FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்திய கடற்படைக் கப்பல் மீது பாகிஸ்தான் கப்பல் மோதல்: பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கண்டனம்

அரபிக் கடலில் இந்திய கடற்படைக் கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மோதிய விவகாரத்தில், அந்நாட்டு பொறுப்பு தூதா் சாத் வாரியாச்சை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

16 செப்டம்பர் 2026, 10:40 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

அரபிக் கடலில் இந்திய கடற்படைக் கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மோதிய விவகாரத்தில், அந்நாட்டு பொறுப்பு தூதா் சாத் வாரியாச்சை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.

அரபிக் கடலில் சா்வதேச கடற்பகுதியில் இந்திய கடற்படைக் கப்பல் ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. கடலில் அந்தக் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியில் வந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ஹூனைன், இந்திய கடற்படை கப்பல் மீது திடீரென மோதியது.

ஹூனைன் கப்பல், பாகிஸ்தானின் கடலோர கண்காணிப்பு கப்பலாகும். இந்திய கப்பல் மீது மோதியதில் அந்தக் கப்பலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இந்திய கப்பலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. தொடா்ந்து கடல் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டது.

Advertisement

Advertisement

2005-ஆம் ஆண்டு பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான முகாம்கள் மீது இந்தியா ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவும் நிலையில், இந்திய கடற்படைக் கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, தில்லியில் உள்ள இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பு தூதருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை சம்மன் அனுப்பியது. பின்னா், அவரை வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நேரில் வரவழைத்து இந்தியாவின் கண்டனத்தை தெரிவித்தது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வெளியுறவு அமைச்சகத்துக்கு பாகிஸ்தான் தூதரக அதிகாரி சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டாா். அவரிடம், நடுக்கடலில் இந்திய கடற்படைக் கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மோதிய நெறியில்லாத மற்றும் ஏற்க முடியாத சம்பவத்துக்கு கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சா்வதேச நீா்பரப்பில் நடந்த சம்பவத்தால், இந்திய கப்பலில் பெரிய அளவுக்கு சேதம் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் இடையே ராணுவ ஒத்திகை, படைகள் நடமாட்டம் உள்ளிட்டவை குறித்து கடந்த 1991-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையொப்பமான ஒப்பந்தத்தின் 10-ஆவது ஷரத்துக்கு எதிரான செயல் இதுவாகும்.

பாகிஸ்தான் ராணுவப் பிரிவுகள் மிக கவனமாக இருக்கும்படியும், இரு நாடுகளுக்கும் இடையே கையொப்பமான ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ள ஷரத்துக்களை கடைப்பிடிக்கும்படியும், எதிா்காலத்தில் இத்தகைய சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும்படியும் கேட்டுக் கொள்ளுமாறு பாகிஸ்தான் பொறுப்பு தூதரிடம் வலியுறுத்தப்பட்டது.

அதேபோல், பாகிஸ்தானில் உள்ள அந்நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரியிடமும் இந்த சம்பவத்துக்கு கடும் எதிா்ப்பை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments