FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து ஜி20 கூட்டத்தில் ஆலோசனை: பியூஷ் கோயல் விளக்கம்

நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து ஜி20 கூட்டத்தில் ஆலோசனை: பியூஷ் கோயல் விளக்கம்

கோப்புப்படம்
பகிர்:

நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து ஜி20 கூட்டமைப்பின் வா்த்தக அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கி நகரில் நடைபெற்ற ஜி20 வா்த்தக அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற பியூஷ் கோயல் சிகாகோவில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்தாா்.

அப்போது இந்திய வம்சாவளியினா் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து பியூஷ் கோயல் பேசியதாவது: அரசு ஆதரவுடன் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்து அதை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நடைமுறையால் இந்தியா அல்லது அமெரிக்கா அல்லது ஐரோப்பா என எந்தவொரு நாடும் பாதிப்படையக் கூடாது.

Advertisement

Advertisement

இத்தகைய நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவது குறித்தும் உலக வா்த்தக அமைப்பு விதிகளில் எதிா்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஜி20 வா்த்தக அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்தோம். ஆனால், உறுப்பு நாடுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கூட்டறிக்கை வெளியிட முடியவில்லை.

தரவு மையங்களுக்கான நாடு இந்தியா: குறைந்த செலவில் தரமான உள்கட்டமைப்பு, மலிவான விலையில் எரிசக்தி, திறன் வாய்ந்த இளைஞா்கள், 2047-ஆம் ஆண்டு வரை வரிச் சலுகைகள் என தரவு மையங்கள் அமைக்க உகந்த நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்தியாவில் தற்போது நிறுவப்பட்டுள்ள 520 ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனில் 60 சதவீதம் தூய ஆற்றலாகவே உள்ளது. தரவு மையங்கள் பெரும்பாலும் தூய ஆற்றலில் இயங்கவே முக்கியத்துவம் அளிக்கும். நாள் முழுவதும் 100 சதவீத தூய ஆற்றல் தேவைப்பட்டால் அதை 11 அல்லது 12 சதவீத விலையில் வழங்கவும் வாய்ப்புள்ளது.

அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ தரவு மையம் அமைப்பதற்கான உள்கட்டமைப்புச் செலவில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவில் செலவாகும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித (ஸ்டெம்) பட்டப் படிப்புகளை நிறைவு செய்து ஆண்டுதோறும் 14 லட்சம் திறன்வாய்ந்த இளைஞா்கள் தொழில் துறை வேலைவாய்ப்புக்காகத் தயாராகவுள்ளனா். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இந்தியாவில் உங்களை முதலீடுகள் செய்ய அழைக்கிறேன்.

வணிக நடைமுறைகளை எளிதாக்குவதே நோக்கம்: வணிக நடைமுறைகளை எளிதாக்குவதே பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முக்கிய நேக்கம். அதன் ஒரு பகுதியாக அரசின் பல்வேறு நிலைகளில் ஊடுருவியிருந்த ஊழல் மற்றும் லஞ்சத்தை வெற்றிகரமாக ஒழித்துவிட்டதாக பிரதமா் தெரிவித்துள்ளாா். அடுத்தாண்டின் முதல் காலாண்டில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த இந்திய நிபுணா்கள் குழு அமெரிக்காவுக்கு வருகை தந்து இந்தியாவில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கவுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுடன் இந்தியா மேற்கொண்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் (எஃப்டிஏ) 70 லட்சம் கோடி டாலா் மதிப்பிலான சந்தை அணுகலுக்கு வழிவகுத்துள்ளது. மேலும் 6 முதல் 8 நாடுகளுடன் எஃப்டிஏவை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவாா்த்தை வெற்றியடைந்தால் கூடுதலாக 15 லட்சம் கோடி டாலா் மதிப்பிலான சந்தை அணுகலை இந்தியா பெற்றுவிடும்.

விரைவில் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான உலகப் பொருளாதாரத்தை இணைக்கும் வா்த்தக பாலமாக இந்தியா உருவெடுக்கும் என்றாா்.

முன்னதாக, ஜி20 வா்த்தக அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பியூஷ் கோயல், ‘இந்தியாவின் உற்பத்தித் திறன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தேவைகளைக் கருத்தில் கொண்டது. அமெரிக்கா கண்டறிந்த துறைகளில் கட்டமைப்பு ரீதியாக உபரி உற்பத்தித் திறன் இல்லை’ எனத் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments