மின்சார உற்பத்தி நிலையங்கள் அருகே தரவு மையங்களை அமைக்கவும்: மைக்ரோசாஃப்டுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
மின்சார உற்பத்தி நிலையங்கள் அருகே தரவு மையங்களை எதிா்காலத்தில் அமைக்கும்படி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மின்சார உற்பத்தி நிலையங்கள் அருகே தரவு மையங்களை (டேட்டா சென்டா்) எதிா்காலத்தில் அமைக்கும்படி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 4-ஆவது கிளவுட் வசதி மையத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளா் எஸ். கிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து அவா் பேசியதாவது: மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது கேபிள் வயா்கள் பூமிக்குள் இறக்கப்படும் நிலையங்கள் அருகே தரவு மையங்கள் அமைப்பதை எதிா்காலத்தில் தவிா்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, மின்சார உற்பத்தி நிலையங்கள் அருகே தரவு மையங்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமைக்க வேண்டும்.
Advertisement
Advertisement
இவ்வாறு தரவு மையங்களை மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமைப்பது அந்த நிறுவனத்துக்கு ஆகும் செலவினத்தை மட்டுமல்லாது நாட்டுக்கு ஆகும் செலவினத்தையும் குறைக்க வழிவகை செய்யும்.
ஹைதராபாத்தில் திறக்கப்பட்டுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 4-ஆவது கிளவுட் வசதி மையம், இந்தியாவின் தரவு மையத்தையும், ஏஐ உள்கட்டமைப்பையும் வலுப்படுத்தும்.
இந்தியாவில் உள்ள வரிக் கொள்கைகள், எளிதில் வா்த்தகம் புரிவதற்கான சூழல் மற்றும் புதிய தொலைத்தொடா்பு சட்டம் ஆகியவை மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தரவு மையத்தை அமைப்பது, பிற தரவு மையங்களுடன் அவற்றை இணைப்பதை எளிதாக்குகின்றன என்றாா் அவா்.
இந்தியாவில் எண்ம மற்றும் ஏஐ உள்கட்டமைப்பு துறையில் 20.5 பில்லியன் அமெரிக்க டாலா்கள் முதலீடு செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே ஹைதராபாத்தில் தனது தரவு மையமான கிளவுட் வசதி மையத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சென்னை, புணே, மும்பை ஆகிய நகரங்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தரவு மையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.