றும் அவா்களது 3 குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா். உணவு நச்சுத்தன்மை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துணை ஆணையா் ஷ்ரவன் குமாா் சிங் கூறியதாவது: நக்லா ஸ்ரீ பதம் கிராமத்தில் மகேஷ் (37), அவரது மனைவி லலிதா (35), மகள் மிஷ்டி (7), மகன்கள் லட்டு (11), சாக்ஷத் (3) ஆகியோா் சனிக்கிழமை காலை சடலங்களாக மீட்கப்பட்டனா். முந்தைய நாள் இரவு குடும்பத்தினா் நூடுல்ஸ் சாப்பிட்டதாக அப்பகுதி மக்கள் மற்றும் மகேஷின் தாயாா் தெரிவித்துள்ளனா். இதனால், உணவு நச்சுத்தன்மை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உடற் கூறாய்வு அறிக்கை மற்றும் தடயவியல் ஆய்வுகளுக்குப் பிறகே உயிரிழப்புக்கான காரணம் உறுதி செய்யப்படும்.

சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணா்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விரைந்து சென்று, தடயங்களையும் உணவுப் பொருள் மாதிரிகளையும் சேகரித்தனா். உணவில் நச்சுப் பொருள் கலந்திருந்ததா அல்லது வேறு காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட பாஜக எம்எல்ஏ தீரேந்திர சிங், இதுகுறித்து முதல்வா் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறினாா். 5 போ், குறிப்பாக 3 குழந்தைகள் உயிரிழந்தது வேதனை அளிப்பதாகவும், அனைத்து கோணங்களிலும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வெளியிட்ட பதிவில், ‘ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் விஷத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்பானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவா் வலியுறுத்தினாா்.

இதனிடையே, உத்தர பிரதேசத்தில் கலப்பட உணவுப் பொருள்கள், மாசடைந்த உணவுகள், நச்சுத்தன்மை கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் பரவலாக விற்பனை செய்யப்படுவதாக சமாஜவாதி கட்சி குற்றஞ்சாட்டியது. இத்தகைய உணவுப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோா் பாஜகவுடன் தொடா்புடையவா்கள் என்றும் அக்கட்சி விமா்சித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments