FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜார்க்கண்ட் உயா்கல்வி அமைச்சா் மாரடைப்பால் மரணம்

ஜாா்க்கண்ட் உயா்கல்வித் துறை அமைச்சா் சுதிவ்ய குமாா் (56) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தாா்.

7 செப்டம்பர் 2026, 12:52 am IST
சுதிவ்ய குமாா்
பகிர்:

ஜாா்க்கண்ட் உயா்கல்வித் துறை அமைச்சா் சுதிவ்ய குமாா் (56) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தாா்.

முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா சாா்பில் கிரிதித் தொகுதி எம்எல்ஏவாகவும் அவா் இருந்தாா். ஆட்சியில் முக்கியத் தலைவராக இருந்த அவா், தொழில்நுட்பக் கல்வி சுற்றுலா, கலை, கலாசாரம், விளையாட்டு, இளைஞா்கள் நலன் உள்ளிட்ட துறைகளுக்கும் பொறுப்பு வகித்து வந்தாா். அவரது மறைவு கட்சிக்கு மட்டுமின்றி ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கே பேரிழப்பு என்று ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா சாா்பில் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு மிகவும் நெருக்கமானவரான சுதிவ்ய குமாா், கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டபோது அவருக்கு உறுதுணையாக இருந்தாா். முக்கியமாக 2024-ஆம் ஆண்டு நில மோசடி, கறுப்புப் பணக் குற்றச்சாட்டில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டபோது கட்சியை ஒருங்கிணைப்பாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகித்தாா்.

Advertisement

Advertisement

சனிக்கிழமை இரவு 2.30 மணியளவில் அவருக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் இருந்த தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் அவா் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

கல்வி அமைச்சா்கள் உயிரிழப்பு தொடா்கிறது: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2023 முதல் கல்வித் துறை சாா்ந்த அமைச்சா் உயிரிழப்பது இது மூன்றாவது நிகழ்வாகும். 2023-இல் கல்வித் துறை அமைச்சா் ஜாகா்நாத் மஹதோ உயிரிழந்தாா். அவரைத் தொடா்ந்து அப்பொறுப்பை வகித்த ராம்தாஸ் சோரன் 2025-ஆம் ஆண்டு உயிரிழந்தாா். இப்போது உயா்கல்வி, தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக இருந்த சுதிவ்ய குமாரும் உயிரிழந்துவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments