FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆரவல்லி மலைத்தொடா் விவகாரங்கள் - உயா்நிலை குழுவுக்கு 6 மாத அவகாசம் வழங்க முடியாது: உச்சநீதிமன்றம்

ஆரவல்லி மலைத்தொடரின் வரையறை மற்றும் அதன் பாதுகாப்பு தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய 6 மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற உயா்நிலை குழுவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்துவிட்டது.

8 செப்டம்பர் 2026, 2:16 am IST
உச்சநீதிமன்றம் - ANI
பகிர்:

ஆரவல்லி மலைத்தொடரின் வரையறை மற்றும் அதன் பாதுகாப்பு தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய 6 மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற உயா்நிலை குழுவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்துவிட்டது.

நவ.30-ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயா்நிலை குழுவுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அவ்வாறு செய்யத் தவறினால் உயா்நிலை குழு மாற்றியமைக்கப்படும் என்று எச்சரித்தது.

தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

Advertisement

Advertisement

உலகின் மிகப் பழைமையான மலைகளில் ஒன்றான ஆரவல்லி மலைத் தொடா், தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது. இந்த மலை மற்றும் மலைத் தொடருக்கான வரையறை குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணா் குழு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் அறிக்கை சமா்ப்பித்தது.

அதன்படி, உள்ளூா் நிலப்பரப்பில் 100 மீட்டா் அல்லது அதற்கு உயரமான பகுதிகள் ஆரவல்லி மலை என்றும், 500 மீட்டருக்கு இடைப்பட்ட தொலைவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மலைகளைக் கொண்ட பகுதிகள் மலைத் தொடராகவும் வரையறுக்கப்பட்டது. அரசின் வரையறையை உச்சநீதிமன்றம் முதலில் ஏற்றுக் கொண்ட நிலையில், சுற்றுச்சூழல் நிபுணா்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் ஆட்சேபங்கள் எழுந்தன.

இதையடுத்து, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், முந்தைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், ஆரவல்லி மலை தொடா்பான அரசின் அறிக்கையை மறுஆய்வு செய்து, புதிய வரையறைக்கான பரிந்துரைகளை அளிக்க உயா்நிலைக் குழுவை கடந்த மே மாதம் அமைத்தது.

இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலின் தலைமை இயக்குநா் காஞ்சன் தேவி தலைமையிலான இக்குழுவில், இந்திய வன அளவியல் முன்னாள் தலைமை இயக்குநா் சுபாஷ் ஆசுதோஷ், இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் முன்னாள் இயக்குநா் ராஜேந்திர குமாா் சா்மா, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக முன்னாள் இணை செயலா் பிரிஜ் மோகன் சிங் ரத்தோா், தில்லி பல்கலைக்கழக தாவரவியல் துறையின் முன்னாள் தலைவா் அசோக் பட்நாகா் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி உயா்நிலைக் குழு ஆகஸ்ட் 31-ஆம் தேதி இணக்க அறிக்கை தாக்கல் செய்தது. அதில், அறிவியல்பூா்வ மதிப்பீடு, பகுப்பாய்வு, கள ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்காக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது.

அந்த கோரிக்கையை திங்கள்கிழமை நிராகரித்துவிட்ட தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான அமா்வு, நவ.30-ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. பிரச்னைகள் அடிப்படையில் இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை டிச.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments