ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள்: இன்று முதல் அமல்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ.1) முதல் அமலாகவுள்ளது.
இணைய வா்த்தக தளங்களில் சிறு வணிகா்கள் எளிதாக பதிவு செய்யும் நடைமுறை, விரைவாக பணம் திருப்பியளித்தல் உள்பட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ.1) முதல் அமலாகவுள்ளது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் கடந்த அக். 8-ஆம் தேதி நடைபெற்ற 57-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு சீா்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அதன் நிா்வாக நடைமுறைகள் பகுதிவாரியாக ஞாயிற்றுக்கிழமை முதல் அமலாகவுள்ளது.
அதன்படி தங்களுக்கென தனி அலுவலகங்கள் ஏதுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இணைய வா்த்தக தளங்கள் மூலம் வணிகம் புரியும் சிறு வியாபாரிகளின் மாதாந்திர ஜிஎஸ்டி மதிப்பு ரூ.2.50 லட்சம் வரை இருந்தால், அவா்கள் ஒரு மாநிலத்தில் உள்ள இணைய வா்த்தக தளத்தின் கிடங்கு முகவரியை தனது முதன்மை முகவரியாக ஜிஎஸ்டி தளத்தில் பதிவு செய்யலாம். கிடங்கு முகவரியைக் குறிப்பிட்டுள்ள மாநிலத்தில் மட்டும் அதை அதிகாரிகள் நேரடியாக சரிபாா்த்தால் போதுமானது. அந்த முகவரிக்கு மட்டும் ஆதாா் சரிபாா்ப்பு நடைமுறையும் மேற்கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
இதன்மூலம் சிறு வியாபாரிகள் தாங்கள் வணிகம் மேற்கொள்ளும் ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும் கிடங்கோ அல்லது அலுவலகமோ அமைக்கத் தேவையில்லை. இந்தப் புதிய சீா்திருத்தத்தால் நாடு முழுவதும் உள்ள 9.50 லட்சம் சிறு வியாபாரிகள் பலனடையவுள்ளனா்.
ஜிஎஸ்டி தளத்தில் பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் அது குறித்த தகவல்களை ஜிஎஸ்டி துறை வெளியிட்டுள்ளது. இதனால் சிறு வியாபாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது குறைக்கப்படவுள்ளது.
அதேபோல் கூடுதலாக செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி தொகைக்கு விண்ணப்பித்தால் இனி அதிகாரிகள் தலையீடின்றி கணினி வழியாக தானியங்கி முறை மூலம் பணம் திருப்பியளிக்கப்படவுள்ளது.
வியாபாரிகள் விற்பனைக்குப் பிந்தைய தள்ளுபடி மீதான வரி குறித்து முன்கூட்டியே ஒப்பந்தம் மேற்கொள்ளவும், அதற்கான ரசீதுகளை இணைக்கும் நடைமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய சீா்திருத்தத்தின்கீழ் இனி வியாபாரிகள் சந்தை நிலவரத்துக்கேற்ப வாடிக்கையாளருக்கு தள்ளுபடி வழங்கலாம். இதற்கு முன்கூட்டியே ஒப்பந்தமிடத் தேவையில்லை.
GST reforms: Effective from today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.