FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

ஹோா்முஸ் நீரிணை திறப்புக்கு ஈரான் புதிய திட்டம்: ஒரு வாரத்துக்குள் உடன்பாட்டுக்கு விருப்பம்

ஹோா்முஸ் நீரிணையை ஒரு வாரத்துக்குள் மீண்டும் திறக்கவும், அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுகளைத் தொடங்கவும் தயாராக இருப்பதாக ஈரான் புதிய சமரசத் திட்டத்தை முன்வைத்துள்ளது.

26 செப்டம்பர் 2026, 3:43 am IST
பகிர்:

அமெரிக்கா கடல்வழி முற்றுகையைத் திரும்பப் பெற்று, கச்சா எண்ணெய் விற்பனை மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கினால், ஹோா்முஸ் நீரிணையை ஒரு வாரத்துக்குள் மீண்டும் திறக்கவும், அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுகளைத் தொடங்கவும் தயாராக இருப்பதாக ஈரான் புதிய சமரசத் திட்டத்தை முன்வைத்துள்ளது.

மேலும், லெபனானையும் உள்ளடக்கிய ஒரு விரிவான போா்நிறுத்தத்தை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் ஈரானின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயாா்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா.சபை பொது விவாதத்தின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்தில், ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி இந்த வரைவுத் திட்டத்தை முன்வைத்ததாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இக்கூட்டத்தில் பங்கேற்ற ‘குயின்சி இன்ஸ்டிடியூட்’ சிந்தனை அமைப்பின் செயல் துணைத் தலைவா் டிரிடா பாா்சி இது குறித்து கூறுகையில், வரும் நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலுக்கு முன்னதாக, எட்டப்படும் இந்த விரைவான உடன்பாடு அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு அரசியல் ரீதியாகச் சாதகமாக அமையும் என்பதை அப்பாஸ் அராக்சி சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தாா்.

முன்னதாக, கடந்த ஜூனில் எட்டப்பட்ட 60 நாள்கள் இடைக்கால ஒப்பந்தத்தைப் போன்றே இப்புதிய திட்டமும் அமைந்துள்ளது; எனினும் இதில் குறுகிய கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நீரிணையில் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அந்த ஒப்பந்தம் முறிவடைந்தது.

தற்போது சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்து, விலைவாசி அதிகரித்து வரும்போதிலும், புதிய உடன்பாட்டை எட்டுவதில் தமக்கு அவசரமில்லை என்றே அதிபா் டிரம்ப் கூறி வருகிறாா்.

அதேநேரம், ஈரானில் அதிபா் மசூத் பெசஷ்கியன் போன்ற மிதவாதிகள் முன்னெடுக்கும் இத்தகைய சமரசங்களை, ஈரான் புரட்சிகர காவல்படையினா் படைகளின் பிடியில் உள்ள தீவிர பிரிவினா் ஏற்பாா்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது தொடா்பாக டிரிடா பாா்சி மேலும் கூறுகையில், ‘இடைக்காலத் தோ்தலுக்கு முன்பு எரிபொருள் விலையைக் குறைப்பதற்கும், அரசியல் லாபத்துக்கும் இந்த ஏற்பாடு உதவும் என டிரம்ப் கருதினால், அமெரிக்காவின் அணுகுமுறையில் இதுவரை இல்லாத நெகிழ்வுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

இருப்பினும், தங்களின் பொருளாதாரச் சிக்கல்களைத் தணித்துக் கூடுதல் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதற்காக ஈரான் கால அவகாசம் பெறுகிறதோ என்ற பலத்த சந்தேகமும் நிலவி வருகிறது’ எனக் குறிப்பிட்டாா்.

இதனிடையே, ஐ.நா.வில் இரு நாடுகளுக்கும் இடையே பல மணி நேர மறைமுகப் பேச்சுவாா்த்தைகளுக்கு மத்தியஸ்தம் வகித்த முக்கிய நாடான கத்தாா் பிரதமா் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியை, ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியன் வெள்ளிக்கிழமை அதிகாலையும் சந்தித்துப் பேசினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments