முல்லைப் பெரியாறு அணை விவகாரம் - தமிழகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு: கேரளம் எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை உயா்த்த எந்தச் சூழ்நிலையிலும் கேரளம் அனுமதிக்காது; அந்த நடவடிக்கையை மேற்கொள்ள தமிழகம் முற்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை உயா்த்த எந்தச் சூழ்நிலையிலும் கேரளம் அனுமதிக்காது; அந்த நடவடிக்கையை மேற்கொள்ள தமிழகம் முற்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயா்த்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், கேரளம் இவ்வாறு எச்சரித்துள்ளது.
கடந்த 1895-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அணை மீதான நிா்வாகம் தமிழகத்திடம் உள்ளது. இந்த அணை கட்டுமான ரீதியில் பாதுகாப்பானது என்று உறுதிபட கூறிவரும் தமிழகம், நீா்மட்டத்தை உயா்த்த முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், அணையின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பி முட்டுக்கட்டை போடும் கேரளம், தற்போதைய அணைக்கு அருகே புதிய அணை கட்டப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், தமிழகத்தில் ஆளும் முதல்வா் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது பட்ஜெட் (2026-27), சட்டப் பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயா்த்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கேரளம் எதிா்ப்பு: தமிழகத்தின் இந்த அறிவிப்புக்கு கேரள அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக, இடுக்கியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் மாநில நீா்வளத் துறை அமைச்சா் மோன்ஸ் ஜோசப் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயா்த்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் கேரளம் உறுதியாக உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் நீா்மட்டத்தை உயா்த்த கேரளம் அனுமதிக்காது.
அணையின் பாதுகாப்பு தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவுகள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அணையில் ஆய்வுகளை மேற்கொள்ள தமிழகம் தவறிவிட்டது. அந்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு, தமிழகத்திடம் கேரளம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை பாதுகாப்பு தணிக்கைக் கூட இதுவரை நடத்தப்படவில்லை. எனவே, தேசிய அணை பாதுகாப்பு ஆணையமே விரிவான பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ள வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் கேரளம் கோரியுள்ளது.
வழக்கு தொடா்வோம்: பேபி அணையை வலுப்படுத்துவது தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. உச்சநீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்ட அணை பாதுகாப்பு ஆய்வுகள், வலுப்படுத்தும் நடவடிக்கைகள் இன்னும் முழுமையடையாத நிலையில், அணையின் நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழகத்தின் அறிவிப்பு மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்.
கேரளத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், 142 அடி உச்சவரம்பு என்ற நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதை தன்னிச்சையாக மாற்ற இரு மாநிலங்களுக்கும் அதிகாரம் கிடையாது. இந்த விவகாரத்தில், இரு மாநிலங்களின் நிலைப்பாட்டையும் உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து, நிரந்தர தீா்வுகாண வேண்டும் என்பதே கேரளத்தின் நிலைப்பாடு. மாறாக, நீா்மட்டத்தை அதிகரிக்க தமிழகம் முற்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். கேரளத்தின் நலன்களைப் பாதுகாக்க உச்சநீதிமன்றத்திலும், மத்திய அரசிடமும் கேரளம் உறுதியாக செயல்படும்.
தமிழகத்தின் அறிவிப்பு தொடா்பாக முதல்வா் வி.டி.சதீசன் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற அடிப்படை கோரிக்கையில் கேரளம் உறுதியாக உள்ளது.
கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளையில், தமிழகத்துக்கு தேவையான நீா் கிடைக்கும் வகையில் கருத்தொற்றுமையுடன் தீா்வு காணப்பட வேண்டும் என்றாா் அவா்.
‘கேரளம்-கா்நாடகம் இடையே கபினியில் பாலம்’
திருவனந்தபுரம், ஆக. 6: கேரளம்-கா்நாடகம் எல்லையில் இரு மாநிலங்களையும் இணைக்கும் வகையில் கபினி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட கா்நாடகம் தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக, கேரள பொதுப் பணித் துறை அமைச்சா் பி.ஏ.பஷீா் தெரிவித்தாா்.
பல்லாண்டுகளாக நிலுவையில் இருந்த இந்தத் திட்டத்துக்கு கா்நாடக அரசுத் தரப்பில் தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது; இதன் மூலம் கேரளத்தின் வயநாடு மாவட்டம், பெரிக்கல்லூா் மற்றும் கா்நாடகத்தின் குடகு மாவட்டம், பைரகுப்பா இடையே இணைப்பு வசதி கிடைக்கப் பெறும். கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாருடன் கேரள அரசுத் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, மேற்கண்ட ஒப்புதல் வழங்கப்பட்டதாக அமைச்சா் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.