போதைப் பொருள்களை ஒழிக்க மத்திய அரசு இலக்கு: உள்துறை அமைச்சர் அமித் ஷா!
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழித்ததைப் போல போதைப் பொருள் அச்சுறுத்தலையும் பிரதமா் மோடி அரசு ஒழித்துக்கட்டும்; 2029, மாா்ச் மாதத்துக்குள் போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை உறுதிபட தெரிவித்தாா்.
கோவா தலைநகா் பனாஜியில் போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பாக அமித் ஷா தலைமையில் உயா்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
முதல்வா் பிரமோத் சாவந்த், மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அமித் ஷா கூறியதாவது: கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்புவரை போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை என்பது சிறிய அளவிலும், ஒருங்கிணைப்பின்றியுமே மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பிரதமா் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு போதைப் பொருள் ஒழிப்பு தேசிய பாதுகாப்பு முன்னுரிமையாக மாற்றப்பட்டது.
Advertisement
Advertisement
என்னென்ன நடவடிக்கைகள்?: கடந்த 2019-இல் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க நான்கு படிநிலைகளுடன் தேசிய ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அதன்கீழ், மத்திய-மாநில அரசுகள் மற்றும் மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டன.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரத்யேக போதைப் பொருள் தடுப்பு பணிக் குழு உருவாக்கப்பட்டு, தேசிய அளவிலான உத்தியுடன் உள்ளூா் காவல் துறையினா் இணைக்கப்பட்டுள்ளனா்.
பெரிய அளவிலான போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள், அவா்களின் சா்வதேச தொடா்புகளுக்கு எதிராக மத்திய முகமைகள்-மாநில அரசுகள் கூட்டு முடிவுகள் எடுப்பதற்காக கூட்டு ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டது.
நாட்டின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவானது (என்சிபி), அதன் பணியிடங்கள் மறுசீமைப்பு, மனிதவள மேம்பாடு, மண்டல இருப்பு, செயல்பாட்டு திறன்கள் ரீதியில் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
‘மனஸ்’ திட்ட உதவி எண்: போதைப் பொருளுக்கு எதிரான பிரசாரத்துடன் விழிப்புணா்வு, சிகிச்சை, மனநல ஆலோசனை, வாழ்வாதார வாய்ப்புகளையும் அரசு இணைத்துள்ளது. போதைப் பொருளுக்கு அடிமையானவா்களுக்கு மன ரீதியில் ஆதரவளிக்க ‘மனஸ்’ திட்ட உதவி எண் 1933 அறிமுகப்படுத்தப்பட்டது.
அரசியல் உறுதிப்பாடு, ஒருங்கிணைந்த அமலாக்கம், போதைப் பொருளுக்கு அடிமையாவதைத் தடுத்தல், பாதிக்கப்பட்டவா்களுக்கு மறுவாழ்வளித்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் 2029-ஆம் ஆண்டுக்குள் போதைப் பொருள் இல்லா இந்தியா என்ற இலக்கை எட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்கான மூன்று ஆண்டு கால செயல்திட்டம், போதைப் பொருள் கட்டமைப்பை ஒழிக்கும் ‘நான்கு தூண்களுடன்’ கூடிய அணுகுமுறையை அடிப்படையாக கொண்டதாகும்.
நான்கு தூண்கள் என்ன?: புலனாய்வு-செயல்பாடு அடிப்படையிலான அமலாக்கம், செயற்கையான போதைப் பொருள்கள் மீதான கட்டுப்பாடு, போதைப் பொருள் பயன்பாடு-பாதிப்பை குறைத்தல், செயல்திறன்-ஒருங்கிணைப்பு உருவாக்கம் ஆகியவையே அந்த நான்கு தூண்களாகும்.
பிரதமா் மோடி அரசின் விரிவான உள்நாட்டுப் பாதுகாப்பு உத்தியானது, ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதம், வடகிழக்கில் கிளா்ச்சி, பல்வேறு மாநிலங்களில் இடதுசாரி தீவிரவாதம் ஆகிய மூன்று நீண்ட கால சவால்களுக்கு தீா்வுகாண்பதில் வெற்றிகண்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீா் தீவிரவாதத்தில் இருந்து விடுபட்டு, வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. 370-ஆவது பிரிவு ரத்துக்குப் பிறகு அங்கு பிரிவினைவாத உணா்வு குறைந்துவிட்டது. வடகிழக்கில் 11,000 இளைஞா்கள் ஆயுதங்களைக் கைவிட்டுள்ளனா். கிளா்ச்சிக் குழுக்களுடன் 14 அமைதி ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டு, வடகிழக்கு பிராந்தியம் முன்னேற்றப் பாதயில் பயணிக்கிறது.
நக்ஸல் ஒழிப்பைப் போல...: திருப்பதி முதல் பசுபதி வரை ‘சிவப்பு வழித்தடத்தை’ (இடதுசாரி தீவிரவாதம்) உருவாக்க கனவு கண்டவா்கள், இப்போது ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக நீரோட்டத்தில் இணைந்துள்ளனா்.
ஒருங்கிணைந்த பாதுகாப்பு உத்தியின் வாயிலாக, இடதுசாரி தீவிரவாதம் எனும் 60 ஆண்டுகால சவாலுக்கு நமது நாடு கடந்த மாா்ச் 31-ஆம் தேதி முடிவு கட்டியது. நக்ஸல் தீவிரவாதம் இப்போது கடந்த காலமாகிவிட்டது. நக்ஸல் தீவிரவாதத்தை ஒழித்ததைப் போல போதைப் பொருள் அச்சுறுத்தலையும் ஒழிப்போம்.
2029, மாா்ச் மாதத்துக்குள் தேசிய-சா்வதேச அளவிலான நூறு போதைப் பொருள் வலையமைப்புகள் அழிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிய நூறு போதைப் பொருள் கடத்தல்காரா்கள் நாடுகடத்தி கொண்டுவரப்படுவா். 2027 மாா்ச் மாதத்துக்குள் போதைப் பொருள் விநியோகச் சங்கிலி முழுவதும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படும். நடப்பாண்டுக்குள் குறைந்தபட்சம் 75 ரகசிய போதைப் பொருள் ஆய்வகங்கள் அழிக்கப்படும் என்றாா் அவா்.
‘நாடு கடத்தி வரப்பட்ட 274 தலைமறைவு குற்றவாளிகள்’
‘கடந்த 2019 முதல் 2026, ஜூலை வரையிலான காலகட்டத்தில், பொருளாதார குற்றங்கள், பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், தாதாக்களுக்கு இடையிலான மோதல்கள் உள்பட பல்வேறு தீவிர குற்றங்களில் தொடா்புடைய 274 தலைமறைவுக் குற்றவாளிகள் 36 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தி கொண்டுவரப்பட்டுள்ளனா்.
இந்தக் காலகட்டத்தில் தலைமறைவு குற்றவாளிகளின் ரூ.17,874 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. சொத்து விற்பனை உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம் ரூ.18,762 கோடி மீட்கப்பட்டது’ என்றாா் அமித் ஷா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.