அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்!
அயோத்தி ராமர் கோயிலின் முதல் சிஇஓ-வாக ஓய்வுபெற்ற விமானப் படை அதிகாரி ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...
அயோத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளைக்கு முதல் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு சுமார் 5,585 பேர் விண்ணப்பம் அளித்த நிலையில், அதில் ஒருவரைத் தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி பெர்மோத் கோலி உள்பட மூன்று பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் முழு நேர தலைமை செயல் அதிகாரியாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக, இன்று (செப். 2) அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, அயோத்தி கோயில் அறக்கட்டளையின் மிக உயர்ந்த பதவியான தலைமைச் செயல் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜிதேந்திர மிஸ்ரா, அறக்கட்டளையின் அதிகாரிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களை மேற்பார்வையிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அயோத்தி ராமர் கோயில் காணிக்கைகளில் கையாடல் நடைபெற்றதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, நிர்வாக மற்றும் நிதி நடைமுறைகளை வலுப்படுத்தும் முயற்சியாக அறக்கட்டளைக்கு முழு நேர தலைமைச் செயல் அதிகாரி பதவி உருவாக்கப்பட்டது.
இதையடுத்து, செய்யறிவு மூலமான பரிசோதனை, நேரடி மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் டெல்லி-என்சிஆர், புணே மற்றும் சம்பல்பூரில் உள்ள குழுக்கள் பரிசீலித்த 16 இறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களுக்கு நடத்தப்பட்ட இணையவழி மற்றும் நேருக்கு நேர் நேர்காணல்கள் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்ற 40 ஆண்டுகள் அனுபவமுள்ள ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, இந்தப் பதவிக்கு குறைந்தது 20 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் பெற்ற 50 - 70 வயதுக்குட்பட்ட மூத்த அதிகாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும், அவர்கள் ராமர் மீது பக்தி கொண்டு இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களாகவும், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத் தெரிந்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Retired Air Marshal Jitendra Mishra has been appointed as the first CEO of the Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust in Ayodhya.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.