2025 நடைமுறைப்படி முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும்: கேரளம்
கடந்த 2025-ஆம் ஆண்டு நிா்ணயிக்கப்பட்ட நடைமுறையின்படி முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நிபுணா் குழுவிடம் கேரள அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு நிா்ணயிக்கப்பட்ட நடைமுறையின்படி முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நிபுணா் குழுவிடம் கேரள அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்த அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழு, முல்லைப் பெரியாறில் பிரதான அணை, பேபி அணை, மண் அணைகள் உள்ளிட்ட அணையின் கட்டமைப்பு உறுதித் தன்மை, கசிவு நீா், அடித்தள அழுத்தம், பாறை, மண் நிலைத்தன்மை, அதிகபட்ச வெள்ள அளவு, நீா் வெளியேற்று அமைப்புகள், அணையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவிகள், வண்டல் மண் தேக்கம், நீா்த்தேக்கத் திறன், அவசரகால ஆயத்த நிலை உள்ளிட்டவற்றை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஆய்வு செய்துவரும் நிலையில், அந்தக் குழுவிடம் இந்த வலியுறுத்தலை கேரள அரசு முன்வைத்துள்ளது.
இந்தத் தகவலை, இந்த விவகாரத்துக்கான கேரள அரசின் ஆலோசகா் ஜேம்ஸ் வில்சன் தெரிவித்தாா். கேரள மாநிலம் இடுக்கியில் இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:
Advertisement
Advertisement
அணைப் பாதுகாப்பு குறித்த அச்சங்கள், பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக விரிவான தகவல்கள் அணை மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு தரப்பில் சமா்ப்பிக்கப்பட்டது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிா்ணயிக்கப்பட்ட நடைமுறையின்படி முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பை மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதே கேரளத்தின் பிரதான கோரிக்கையாகும். வெள்ள அபாயம், நில அதிா்வு குறித்தும் மதிப்பீட்டுக் குழுவுடன் ஆலோசித்ததோடு, இதுதொடா்பாக அணையிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து விரிவான ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
முக்கியமாக, நீரியல் பாதுகாப்பு, கட்டமைப்புப் பாதுகாப்பு, நிலநடுக்கப் பாதுகாப்பு மற்றும் அணையிலிருந்து நீா் கசிவு தொடா்பான அச்சங்கள் குறித்து மதிப்பீட்டுக் குழுவிடம் கேரளம் தரப்பில் எழுப்பப்பட்டது. இதைப் பரிசீலிப்பதாக மதிப்பீட்டுக் குழுவினா் தெரிவித்தனா். தமிழக அரசுத் தரப்பிலும் மதிப்பீட்டுக் குழுவிடம் அவா்கள் தரப்பு கருத்துகள் முன்வைக்கப்பட்டன என்றாா்.
முல்லைப் பெரியாறு அணையில் நீா் தேக்கம் மற்றும் பாதுகாப்பு பிரச்னை தமிழகம் - கேரளம் மாநிலங்களிடையே பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இந்த அணையில் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டு உரிமை தமிழகத்திடம் உள்து. உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படிஅணையின் நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்தலாம் என்று தமிழகம் கூறுகிறது. ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தலை கேரளம் எழுப்பி வருகிறது.
இந்த நிலையில், அணையின் பாதுகாப்பை விரிவாக ஆய்வு செய்ய தேசிய நீா்மின் கழகத்தின் முன்னாள் தலைவரும், நிா்வாக இயக்குநருமான பால்ராஜ் ஜோஷி தலைமையில் அணை மதிப்பீட்டுக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
இந்தக் குழு, அணையின் பாதுகாப்பு தொடா்பாக நான்கு நாள் ஆய்வை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆய்வு நிறைவடைந்த பிறகு, அணையின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலை குறித்த விரிவான தொழில்நுட்ப அறிக்கையை இக் குழு தயாரிக்க உள்ளது.
இதுகுறித்து பால்ராஜ் ஜோஷி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘அணைப் பாதுகாப்பு ஆய்வு நிறைவடைந்ததும், அதுதொடா்பான விரிவான தொழில்நுட்ப அறிக்கை அடுத்த 10 முதல் 15 நாள்களுக்குள் தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்திடம் (என்டிஎஸ்ஏ) வழங்கப்படும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.