கர்நாடகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்: எஸ்ஐஆருக்கு பிந்தைய பட்டியல் வெளியீடு
கர்நாடகத்தில் எஸ்ஐஆருக்கு பிந்தைய பட்டியல் வெளியீடு பற்றி...
கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் சுமார் ஒரு கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.54 கோடியில் இருந்து 4.55 கோடியாக குறைந்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி வி.அன்புக்குமார் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: இறுதி வாக்காளர் பட்டியலில் 2,25,83,107 ஆண் வாக்காளர்களும், 2,29,14,063 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 2,841 வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
18 முதல் 19 வயதுக்குள்பட்ட வாக்காளர்கள் 6.83 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 3,92,134 பேர் உள்ளனர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வாக்காளர்கள் 3,252 பேர் உள்ளனர்.
Advertisement
Advertisement
எஸ்ஐஆருக்கு முன்னர் கர்நாடகத்தில் 5,54,32,314 வாக்காளர்கள் இருந்தனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து 99.32 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 4,55,00,011-ஆக குறைந்துள்ளது.
கர்நாடகத்தில் எஸ்ஐஆர் பணிகளை ஜூன் 30 முதல் அக். 27 வரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட கால அட்டவணையின்படி இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, ஆக. 24-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், வாக்காளர்களின் எண்ணிக்கை 4,46,80,151-ஆக இருந்தது. அதன்பிறகு, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்களில் பலர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். அவர்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பி விசாரணைகள் நடத்தி, விசாரணை நடைமுறைகளை நிறைவு செய்த பின்னர் தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
8 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு: ஜூன் 16-ஆம் தேதிமுதல் 8,19,714 வாக்காளர்கள் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகுதியுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐயும், பெயர்களை நீக்குவதற்கு படிவம் 7-ஐயும், முகவரி உள்ளிட்ட விவரங்களை திருத்துவதற்கும், பிற மாற்றங்களை செய்வதற்கும் படிவம் 8-ஐயும் சமர்ப்பிக்குமாறு சிறப்பு முகாம் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
ஜூன் 16 முதல் அக். 26 வரை படிவம் 6-இன் கீழ் 10,62,336 விண்ணப்பங்களும், படிவம் 6ஏ-இன் கீழ் 4,872 விண்ணப்பங்களும், படிவம் 7-இன் கீழ் 2,29,235 விண்ணப்பங்களும், படிவம் 8-இன் கீழ் சுமார் 13.27 லட்சம் விண்ணப்பங்களும் பெறப்பட்டன. மொத்தம் 26.23 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பெறப்பட்ட சுமார் 26.23 லட்சம் விண்ணப்பங்களில் 3.03 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 20.64 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2.55 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் படிவம் 6 மூலம் 8,77,104 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். படிவம் 6ஏ மூலம் மேலும் 2,312 பேர் சேர்க்கப்பட்டனர். முகவரி மாற்றம் தொடர்பாக படிவம் 8 மூலம் 1,28,622 வாக்காளர்கள் தங்களது புதிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த வகைகளின் கீழ் மொத்தம் 10,80,038 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 1,88,324 பேரில் 1,091 பேர் உயிரிழந்த வாக்காளர்கள்; 184 பேர் கண்டறிய முடியாத அல்லது இல்லாத வாக்காளர்கள்; 762 பேர் ஏற்கெனவே வேறிடத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள் அல்லது இரட்டைப் பதிவுகளைக் கொண்டவர்கள். முகவரி மாற்றம் காரணமாக 1,24,327 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதையடுத்து, படிவம் 7 தானாக உருவாக்கப்பட்டது. அறிவிக்கைகள் அனுப்பி விசாரணை நடத்திய பின்னர், சுமார் 61,960 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்டனர்.
சுமார் 43.8 லட்சம் வாக்காளர்களுக்கு அறிவிக்கைகள் அனுப்பி விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த விசாரணையின்போது, வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் சிலர் தகுதியற்றவர்கள் எனக் கண்டறிந்தனர். உரிய விசாரணை நடத்தி, அதற்கான காரணங்களுடன் கூடிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பின்னர் 61,960 பேரின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டது.
"படிவம் 7' சர்ச்சை
வாக்காளர்களின் பெயர்களை மொத்தமாக நீக்குவதற்காக 60,000 "படிவம் 7' விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி வி.அன்புக்குமார் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்காக அதிகாரிகள் சுமார் 60,000 "படிவம் 7' விண்ணப்பங்களை தயாரித்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், பாஜகவின் முயற்சியில் ஒரு சில தேர்தல் அதிகாரிகள் பல மாவட்டங்களில் முஸ்லிம்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக படிவம் 7 விண்ணப்பங்களை மொத்தமாகத் தாக்கல் செய்ததாக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
படிவம் 7-ஐ மொத்தமாக உருவாக்குவதற்கு எந்த விதிமுறையும் இல்லை. ஒவ்வொரு படிவத்தின் மீதும் உரிய விசாரணை நடத்தப்பட்டு, காரணங்களுடன் கூடிய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயரில் உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக, வாக்காளர் பதிவு அலுவலர் விசாரணை நடத்தி ஒருவர் தகுதியற்றவர் என முடிவு செய்தால், அந்த அலுவலரின் பெயரில் படிவம் உருவாக்கப்படும். உதவி வாக்காளர் பதிவு அலுவலர் விசாரணை நடத்தினால், அவரது பெயரில் படிவம் உருவாக்கப்படும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.