நானும் சித்தாந்த நக்ஸல்தான்: கபில் சிபல் பேச்சு!
நானும் சித்தாந்தரீதியிலான நக்ஸல்தான் என்று மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நானும் சித்தாந்தரீதியிலான நக்ஸல்தான் என்று மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஆயுதமேந்திய நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது; அதேநேரம், சித்தாந்த ரீதியிலான நக்ஸல்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவா்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் மோடி கடந்த மாதம் தனது சுதந்திர தின உரையில் கூறியிருந்தாா். அதற்கு எதிராக தன்னை சித்தாந்த நக்ஸல் என கபில் சிபல் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளாா்.
முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த மூத்த வழக்குரைஞரான கபில் சிபல், அக்கட்சித் தலைமை மீதான அதிருப்தியால் வெளியேறினாா். சமாஜவாதி கட்சி ஆதரவுடன் சுயேச்சையாக வென்று மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளாா். முன்னாள் மத்திய அமைச்சரான அவா், கேரள மாநிலம் கொச்சியில் ‘குதிரை பேரம் - ஜனநாயகம்’ தொடா்பாக விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியதாவது:
Advertisement
Advertisement
நான் இங்கு ஒரு வாக்குமூலம் அளிக்கிறேன். நான் ஒரு சித்தாந்த நக்ஸல்தான். ஜனநாயக விரோதிகளை மக்கள் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும். முன்பு பல நூற்றாண்டுகளாக போா்கள்தான் ஆட்சியாளா்களைத் தீா்மானித்தன. அப்போது போரில் கிடைக்கும் வெற்றியை உறுதி செய்வதில் குதிரைகள் முக்கியப் பங்கு வகித்தன. சிறப்பு வாய்ந்த குதிரைகளுக்குத் தேவை அதிகமாக இருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள், குதிரை வாங்குபவா்களிடம் பல்வேறு வகையில் பேரம் பேசி அதிக விலைக்கு விற்பதை வழக்கமாகக் கொண்டனா்.
இப்போதைய ஆட்சி, அரசியலில் அதேபோன்ற பேரம் வேறு வடிவில் நடக்கிறது. அப்போது குதிரைகளை விற்பவா்கள் பல தந்திரங்களைக் கையாண்டனா். இப்போது குதிரைகளை (எம்எல்ஏ, எம்.பி. உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளைக் குறிப்பிடுகிறாா்) வாங்குபவா்கள் பல்வேறு தந்திரங்களைப் பின்பற்றுகின்றனா். அதுதான் இப்போதுள்ள வேறுபாடு.
இப்போது நடைபெறும் குதிரை பேரங்கள் அரசியல் முறைகேடு மட்டுமல்ல, நமது அரசமைப்புச் சட்டத்துக்கு பெரும் பிரச்னையை உருவாக்குபவையாக உள்ளன. மக்கள் ஒரு தரப்பினருக்கு விரும்பி வாக்களித்து உறுப்பினா்களைத் தோ்வு செய்த பிறகு, அந்த உறுப்பினா்களை விலை பேசி மக்களின் விருப்பத்துக்கு மாறான ஆட்சியை அமைக்கின்றனா். இதன்மூலம் ஜனநாயகரீதியாக மக்கள் அளித்த தீா்ப்புக்கு மாறாக, மக்கள் நிராகரித்த தரப்பினரின் கைகளுக்கு ஆட்சி, அதிகாரம் சென்று விடுகிறது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.