நாடாளுமன்றத்தில் 2013-இல் நடந்தது என்ன? எஸ்ஐஆர் ஒரு மீள்பார்வை!
எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருவதைப் பற்றி...
இந்திய தேர்தல் ஆணையத்தின் தொடர் செயல்முறையாக மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றன. எஸ்ஐஆரை கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, 2013-இல் தில்லி யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணியின்போது 13.58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதை நியாயப்படுத்தியது.
2013, ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாநிலங்களவையில் அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் நடந்த கேள்வி நேரத்தின்போது, 'தில்லி எஸ்ஐஆரின்போது வாக்காளர் பட்டியலிலிருந்து 13.58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம்' தொடர்பாக உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர்.
அவற்றுக்கு அப்போதைய மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கபில் சிபல் விரிவாக பதில் அளித்தார்.
Advertisement
Advertisement
வரலாற்றை நினைவுபடுத்திப் பார்க்க உதவும் வகையில் நாடாளுமன்ற ஆவணக் குறிப்புகளில் பதிவான அந்த விவாத நிகழ்வுகள் குறித்த தகவல்களை 'தினமணி' பெற்றது. அவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
கபில் சிபல்: வீடு வீடாக ஆய்வு நடத்தி, உரிய சட்ட வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகு, வாக்காளர் பட்டியலிலிருந்து 13.58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில், குடிபெயர்ந்த, இறந்த அல்லது இரட்டைப் பதிவான (ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெயர் உள்ளவர்கள்) வாக்காளர்களைக் கண்டறிய 2012 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாக நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், குடிபெயர்ந்தவர்கள் 13,38,970, இறந்தவர்கள் 1,36,054, இரட்டைப் பதிவானவர்கள் 36,205 எனக் கண்டறியப்பட்டது.
1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 22-இன் கீழ், வீடு வீடாக நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்ட அனைத்து 15,58,229 வாக்காளர்களுக்கும் முறையான வாய்ப்பளிக்கவும், வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்படுவதை எதிர்த்து பிரதிநிதித்துவப்படுத்தவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவ்வாறு கண்டறியப்பட்ட நபர்களின் பட்டியல், பொதுமக்களின் தகவலுக்காக தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரியின் www.ceodelhi.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்து அச்சு ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்குத் தகவல் வழங்கப்பட்டது.
வீடு வீடாக நடத்திய ஆய்வின் அடிப்படையில் நீக்கப்படவுள்ளவர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய அரசியல் கட்சிகளுடன் பகிரப்பட்டது. வாக்காளர் பதிவு அதிகாரிகளால் (இஆர்ஓக்கள்) உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும், தொடர்புடைய வாக்காளர்களுக்கு நீக்குவதற்கு முன்பு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்வதற்காக, பல்வேறு நிலைகளில் (மாவட்ட தேர்தல் அதிகாரி நிலையிலும், எஸ்டிஎம் (தேர்தல்) நிலையிலும் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலக (தலைமை அலுவலகம்) நிலையிலும்) சரிபார்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட பிறகு, பெயர்கள் நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள் மீண்டும் தகவல் தெரிவித்தனர். மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த முடிவில் உங்களுக்கு குறைகள் ஏதேனும் இருந்தால், 1960-ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகளின் விதி 23-இன் கீழ் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மேல்முறையீடு / பிரதிநிதித்துவம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேற்கூறிய காரணங்களுக்காக நோட்டீஸ் பெற்ற மொத்த வாக்காளர்களான 15,58,229 பேரில், 1,99,989 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. அதாவது, அவர்கள் நேரில் அல்லது பிரதிநிதிகள் மூலமாக இஆர்ஓ-க்கள் முன்பு ஆஜரானதாலோ அல்லது அவர்களின் பெயர்கள் நீக்கத் தகுதியானவை அல்ல என்று இஆர்ஓ-க்கள் திருப்தி அடைந்ததாலோ அந்தப் பெயர்கள் தக்கவைக்கப்பட்டன.
சபீர் அலி (ஐக்கிய ஜனதா தளம்): வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்களுக்காகவும், 10,000-க்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்காகவும் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்.
கபில் சிபல்: மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 22 மற்றும் பிரிவு 24-இன் குறிப்பிட்ட விதிகளின்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த சட்டப் பிரிவு 22-இன் படி, நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னர்தான் ஒருவரின் பெயரை நீக்க முடியும். சட்டத்தின்படி இதில் மிகவும் விரிவான நடைமுறை உள்ளது. அதன் இறுதியில் பெயர் நீக்கப்படும்போது உரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது. பொது விளம்பரங்கள் செய்யப்படுகின்றன, நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன, இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது. அதுமட்டுமன்றி, நீக்கப்பட வேண்டிய அனைத்துப் பெயர்களும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுகின்றன.
எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சியும் நீக்கப்படக்கூடிய தொகுதிகளின் பெயர்களைக் கொண்டுள்ளது. மேலும், அரசியல் கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்களுக்கும் விசாரிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த முழு நடவடிக்கையையும் அரசு செய்யவில்லை. உண்மையில், அரசுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இது தேர்தல் ஆணையத்தால் செய்யப்படும் ஒரு செயலாகும். யாருக்கேனும் குறைகள் இருந்தால், மேல்முறையீடு செய்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு உரிமை சட்டப் பிரிவு 24-இல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சட்டப் பிரிவு 22-இன் கீழ் வாக்காளர் பதிவு அதிகாரியின் எந்தவொரு உத்தரவுக்கும் எதிராக மாவட்ட நடுவர் அல்லது கூடுதல் மாவட்ட நடுவர் அல்லது நிர்வாக நடுவர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் குறித்த காலத்துக்குள்ளும் உரிய முறையிலும் மேல்முறையீடு செய்யலாம்.
எனவே, இந்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பும் நடைமுறை உள்ளது, மேல்முறையீட்டு வசதி உள்ளது, இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் ஆணையம் பின்பற்றும் விரிவான நடைமுறை இவையே. ஏதேனும் குறைகள் இருந்தால், தேர்தல் ஆணையத்தை அணுகி இந்தப் பெயர்கள் தவறாக நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கலாம்.
உறுப்பினர் பேசும்போது ஒரு தொகுதியை மட்டும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நான் தில்லியில் உள்ள தொகுதிகளைப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியான எண்ணிக்கையிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதைக் காண்கிறேன்.
உதாரணமாக, வடமேற்கு தில்லியில் மொத்தம் 1,47,000, வடகிழக்கில் 1,63,000, தெற்கில் 1,59,000, மத்தியில் 1,31,000, தென்மேற்கில் 1,23,000, கிழக்கில் 1,62,000, மேற்கில் 1,53,000, வடக்கில் மீண்டும் 1,31,000 மற்றும் புது தில்லியில் 1,85,000 ஆகும். புது தில்லியில்தான் மிக அதிகமாக நீக்க கோரப்பட்ட 15 லட்சத்தில் மொத்தம் 13 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
சபீர் அலி: 70 தொகுதிகளின் புள்ளிவிவரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு இடத்தின் நீக்கமும் பூமிக்கும் வானத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. அமைச்சர் நடைமுறை பற்றி பேசுகிறார்.
ஒரு ஏழை மனிதன் தனது ஒரு வாக்குக்காக நீதிமன்றத்துக்குச் சென்று ஆஜராக முடியாது, வழக்குரைஞரை வைத்து வாதிட முடியாது, அவருக்கு அந்த அளவுக்கு பலம் இருக்காது. எனவே, அரசு தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட ஏதேனும் விதிமுறையையோ அல்லது வழியையோ பின்பற்றுமா?
கபில் சிபல்: வாக்காளர் யார், வாக்காளர் அல்லாதவர் யார் என்பது குறித்து மத்திய அரசு தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்படத் தொடங்குவது முற்றிலும் முறையற்றது என்பதை அவையில் குறிப்பிட விரும்புகிறேன். உண்மையில், இது அரசமைப்பின்படி சுதந்திரம் வழங்கப்பட்ட ஓர் அமைப்பில் அரசு தலையிடுவதற்குச் சமமாகும். அதை நாம் செய்ய முயற்சிக்கக்கூட கூடாது என்று நினைக்கிறேன்.
இருப்பினும், பெயர்கள் நீக்கம் மூன்று வகைகளின் கீழ் வருகிறது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். உதாரணமாக, ஒரு நபர் தனது வசிப்பிடத்தை ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு மாற்றினால், அவரது பெயர் நீக்கப்படும். ஒருவர் பெயர் இரட்டைப் பதிவாகியிருக்கலாம். அவர் தனது வசிப்பிடத்தை மாற்றியிருக்கலாம், ஆனால் பழைய தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் அப்படியே இருக்கும். புதிய தொகுதியிலும் பெயர் பதிவாகியிருக்கும். எனவே, அவற்றில் ஒன்றை ரத்து செய்ய வேண்டும். மூன்றாவது விஷயம் அவர் இறந்திருந்தால், பெயர் இயல்பாகவே நீக்கப்படும்.
எனவே, ஏதேனும் தனிப்பட்ட குறை இருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் ஆணையத்தை அணுகி குறைபாட்டைச் சுட்டிக்காட்டுமாறு உறுப்பினர் கேட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்கள் வாக்காளர் பதிவு அதிகாரியிடம் சென்று 'எங்களைப் பதிவு செய்யுங்கள்' என்று கோரவும் உரிமை உண்டு. அவர்களின் பெயர் நீக்கப்பட்டாலும், அது அவர்கள் பதிவு பெறுவதைத் தடுக்காது. அவர்கள் வாக்காளர் பதிவு அதிகாரியிடம் சென்று பதிவு செய்யக் கோரலாம்.
ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 2 வரை வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர்களைச் சேர்க்க வேண்டும் என்று 6,44,105 உறுப்பினர்கள் கோரி உள்ளனர். வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
அது ஒரு மாறும் தொடர்ச்சியான செயலாகும். ஆண்டின் முதல் தேதியில் அது நிறுத்தப்படும். பிறகு, ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியல் மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே, யாருடைய பெயர்கள் தவறாக நீக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் தேர்தல் பதிவு அதிகாரியிடம் சென்று, 'தயவுசெய்து எங்களைச் சேருங்கள். இதுவே எங்கள் முகவரி. நாங்கள் இங்குதான் வசிக்கிறோம். நீங்கள் அதைத் தவறாக நீக்கிவிட்டீர்கள்' என்று கூறலாம். அதன்பேரில் மாறும் பட்டியல் திருத்தப்படும்.
தர்மேந்திர பிரதான் (பாஜக): தற்போது 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் தற்காலிக பட்டியல் வெளிவந்துள்ளது. 2012 வரை வாக்காளர் பட்டியலும் வெளிவந்துள்ளது. தில்லியாக இருந்தாலும்- நாட்டின் பிற பகுதியாக இருந்தாலும், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பட்டியலுக்கும், வாக்காளர் பட்டியலுக்கும் இடையில் 7 சதவீதம் குறைவு இருப்பதாகத் தெரியவருகிறது.
இரண்டாவதாக, 18 முதல் 24 வயதுக்கு உள்பட்டவர்களில் சுமார் 50 சதவீதத்தினரின் பதிவு இன்னும் செய்யப்பட வேண்டும் என்பதை தேர்தல் ஆணையத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தேர்தல் ஆணையம் சார்பாக, அமைச்சர் சரியாகச் சொன்னது போல் நீங்கள் சென்று உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்ற விதி இன்றும் உள்ளது, இந்தப் பெரிய இடைவெளியைக் குறைக்க தேர்தல் ஆணையம் ஒரு சிறப்பு நடமாடும் பதிவு மற்றும் சேர்ப்பு இயக்கத்தை நடத்துமா?.
கபில் சிபல்: சட்டத்தின் கீழ் ஏற்கெனவே விதிகள் உள்ளதாக எனக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. உறுப்பினரும், பாதிக்கப்பட்டவர்களும் தேர்தல் ஆணையத்தை அணுகினால், ஜனவரி 1, 2014 நிலவரப்படி மாறும் பட்டியல் (டைனமிக்) புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான வழிகளை தேர்தல் ஆணையம் வகுக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
சாந்தாராம் நாயக் (காங்கிரஸ்): தேர்தல் ஆணையம் செய்வது தவறு என்று மத்திய அரசு ஏன் அதை சமாதானப்படுத்த முடியவில்லை?
கபில் சிபல்: தேர்தல் ஆணையத்தை சமாதானப்படுத்துவது இந்திய அரசின் பணி அல்ல. அதைத் தீர்மானிப்பது தேர்தல் ஆணையம்தான். பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான தீர்மானத்தை மாநிலங்களவை நிறைவேற்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ராம் கோபால் யாதவ் (சமாஜவாதி கட்சி): கடந்த முறை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தேர்தல் நேரத்தில் உத்தர பிரதேசத்தில் பல இடங்களில், வாக்காளர் வாக்களிக்கச் சென்றபோது, அங்குள்ள அலுவலரிடம் இருந்த வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் சிவப்பு மையில் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அங்கு வாக்காளர்களின் பெயர்கள் பெருமளவில் அவ்வாறு நீக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?.
கபில் சிபல்: சில சமயங்களில் வாக்களிக்கச் செல்லும்போது வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கப்பட்டிருப்பதை வாக்காளர் காண்கிறார். அதனால் வாக்குச்சாவடி அதிகாரி அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் இருப்பது மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்பது எனக்குத் தெரியும். பல பெயர்கள் மொத்தமாக நீக்கப்பட்டிருப்பதுகூட கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு பிரச்னைதான். அதை நாம் தீர்க்க வேண்டும், தேர்தல் ஆணையத்திடம் இதை தெரிவிக்கிறோம்.
இப்போது என்னிடம் உள்ள தில்லிக்கான தரவுகளின்படி 99 சதவீத வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை உள்ளது. வாக்காளர் பட்டியலுக்கு ஆதாரமாக புகைப்பட அடையாள அட்டை உள்ளது. அது இருந்தால், யாரும் உங்களை 'இல்லை' என்று சொல்ல முடியாது.
நரேஷ் அகர்வால் (சமாஜவாதி கட்சி): அப்படியிருந்தும் வாக்களிக்க மறுக்கிறார்களே...
ராம் கோபால் யாதவ்: உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறிவிடுகிறார்களே...
கபில் சிபல்: நானும் ஒப்புக்கொள்கிறேன்.
சத்யவிரத சதுர்வேதி (காங்கிரஸ்): அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க அனுமதிப்பதில்லையே.
கபில் சிபல்: நாம் தீர்க்க வேண்டிய பிரச்னை இது... ஆணையம் அந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். இது உறுப்பினர்களின் உணர்வு என்பதை நிச்சயமாக ஆணையத்துக்கு தெரிவிப்பேன்.
- நமது சிறப்பு நிருபர்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.