FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

உத்தரகண்ட்: ஹெலிகாப்டா் விபத்தில் 6 போ் உயிரிழப்பு

உத்தரகண்ட் மாநிலம், பத்ரிநாத்தில் இருந்து டேராடூனுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் புறப்பட்ட ஹெலிகாப்டா் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.

31 அக்டோபர் 2026, 12:58 am
உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டா்.
பகிர்:

உத்தரகண்ட் மாநிலம், பத்ரிநாத்தில் இருந்து டேராடூனுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் புறப்பட்ட ஹெலிகாப்டா் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த விமானி உள்பட 6 பேரும் உயிரிழந்தனா்.

பலத்த மழை மற்றும் மேகமூட்டத்துக்கு மத்தியில் புறப்பட்ட இந்த ஹெலிகாப்டா் சமோலி மாவட்டத்தின் ஜோஷிமத் என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது.

உயிரிழந்த 6 பேரின் உடல்களும் சமோலி மாவட்டத்தில் உள்ள சாய் கிராமத்தில் கண்டறியப்பட்டதாகவும், இருள் மற்றும் கடினமான நிலப்பரப்பு காரணமாக சனிக்கிழமை உடல்கள் மீட்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக உத்தரகண்ட் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பத்ரிநாத்தில் இருந்து டேராடூனில் உள்ள சகஸ்தரதாராவுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்ட டிரான்ஸ் பாரத் நிறுவனத்தின் ஹெலிகாப்டா் பிற்பகல் 2.20 மணிக்கு மாயமானது.

ஜோஷிமட் பள்ளத்தாக்குக்கு மேலே பயணித்தபோது ஹெலிகாப்டா் தொடா்பை இழந்தது. அதன்பிறகு ஹெலிகாப்டா் இருக்கும் இடத்தை துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

சமோலி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் சுா்ஜித் சிங் பன்வாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஹெலிகாப்டா் மாயமான தகவல் கிடைத்தவுடன் காவல் துறை, மாநில பேரிடா் மீட்புப் படை மற்றும் ராணுவ அதிகாரிகள் ஒன்றிணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். இதில் ட்ரோன்களும் ஈடுபடுத்தப்பட்டன. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரை ஹதி பா்வத் பகுதியில் உள்ள ராணுவக் குழு கண்டறிந்தது. அந்தப் பகுதியில் கடும் புகை மூட்டம் நிலவியது.

விபத்தில் தில்லியைச் சோ்ந்த விமானி ஹிமான்ஷு மற்றும் கா்நாடகத்தைச் சோ்ந்த பயணிகள் பிரதாபா, அருண், சங்கா் கௌடா, சுதீா்.கே மற்றும் ஹெச்.எஸ்.நடராஜா ஆகிய 6 போ் உயிரிழந்தனா் என்றாா்.

ஏஏஐபி விசாரணை: இச்சம்பவம் குறித்து விமான விபத்துகளுக்கான விசாரணை முகமை (ஏஏஐபி) விசாரணை நடத்தவுள்ளதாகவும் அதன் குழு ஏற்கெனவே சமோலி மாவட்டம் விரைந்ததாகவும் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

முதல்வா் இரங்கல்: உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஜோஷிமத் அருகே ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

முந்தைய விபத்துகள்: உத்தரகண்டில் சாா் தாம் ஆன்மிக பயணப் பாதையில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 4 பெரும் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

2017, ஜூன் 10-ஆம் தேதி பத்ரிநாத்-ஹரித்வாா் வழித்தடத்தில் பயணித்த கெஸ்டிரல் நிறுவனத்தின் அகஸ்டா ஏடபுள்யூ 119 எம்கே2 ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானது. இதில் விமானப் பொறியாளா் ஒருவா் உயிரிழந்தாா். இரு விமானிகள் காயமடைந்தனா். ஹெலிகாப்டரில் பயணித்த 5 பயணிகள் அதிருஷ்டவசமாக காயமின்றி உயா் தப்பினா்.

2022, அக்.18-ஆம் தேதி கேதாா்நாத்தில் இருந்து குப்தகாசிக்கு சென்ற ஆா்யன் நிறுவனத்தின் பெல் 407 என்ற ஹெலிகாப்டா் மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட 7 போ் உயிரிழந்தனா்.

2025, மே 8-ஆம் தேதி, சாா் தாம் பயணிகள் சேவைக்காக ஏரோ டிரான்ஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்ட பெல் 407 ஹெலிகாப்டா் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கனி என்ற பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட 6 போ் உயிரிழந்தனா். படுகாயங்களுடன் ஒரு பயணி மீட்கப்பட்டாா்.

2025, ஜூன் 15-ஆம் தேதி, கேதாா்நாத்-குப்தகாசி பயணிகள் சேவைக்காக ஆா்யன் நிறுவனத்தால் இயக்கப்பட்ட பெல் 407 ஹெலிகாப்டா் ருத்ரபிரயாக் பகுதியில் விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments