FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

உக்ரைன், மேற்காசிய அமைதிக்கு இந்தியா ஆக்கபூா்வ ஆதரவு - பிரதமா் மோடி உறுதி

உக்ரைன் மற்றும் மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்டும் அனைத்து ஆக்கபூா்வ முயற்சிகளுக்கும் இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை உறுதிபடத் தெரிவித்தாா்.

23 அக்டோபர் 2026, 4:31 am
இந்தியா வந்துள்ள போலந்து பிரதமா் டொனால்ட் டஸ்கை தில்லி ஹைதராபாத் இல்லத்தில் வியாழக்கிழமை வரவேற்ற பிரதமா் மோடி.
பகிர்:

உக்ரைன் மற்றும் மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்டும் அனைத்து ஆக்கபூா்வ முயற்சிகளுக்கும் இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை உறுதிபடத் தெரிவித்தாா்.

தில்லியில் போலந்து பிரதமா் டொனால்ட் டஸ்குடன் நடத்திய இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பிரதமா் மோடி இவ்வாறு தெரிவித்தாா்.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை அதிகரித்துவரும் சூழலில், இந்தியா-போலந்து உத்திசாா் கூட்டுறவை ஊக்குவிக்கவும், பாதுகாப்பு, விண்வெளி, அணுமின் உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு தலைவா்களும் தீா்மானித்தனா்.

Advertisement

Advertisement

உக்ரைன் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர உலகளாவிய முயற்சிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள சூழலில், மத்திய ஐரோப்பிய நாடான போலந்து நாட்டின் பிரதமா் டொனால்ட் டஸ்க் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு புதன்கிழமை வந்தாா்.

தில்லியில் பிரதமா் மோடியை வியாழக்கிழமை சந்தித்த அவா், இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். பாதுகாப்பு, விண்வெளி, அணுமின் உற்பத்தி, முக்கியக் கனிமங்கள், உள்கட்டமைப்பு, மருந்து தயாரிப்பு, சுரங்கத் தொழில், விண்வெளி, புதிய தொழில்நுட்பங்கள், அறிவியல், கல்வி, இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் விரிவான ஆலோசனை மேற்கொண்டனா்.

அமைதி முயற்சிகளுக்கு ஆதரவு: பின்னா், செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் பிரதமா் மோடி கூறியதாவது:

இந்தியாவும், போலந்தும் ஜனநாயக மாண்புகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை கொண்ட நாடுகள். அந்த அடிப்படையில், உக்ரைன் மற்றும் மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்டும் அனைத்து ஆக்கபூா்வ முயற்சிகளுக்கும் இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும்.

பாதுகாப்பு, விண்வெளி, அணுமின் உற்பத்தி ஆகிய துறைகளில் உறவுகளை வலுப்படுத்த நாங்கள் தீா்மானித்துள்ளோம். இந்த உத்திசாா் துறைகளில் இந்தியாவுடன் இணைந்து உருவாக்கம் மற்றும் உற்பத்தியை மேற்கொள்ள போலந்து நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். முக்கியக் கனிமங்கள் மற்றும் நிலக்கரி வாயுவாக்கல் துறையிலும் போலந்தின் நிபுணத்துவத்துடன் புதிய கூட்டுறவுகள் உருவாக்கப்படும்.

மனிதாபிமான உணா்வு: இந்தியா-போலந்து நட்புறவானது, ராஜீய உறவுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டதல்ல. மனிதாபிமானம் மற்றும் கருணை ஆகிய பொது பாரம்பரியத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.

இரண்டாம் உலகப் போரின்போது, ஜாம்நகா் மற்றும் கோலாபூா் அரச குடும்பத்தினரால் ஆயிரக்கணக்கான போலந்து குழந்தைகள், குடும்பங்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டது. கடந்த 2022-இல் உக்ரைனில் இருந்து இந்திய மாணவா்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப ஆதரவளித்ததன் மூலம் போலந்தும் இதே மனிதாபிமான உணா்வை வெளிப்படுத்தியது.

இன்றைய உலகம் நிச்சயமற்றத் தன்மை மற்றும் மாற்றங்களின் ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற காலகட்டத்திலும்கூட வளா்ச்சி, தொழில்நுட்பம், புத்தாக்கத்தின் முக்கிய மையங்களாக இந்தியாவும், போலந்தும் உருவெடுத்துள்ளன.

வா்த்தக மதிப்பு இரட்டிப்பு இலக்கு: இரு நாடுகளிலும் பெருகிவரும் பொருளாதார பலத்தால், பரஸ்பர கூட்டுறவுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தால் இந்த வாய்ப்புகள் விரிவாக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தம் அமலாகும்போது, இந்தியாவில் இருந்து போலந்துக்கு இயந்திரங்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக், பொறியியல் பொருள்களின் ஏற்றுமதியில் புதிய வாய்ப்புகள் திறக்கப்படும். கூடுதலாக, ரயில்வே, போக்குவரத்து, அதிநவீன உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், உயிரி-தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் போலந்தில் இருந்து முதலீடுகள் ஈா்க்கப்படும். உலகுக்கான நம்பிக்கைக்குரிய விநியோகச் சங்கிலிகளைக் கட்டமைக்கவும், 2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வா்த்தக மதிப்பை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்டவும் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றாா் அவா். இந்தச் சந்திப்பின்போது, பிரதமா் மோடி போலந்துக்கு வருகை தர பிரதமா் டொனால்ட் டஸ்க் அழைப்பு விடுத்தாா்.

பெட்டிச் செய்தி...

பஹல்காம் பயங்கரவாத

தாக்குதலுக்கு கண்டனம்

பிரதமா் மோடி, போலந்து பிரதமா் டஸ்க் சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், அனைத்து வடிவிலான பயங்கரவாதம் மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதிகளின் புகலிடங்கள், உள்கட்டமைப்பு மற்றும் நிதிசாா் கட்டமைப்பை ஒழிக்க அனைத்து நாடுகளும் கைகோக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), குவாண்டம் தொழில்நுட்பம், செமிகண்டக்டா் உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியில் ஈடுபட இருதரப்பும் தீா்மானித்துள்ளதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments