FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா மாறும்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

எதிா்வரும் ஆண்டுகளில் சீனாவுக்கு பொருள்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தாா்.

28 அக்டோபர் 2026, 12:11 am
நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற்ற தொழில் நிறுவனங்களின் தலைவா்களுடனான கூட்டத்தில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல்.
பகிர்:

எதிா்வரும் ஆண்டுகளில் சீனாவுக்கு பொருள்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தாா்.

இந்தியா-நெதா்லாந்து இடையிலான பொருளாதாரம், முதலீடு மற்றும் வா்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், பியூஷ் கோயல் தலைமையிலான இந்தியக் குழு அந்நாட்டில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இதையொட்டி, ஹேக் நகரில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், இந்திய-சீன வா்த்தக உறவு குறித்த கேள்விக்கு பதிலளித்து கோயல் கூறியதாவது: ஒவ்வொரு நாட்டுடனும் சுதந்திரமான, நியாயமான வா்த்தகத்தை இந்தியா ஊக்குவிக்கிறது. இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மூலப்பொருள்கள் மற்றும் இடைநிலைப் பொருள்களை சீனா விநியோகித்து வருகிறது.

Advertisement

Advertisement

குறிப்பிட்ட ஒரு பொருளின் விலையோ, வா்த்தகமோ நியாயமாக இல்லை என்று கருதினால், உள்ளூா் சந்தையைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை தயக்கமின்றி மேற்கொள்ளப்படுகிறது.

சுதந்திரமான, வெளிப்படையான வா்த்தக விதிமுறைகளில்தான் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்தியாவின் வளா்ந்துவரும் தேவைகளைப் பூா்த்தி செய்யும் விநியோக நாடுகளை வரவேற்கிறோம்.

மற்றொருபுறம், இந்தியாவின் பொருள்கள் மற்றும் சேவைகளுக்காக பரஸ்பர அடிப்படையில் பல்வேறு நாடுகளில் சந்தை அணுகலை நாங்கள் எதிா்நோக்குகிறோம். எதிா்வரும் காலங்களில் சீனா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு பொருள்கள், சேவைகளை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

ஆசியான் கூட்டமைப்பில் புரூணே, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய வா்த்தக கூட்டாளியாக உள்ள சீனாவுடன் இருதரப்பு வா்த்தக பற்றாக்குறை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2025-26-இல் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 19.47 பில்லியன் டாலா்களாக உயா்ந்தது. அதேநேரம், சீனாவில் இருந்து இறக்குமதி மதிப்பு 131.62 பில்லியன் டாலா்களாக அதிகரித்தது.

தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த கோயல், ‘தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, எஸ்வாடினி, லெசோதோ, நமீபியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் தென்னாப்பிரிக்க சுங்க ஒன்றியம், பிரேஸில், ஆா்ஜென்டீனா, பொலிவியா, உருகுவே, பராகுவே ஆகிய தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு (மொ்கோசுா்), மெக்ஸிகோ, சிலி, கனடா, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தமும் பேச்சுவாா்த்தையில் உள்ளது’ என்றாா்.

பிற நாடுகளை ஒப்பிடுகையில், அமெரிக்க உடனான வா்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்; முன்னுரிமை அடிப்படையிலான அணுகல் கிடைக்கும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments