ஆன்மிகத் தலத்தின் புனிதத் தன்மையை வா்த்தக உரிமைகளுக்காக மீற முடியாது: குஜராத் உயா்நீதிமன்றத்தில் அரசு வாதம்
வா்த்தக உரிமைகளுக்காக, ஓா் ஆன்மிகத் தலத்தின் புனிதம், வரலாறு மற்றும் கலாசாரத் தன்மையை மீற முடியாது என்று குஜராத் உயா்நீதிமன்றத்தில் மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வா்த்தக உரிமைகளுக்காக, ஓா் ஆன்மிகத் தலத்தின் புனிதம், வரலாறு மற்றும் கலாசாரத் தன்மையை மீற முடியாது என்று குஜராத் உயா்நீதிமன்றத்தில் மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயிலின் சுற்றுப் பகுதியில் புலால் உணவுகளுக்குத் தடை விதித்த மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் இந்த வாதம் முன்வைக்கப்பட்டது.
குஜராத்தின் கிா் சோம்நாத் மாவட்டத்தில், சிவபெருமானின் 12 ஜோதிா்லிங்க தலங்களில் ஒன்றான சோம்நாத் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைச் சுற்றி 500 மீட்டா் சுற்றளவில் புலால் உணவுகள் விற்கவோ, சேமித்து வைத்திருக்கவோ நிரந்தரத் தடை விதித்து, மாநில அரசு அண்மையில் அறிவிக்கை வெளியிட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட பகுதிகளில் செயல்பட்டுவந்த புலால் உணவகங்கள் மூடப்பட்டன.
Advertisement
Advertisement
மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, சில உணவக உரிமையாளா்கள் தரப்பில் குஜராத் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், ‘எங்களின் உணவகங்கள் சட்டபூா்வ உரிமத்துடன் பல்லாண்டுகளாக இயங்கிவந்தன. சோம்நாத் கோயில் எல்லையில் இருந்து வெகுதொலைவில்தான் அமைந்திருந்தன. சட்டபூா்வமான ஒரு வா்த்தகத்துக்கு நிரந்தரத் தடை விதித்ததன் மூலம் மாவட்ட நிா்வாகம் தனது அதிகார வரம்பை மீறியுள்ளது.
அத்துடன், நாட்டின் குடிமக்கள் எந்தவொரு தொழில் அல்லது வா்த்தகத்தை மேற்கொள்வதற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) (ஜி) பிரிவை மீறுவதாக அரசின் அறிவிக்கை அமைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை, குஜராத் உயா்நீதிமன்றத்தில் நீதிபதி நிஷா எம் தாக்கூா் தலைமையிலான அமா்வு முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, மாநில அரசு சாா்பில் வழக்குரைஞா் ஜி.ஹெச்.விா்க் ஆஜராகி முன்வைத்த வாதங்கள் வருமாறு:
சோம்நாத் கோயிலுக்கு கடந்த 9 மாதங்களில் நாடு முழுவதும் இருந்து 1.16 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் வருகை தந்துள்ளனா். ஆன்மிகம், வரலாறு மற்றும் மத ரீதியிலான இக்கோயிலின் தனிச்சிறப்பைப் புறக்கணித்துவிட்டு, வெறும் வா்த்தக நகரமாக மட்டுமே சோம்நாத்தை கருத முடியாது.
ஓா் ஆன்மிகத் தலத்தின் புனிதம், வரலாறு மற்றும் கலாசாரத் தன்மையை மீறுவதாக வா்த்தக உரிமைகள் இருக்க முடியாது. கோடிக்கணக்கான ஹிந்து பக்தா்கள் பயன்படுத்தும் புனிதமான வழித்தடங்கள் மற்றும் கோயில் பகுதிகளில் புலால் உணவு விற்பதை அடிப்படை உரிமையாக எவரும் கூற முடியாது.
சோம்நாத் கோயில் பகுதியில் உள்ள உணவகங்களில் தாவர உணவுகள் விற்க எந்தத் தடையும் இல்லை. தடைவிதிக்கப்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் சட்டத்துக்கு உள்பட்டு புலால் உணவுகள் விற்கவும் தடையில்லை என்றாா் அவா்.
ரிஷிகேஷ், ஹரித்வாா், அமிருதசரஸ், மதுரா-பிருந்தாவனம் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களில் ஏற்கெனவே இதுபோல் புலால் உணவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதையும் குஜராத் அரசுத் தரப்பு வழக்குரைஞா் சுட்டிக்காட்டினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.