காங்கிரஸ் பகிர்ந்த போலியான ராணுவ விடியோக்கள்! மன்னிப்புக் கோர கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்
காங்கிரஸ் பகிர்ந்த போலியான இந்திய ராணுவ விடியோக்கள் குறித்து மன்னிப்புக் கோர கிரண் ரிஜிஜு வலியுறுத்தியிருக்கிறார்.
இந்திய எல்லைக்குள் சீன ராணுவ ஊடுருவல் உள்ளிட்ட தவறான தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் போலியான இந்திய ராணுவ விடியோக்களை வெளியிட்டதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் என காங்கிரஸ் கட்சிக்கு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியிருக்கிறார்.
காங்கிரஸ் வெளியிட்ட விடியோக்கள் போலியானவை என்று இந்திய ரணுவம் சுட்டிக்காட்டிய நிலையில், காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார் கிரண் ரிஜிஜு.
இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவல்கள் நடந்திருப்பதாகவும் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தவறானத் தகவலைக் கொண்டிருந்த விடியோக்களை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.
Advertisement
Advertisement
ஆனால், அந்த இரண்டு காணொளிகளை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. பிகாரைச் சேர்ந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரிது சௌத்ரி விடியோக்களை பகிர்ந்திருந்தார்.
அந்த விடியோக்களில் ஒன்று, சீன வாகனங்கள் இந்திய எல்லைக்குள் நுழைவது போல இருந்தது. மற்றொன்று, அருணாசல பிரதேசத்தில் உள்ள பகுதிகளை சீனா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாகவும், இந்தியப் படைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் மறுக்கப்படுவதாகவும் ஒரு மூத்த ராணுவ அதிகாரி கூறியதாகவும் இடம்பெற்றிருந்தது. இது அனைத்தும் தவறான தகவல்கள் என்று இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
அதாவது, இந்திய ராணுவம் கூறுகையில்,முதல் விடியோ, சிக்கிமில் உள்ள நாது லா கணவாயில் — இது இந்தியா-சீனா இடையிலான எல்லை வர்த்தக மையத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம் — சீன வணிக வாகனங்கள் நுழைந்துள்ளனவே தவிர, அது இந்திய எல்லைக்குள் சீன ராணுவ ஊடுருவல் என்று ஆகாது.
இரண்டாவது விடியோவில் ஸ்பியர் கார்ப்ஸின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங், லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் காளியா, அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகள் மீதான சீனாவின் கட்டுப்பாடு குறித்துப் பேசுவது போன்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
அந்த விடியோ, 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பதிவானது என்றும், அந்த சந்திப்பின்போது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ நடந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டது குறித்து விவரித்த விடியோவை திரித்து போலி விடியோ உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் ராணுவம் விளக்கம் கொடுத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.