பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்
மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் ராகுல் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...
பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகச் செயலில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையின் போது, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை ஆட்சேபனை தெரிவித்தும், அவர்களின் கருத்தை பொருட்படுத்தாமல், சட்டத்துக்கு புறம்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
”வாக்குத் திருட்டு என்பது இந்திய மக்களுக்கு எதிரான ஒரு குற்றம்; அது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை இணைந்து இந்த தேசத்துரோகச் செயலில் ஈடுபட்டுள்ளன. நீதி நிலைநாட்டப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”பல ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சியும் பல்வேறு எதிர்க்கட்சிகளும் நாட்டில் நடைபெறும் தேர்தல்களின் நேர்மைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து சந்தேகத்தன்மையுடனேயே இருக்கின்றன. நாங்கள் கேள்விகள் எழுப்பியபோதெல்லாம், அவற்றுக்கு பதிலளிக்காமல் கேலி செய்து நிராகரித்தன. ஆணையத்தின் கதவுகள் எங்களுக்கு மூடப்பட்டன.
இன்று, அதே விவகாரம் தேர்தல் ஆணையத்துக்குள்ளிருந்தே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் 14 முறை எழுத்துப்பூர்வமாகத் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளனர். 'படிவம் 6'-ஐ தவறாகப் பயன்படுத்துதல், மென்பொருளைத் தவறாகப் பயன்படுத்துதல், வாக்காளர் பட்டியல்களில் முறைகேடு செய்தல், வெளிப்படைத்தன்மையற்ற முடிவுகள் எடுத்தல் - இவை அனைத்தும் இப்போது நாட்டின் முன் வெளிப்படையாகத் தெரியவந்துள்ளன.
அப்படியிருக்க, இந்த ஆட்சேபனைகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் என்ன செய்தார்? 'எஸ்.ஐ.ஆர்' செயல்முறையின் முதல் மூன்று கட்டங்களில், 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து 13.8 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
ராகுல் காந்தி, தொடர்ந்து நாட்டின் முன் அம்பலப்படுத்தி வரும் வாக்குத் திருட்டு மற்றும் எஸ்.ஐ.ஆர் தொடர்பான கேள்விகள் இன்று உண்மையானவை என்று நிரூபிக்கப்பட்டு வருகின்றன. இது ஜனநாயகத்தைச் சிதைக்கும் செயலாகும்.
கடந்த 2026 ஏப்ரல் 24 அன்று, 73 எதிர்க்கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்குவதற்கான புதிய தீர்மானத்தை கொண்டுவந்தனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வரவில்லை. நிலுவையில் உள்ள அந்த தீர்மானம் குறித்து, மாநிலங்களவைத் தலைவர் இப்போது முடிவெடுப்பாரா?
இன்று கேள்வி வாக்குத் திருட்டு பற்றியது மட்டுமல்ல; இந்தியாவின் ஜனநாயகத்தையும் அதன் நிறுவனங்களையும் அரசாங்கம் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது பற்றியது. அவற்றின் சுதந்திரம் மற்றும் நடுநிலைத்தன்மை பற்றியது. தேர்தல் ஆணையத்துக்குள்ளிருந்து வெளிவரும் இந்த தகவல்கள், மோடி அரசாங்கம் மற்றும் பாஜக - ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் பங்கு குறித்து மிகக் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.
பிரதமர் மோடி இதற்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும்.
நாட்டு மக்களிடமிருந்து ஜனநாயகத்தைப் பறிக்கத் திட்டமிடுபவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
BJP, RSS and ECI who organised it have committed an act of treason - Rahul Gandhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.