FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தேர்தல் ஆணையர்களுக்கான சட்டப் பாதுகாப்பை நீக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

தேர்தல் ஆணையர்களுக்கான சட்டப் பாதுகாப்பை நீக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.

22 அக்டோபர் 2026, 4:20 am
மல்லிகார்ஜுன கார்கே - ANI
பகிர்:

தேர்தல் ஆணையர்களுக்கான சட்டப் பாதுகாப்பை நீக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.

இது குறித்து கர்நடக மாநிலம், கலபுர்கியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் தனது செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்பதில் இருந்து விலக்கு அளித்து, கடந்த 2023-ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

Advertisement

Advertisement

தலைமைத் தேர்தல் ஆணையருக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தை நீங்கள் ஏன் கொண்டுவந்தீர்கள்? அரசமைப்புக்கு மேலானவர்களா நீங்கள்? தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணிச் சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட 2023-ஆம் ஆண்டு சட்டம், அவர்களின் அதிகாரபூர்வப் பணிகளின்போது மேற்கொள்ளும் செயல்கள் மற்றும் தெரிவிக்கும் கருத்துகளுக்காக, அந்தச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு, சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இந்த சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்.

மத்திய அளவில் இருந்து மென்பொருள் வாயிலாக வழங்கப்படும் உத்தரவுகளின் அடிப்படையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை (பிஎல்ஓ) வாக்காளர் பட்டியலில் மாற்றங்களைச் செய்யுமாறு அறிவுறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்தல்கள் நடுநிலையாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட்டால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறட்டும்.

காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற வேண்டும் என்றோ, குறிப்பிட்ட கட்சிதான் வெற்றிபெற வேண்டும் என்றோ அரசமைப்பில் கூறப்படவில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நாட்டின் அமைப்புகளின் நேர்மையையும், சுதந்திரத்தையும் காப்பாற்றவும் எதிர்க்கட்சிகள் போராடுகின்றன. எந்தவொரு தனிநபருக்காகவோ, குறிப்பிட்ட கட்சிக்காகவோ இந்தப் போராட்டம் நடைபெறவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினால், அவரே நேரடியாகப் பதிலளிப்பதில்லை. மற்றவர்கள் மூலம் பதில் அளிக்கப்படுகிறது. நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார். ஆனால், பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்து முடிவெடுக்காவிட்டால், இதுபோன்ற பதில்களால் எந்தப் பயனும் இல்லை.

அரசு தன்னிச்சையாகச் செயல்பட முடிவெடுத்தால், நாட்டு மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். அவர்கள் உங்களை ஆட்சியிலிருந்து அகற்றுவார்கள். அரசு தான் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ளாவிட்டால், மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும்.

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு மக்களவையின் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கையையும், நடைமுறையில் உள்ள அரசமைப்பு விதிகளையும் பயன்படுத்த முடியும். ஆனால், மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிர்க்கட்சிகள் எதிராக இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பிரதமர் மோடி மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்.

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு நாங்கள் எதிராக இருந்திருந்தால், அந்தச் சட்டத்தை முதலில் நிறைவேற்றியிருப்போமா? எதிர்க்கட்சிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலேயே அரசு இவ்வாறு செயல்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments