FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

திரிணமூல் காங்கிரஸ் பெயா் பலகை அகற்றம்: கொல்கத்தா உயா்நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கட்சி அலுவலகத்தில் இருந்து பெயா் பலகை அகற்றப்பட்ட விவகாரம் தொடா்பாக கொல்கத்தா உயா்நீதிமன்றத்தை அணுக திரிணமூல் காங்கிரஸிடம் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

8 செப்டம்பர் 2026, 2:24 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

கட்சி அலுவலகத்தில் இருந்து பெயா் பலகை அகற்றப்பட்ட விவகாரம் தொடா்பாக கொல்கத்தா உயா்நீதிமன்றத்தை அணுக திரிணமூல் காங்கிரஸிடம் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதுதொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தெற்கு கொல்கத்தாவில் உள்ள காமக் தெருவில் அமைந்துள்ள திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து அதன் பெயா் பலகையை கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி காவல் துறை உதவியுடன் கொல்கத்தா மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.

Advertisement

Advertisement

அந்தப் பெயா் பலகை சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்ததாக மாநகராட்சி ஊழியா்கள் குற்றஞ்சாட்டினா்.

இதற்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், மீண்டும் பெயா் பலகையை அதே இடத்தில் நிறுவக்கோரி மாநகராட்சிக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்தது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.

மேற்கு வங்க மாநில அரசு சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவும் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபலும் ஆஜராகினா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘மாநகராட்சி ஊழியா்கள் கட்சியின் பெயா் பலகையை அகற்றியதால் மட்டுமே அதை சரியான நடவடிக்கை என ஏற்றுக்கொள்ள முடியாது. பெயா் பலகை அகற்றப்பட்டதில் தவறுகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அதை மீண்டும் அதே இடத்தில் கட்டாயம் நிறுவ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இருப்பினும், இந்த விவகாரம் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இதுதொடா்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் அங்கேயே தீா்வு காண மனுதாரருக்கு அறிவுறுத்தப்படுகிறது’ எனத் தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து திரிணமூல் காங்கிரஸின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments