ஆயுதப் பயிற்சி வழக்கு: நேரில் ஆஜரான மேத்யூ வான்டைக்! மீண்டும் அமெரிக்கா திரும்ப தில்லி நீதிமன்றம் அனுமதி!!
ஆயுதப் பயிற்சி வழக்கில் கைதான மேத்யூ வான்டைக், மீண்டும் அமெரிக்கா திரும்ப தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதைப் பற்றி...
ஆயுதப் பயிற்சி வழக்கில் கைதான மேத்யூ வான்டைக், மீண்டும் அமெரிக்கா திரும்ப தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள மேத்யூ வான்டைக் என்ற அமெரிக்கரின் தலைமையில் 6 உக்ரைனியர்கள் சூழ்ச்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் மியான்மர் எல்லைப் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு ட்ரோன் போர் பயிற்சி அளித்த குற்றச்சாட்டின் கீழ் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் மேத்யூவையும், உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னெள மற்றும் தில்லியில் உக்ரைனியர்களையும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது. அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 6 மாதங்களாக அவர்கள் சிறையில் இருந்தனர்.
Advertisement
Advertisement
இருப்பினும், தில்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 7 பேர் மீதும் உபா (யுஏபிஏ) சட்டத்தின் கீழ் அல்லாமல், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டப் பிரிவுகளின் கீழ் மட்டும் குற்றஞ்சாட்டப்பட்டது. யுஏபிஏ சட்டத்தின் கீழ், அவர்களுக்கு எதிரான விசாரணை நிலுவையில் இருந்தது.
இதையடுத்து குற்றப்பத்திரிகையில் யுஏபிஏ சட்டப் பிரிவுகள் இடம்பெறாததால், வான்டைக் உள்பட 7 பேருக்கு கடந்த செப். 24 ஆம் தேதி தில்லி நீதிமன்றம் பிணை அளித்து உத்தரவிட்டது.
வான்டைக் அமெரிக்காவுக்கும், ஆறு உக்ரேனியர்கள் தங்கள் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக உக்ரைனுக்கும் சில நிபந்தனைகளுடன் பயணம் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
ஒரு மாத காலத்திற்குப் பிறகு அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்த 72 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் தேசிய புலனாய்வு முகமையால் குற்றம் சாட்டப்பட்டவர் காணொளிக் காட்சி மூலமாகவோ அல்லது நேரில் ஆஜராகியோ விசாரணையில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மேத்யூ வான்டைக் உள்பட 7 பேர் தாக்கல் செய்த மனுக்களை தில்லி நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி பிரஷாந்த் சர்மா, மூடிய அறைக்குள் வழக்கை இன்று (அக். 23) விசாரித்தார்.
இந்த வழக்கில் என்.ஐ.ஏ. சார்பில் சிறப்பு அரசு வழக்குரைஞர் ராகுல் தியாகி, வழக்குரைஞர்கள் ஜதின் கத்ரி மற்றும் அமித் ரோஹிலா ஆகியோர் ஆஜராகினர். உடல்நலக் குறைபாடுகளைக் காரணம் காட்டிய அந்த ஆறு உக்ரேனியர்கள் காணொளிக் காட்சி வாயிலாக ஆஜராகினர். அதே நேரத்தில், அமெரிக்காவிலிருந்து வந்திருந்த வான்டைக் நேரில் ஆஜரானார்.
உக்ரேனியர்களின் உடல்நலம் குன்றியுள்ளதாக அவர்களது வழக்குரைஞர் தெரிவித்ததை அடுத்து, இந்தியாவிற்கு வெளியே தங்குவதற்கான அனுமதியை நீட்டித்தும், வான்டைக் அமெரிக்கா திரும்புவதற்கு அனுமதி அளித்ததும் நீதிபதி உத்தரவிட்டார்.
அடுத்தாண்டு பிப். 24 ஆம் தேதி வரை இந்தியாவுக்கு வெளியே மேத்யூ வான்டைக் மற்றும் ஆறு உக்ரேனியர்கள் தங்குவதற்கு தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Matthew VanDyke, US national held in Myanmar arms training case, allowed longer stay outside India by Delhi court
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.