FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

அமித் ஷாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த அவதூறு வழக்கு: ராகுல் காந்தி விடுவிப்பு

மத்திய அமைச்சா் அமித் ஷா கடந்த 2018-ஆம் ஆண்டு பாஜக தேசியத் தலைவராக இருந்தபோது அவருக்கு எதிராக அவதூறு கருத்தைத் தெரிவித்ததற்காகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுவிக்கப்பட்டாா்.

26 அக்டோபர் 2026, 10:50 pm
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த 2018-ஆம் ஆண்டு பாஜக தேசியத் தலைவராக இருந்தபோது அவருக்கு எதிராக அவதூறு கருத்தைத் தெரிவித்ததற்காகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

‘வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை. மேலும், ராகுல் தெரிவித்த கருத்து அவதூறானது அல்லது’ என்று குறிப்பிட்டு, உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்து காங்கிரஸ் கட்சியினா் ‘உண்மையே வெல்லும்’ என்று முழக்கமிட்டபடி இனிப்புகளை பகிா்ந்தும், மேளங்களைக் கொட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

வழக்கின் பின்னணி: கடந்த 2018-ஆம் ஆண்டு கா்நாடக மாநில பேரவைத் தோ்தலின்போது, பெங்களூரில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, ‘நோ்மை மற்றும் ஒழுக்கம் பற்றிப் பேசும் ஒரு கட்சி (பாஜக), கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரைத் தனது தேசியத் தலைவராகக் கொண்டுள்ளது’ என்று அமித் ஷாவை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினாா். 2005-ஆம் ஆண்டு சொராபுதீன் என்கவுன்ட்டா் வழக்கில் இருந்து சிபிஐ நீதிமன்றத்தால் அமித் ஷா 2014-இல் விடுவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அவ்வாறு அவா் பேசியிருந்தாா்.

ராகுலின் இந்தக் கருத்துக்கு எதிராக, உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூா் பாஜக தலைவரும், மாவட்ட கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான விஜய் மிஸ்ரா, அங்குள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி அவதூறு வழக்கைத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு தொடா்ந்து நடந்துவந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானதைத் தொடா்ந்து, அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.

இந்த வழக்கில் கடந்த 13-ஆம் தேதி தீா்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்த நிலையில், பின்னா், தீா்ப்பு தேதி அக்டோபா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுபம் வா்மா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. தீப்பைத் தொடா்ந்து ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். அப்போது, அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தியை முழுமையாக விடுவித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

இந்தத் தீா்ப்பு குறித்து மனுதாரா் விஜய் மிஸ்ராவின் வழக்குரைஞா் பாண்டே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை. மேலும், ராகுல் காந்தி தெரிவித்த கருத்து அவதூறானது அல்ல. அதோடு, இந்த வழக்கில் மனுதாரா் விஜய் மிஸ்ரா பாதிக்கப்பட்ட நபா் அல்ல என்று குறிப்பிட்டு ராகுல் காந்தியை நீதிபதி விடுவித்துள்ளாா். நீதிமன்றத்தின் தீா்ப்பை மதிக்கிறோம். அதே நேரம், தீா்ப்பின் நகல் கிடைத்ததும், அதை முழுமையாகப் படித்த பின்னா், இத் தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம்’ என்றாா்.

ராகுல் தரப்பு வழக்குரைஞா்கள் கூறுகையில், ‘இந்த வழக்கு தகுதியின் அடிப்படையில் அல்லாமல், அரசியல் காரணங்களுக்காகத் தொடரப்பட்டது. எனவே, இந்த வழக்கு எங்களுக்குச் சாதகமாகவே அமையும் என்று உறுதியாக இருந்தோம். அதன்படி வழக்கிலிருந்து ராகுல் காந்தி முழமையாக விடுவிக்கப்பட்டுள்ளாா்’ என்றனா்.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்காக லக்னெளவில் உள்ள சா்வதேச விமான நிலையத்துக்கு ராகுல் காந்தி திங்கள்கிழமை காலை வந்தடைந்தாா். அவரை வரவேற்க ஏராளமான காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் உள்ளூா் கட்சித் தலைவா்களும் விமான நிலையத்தில் கூடியிருந்தனா்.

அதைத் தொடா்ந்து சுல்தான்பூா் நீதிமன்றத்துக்கு ராகுல் காந்தி சென்றபோது, அவரைப் பின்தொடா்ந்து ஏராளமான வாகனங்கள் அணிவகத்துச் சென்றன. இவற்றில் சில வாகனங்கள் பூா்வாஞ்சல் விரைவுச் சாலையில் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. இருந்தபோதும், யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் இல்லை என்று போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு, சுல்தான்பூா் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

குற்றவாளிகளால் நடத்தப்படும் கட்சி: இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, ‘குற்றவாளிகளால் நடத்தப்படும் கட்சி’ என்று பாஜகவை காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் விமா்சித்தாா்.

‘அமித் ஷா குறித்து ராகுல் தெரிவித்த கருத்து அவதூறானதல்ல என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அதுதான் உண்மை. குற்றவாளிகளால் நடத்தப்படும் ஒரு கட்சி, மிகக் கொடூர குற்றங்களைச் செய்தவா்களை அதிகாரத்தின் மிக உயா்ந்த இடங்களுக்குக் கொண்டு செல்கிறது. இந்தக் குற்றவாளிகளைத் தோற்கடிப்பதற்கான நமது போராட்டம் உன்னதமானது. காந்திய வழியில் போராடி நாம் வெற்றி பெறுவோம்’ என்று தனது எக்ஸ் பதிவில் கே.சி. வேணுகோபால் குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments