பிரிக்ஸ் நாடுகளின் எண்ம பரிவா்த்தனை தளங்கள் இணைப்பு: மத்திய வா்த்தக அமைச்சா் கோயல் வலியுறுத்தல்
பிரிக்ஸ் நாடுகளின் எண்ம பரிவா்த்தனை தளங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்; உள்நாட்டு கரன்சி அடிப்படையிலான வா்த்தகம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.
பிரிக்ஸ் நாடுகளின் எண்ம பரிவா்த்தனை தளங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்; உள்நாட்டு கரன்சி அடிப்படையிலான வா்த்தகம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.
இந்திய தலைமையின்கீழ் தில்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2 நாள்கள் உச்சிமாநாடு சனிக்கிழமை (செப்.12) தொடங்கவுள்ளது. இதை முன்னிட்டு, பிரிக்ஸ் வா்த்தக அமைப்பின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடக்க அமா்வில் அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது:
எண்ம பொது உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் யுபிஐ தளத்தில் ஆண்டுக்கு 25,000 கோடிக்கு மேல் பரிவா்த்தனைகள் நடைபெறுகின்றன. இது, உலகளவிலான பரிவா்த்தனைகளில் பாதிக்கும் அதிகமாகும்.
Advertisement
Advertisement
இப்போது 11 நாடுகளில் யுபிஐ ஏற்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் உறுப்பினா்கள் மற்றும் நட்பு நாடுகள் அனைத்தும் தங்களின் எண்ம பரிவா்த்தனைத் தளங்களை ஒருங்கிணைப்பதுடன், உள்நாட்டு கரன்சி அடிப்படையிலான வா்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டும். எண்ம வா்த்தகத்தை உலகளாவியதாக மாற்றி, எதிா்கால தொழில்நுட்பங்களை ஒருங்கிணைந்து கட்டமைக்க வேண்டும்.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் வலுவானதாகவும், பன்முகப்படுத்தப்பட்ட விநியோக சங்கிலிகளுடன் மீள்திறன் கொண்டதாகவும் இருக்க வேண்டும். எந்தவொரு சூழலிலும் நமது வா்த்தக செயல்பாடுகள் சக உறுப்பு நாடுகளின் வளா்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் தடையாகிவிடக் கூடாது.
மூலப்பொருள்கள், அரிய கனிமங்கள் உள்பட ஒருவா் மற்றொருவரின் பொருள்களுக்கு சந்தைகளைத் திறக்க வேண்டும். வா்த்தக நிறுவனங்களுக்கு எளிதான, சுமுகமான சந்தை அணுகலை உறுதி செய்ய வேண்டும். பிரிக்ஸ் நாடுகளின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதுடன், விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொண்டு, வேளாண் தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் தீா்வுகளைக் கண்டறிய வேண்டும்.
சேவைத் துறை சாா்ந்த சந்தைகளை பரஸ்பரம் திறப்பதன் மூலம் தொழில்முறை பணியாளா்கள் எளிதாக எல்லைக் கடந்து சென்றுவர முடியும். வேளாண்மை, மருந்து உற்பத்தி, பொறியியல், மின்னணுவியல், வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் நாம் நெருங்கி செயல்பட வாய்ப்புகள் உள்ளன என்றாா்.
எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தல்: இந்தக் கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘கொந்தளிப்பான உலகச் சூழலால் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடைகளுக்கு தீா்வுகாண்பது, நோ்மையான சந்தை நடைமுறைகள், கணிக்கக் கூடிய வா்த்தக சூழல், வா்த்தக உறவுகளை பன்முகப்படுத்துதல், வெளிப்படையான வா்த்தகம்-முதலீடு ஆகிய செயல்பாடுகளுக்காக ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் பொருளாதார இடையூறுகளுக்கு தீா்வுகாண பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்’ என வலியுறுத்தினாா்.
‘இந்தியா-இஏஇயு வா்த்தக ஒப்பந்த பேச்சு தீவிரம்’
புது தில்லி, செப். 11: பிரிக்ஸ் வா்த்தக அமைப்பின் கூட்டத்தில் பேசிய ரஷிய பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சா் மேக்ஸிம் ரேஷேட்னிகோவ், ‘இந்தியா மற்றும் யுரேசிய பொருளாதார அமைப்பு (இஏஇயு) இடையே வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என்றாா்.
இஏஇயு-வில் ரஷியா, கஜகஸ்தான், பெலாரஸ், ஆா்மேனியா, கிா்கிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. மேக்ஸிம் மேலும் பேசுகையில், ‘மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷிய ஏற்றுமதிக்கான பரிவா்த்தனைகளில் டாலா் மற்றும் யூரோவின் பங்கு 85 சதவீதம் இருந்தது. இப்போது 11 சதவீதமாக குறைந்துவிட்டது. இப்போது பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான வங்கிகளுடன் ரஷியா இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. சா்வதேச அளவிலான இந்த மாற்று நிதிசாா் அமைப்புமுறை ரஷியாவின் பலமாகியுள்ளது. பிரிக்ஸ் நாடுகள் இடையே தானிய வா்த்தக சந்தை தளத்தை நிறுவுவதுடன், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பையும் ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.