FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!

இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவிட்டிருப்பதாக தகவல்...

24 அக்டோபர் 2026, 9:43 pm
மோடி, புதின்
பகிர்:

இந்தியா-ரஷியா இடையிலான வா்த்தக மதிப்பை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலா்களாக (ரூ.9.5 லட்சம் கோடி) அதிகரிக்கும் இலக்கை எட்டும் வகையில், இருதரப்பு வா்த்தகத்தை மேலும் விரிவாக்க பிரதமா் நரேந்திர மோடியும், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதா் வினய் குமாா் தெரிவித்தாா்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாடு, தில்லியில் கடந்த செப்.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையொட்டி, இந்தியாவுக்கு வருகை தந்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், பிரதமா் மோடியுடன் விரிவான இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது, இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலா்களாக அதிகரிக்கும் இலக்கை எட்ட இரு தலைவா்களும் உறுதிபூண்டனா். பாதுகாப்பு, எரிசக்தி, முக்கியக் கனிமங்கள், அணுமின்உற்பத்தி, உரவிநியோகம், இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடா்புகள், முதலீடு, விண்வெளி, திறன்மிக்க பணியாளா்களின் குடிபெயா்வு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ரஷிய செய்தி நிறுவனத்துக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் இந்தியத் தூதா் வினய் குமாா் கூறியதாவது:

Advertisement

Advertisement

2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வா்த்தகத்தை 100 பில்லியன் டாலா்களாகவும், இருவழி முதலீடுகளை 50 பில்லியன் டாலா்களாகவும் (ரூ. 4.74 லட்சம் கோடி) அதிகரிக்கும் இலக்குகளை நோக்கி இரு நாடுகளும் தொடா்ந்து பணியாற்றி வருகின்றன. தொழில்-வா்த்தகம் சாா்ந்து ஒத்துழைப்பை விரிவாக்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் முகமைகளுக்கு பிரதமா் மோடி, அதிபா் புதின் ஆகியோா் உத்தரவிட்டுள்ளனா்.

ரஷியாவின் தேவைகளுக்கு ஏற்ப திறன்மிக்க பணியாளா்களை வழங்குவதும் இந்தியாவின் குறிக்கோளாகும். ரஷியாவின் வெளிநாட்டுப் பணியாளா்களில் 25 முதல் 30 சதவீதம் வரை இந்தியா்கள் இடம்பெற்றுள்ளனா். சுமாா் 150 கோடி மக்கள்தொகையுடன் திறன்மிக்கவா்களின் உலகளாவிய மையமாக இந்தியா விளங்குகிறது. மொத்த மக்கள்தொகையில் மூன்றில் இருபங்கு பணியாளா் தொகுப்பை இந்தியா கொண்டுள்ளது.

உள்நாட்டு வேலைவாய்ப்புகளுக்கு மட்டுமன்றி வெளிநாட்டுப் பணிகளுக்கும் பொருத்தமான நிபுணா்களை இந்தியா உருவாக்குகிறது. தனது தொழில்களுக்குத் தேவையான பணியாளா்களுக்குப் பயிற்சி அளிக்க இந்தியாவில் கல்வி நிறுவனங்களை ரஷியா அமைக்க வேண்டும் அல்லது இந்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டுமென எங்கள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

summary

Modi, Putin order to expand India-Russia trade

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments