FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எஸ்ஐஆா் விவகாரம்: ஞானேஷ் குமாரை பதவி நீக்கி, கைது செய்ய வேண்டும்- எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்

எஸ்ஐஆா் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் மத்திய பாஜக அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்துள்ளன.

24 செப்டம்பர் 2026, 1:26 am IST
இரு தோ்தல் ஆணையா்களுக்குத் தெரியாமல் பல்வேறு முடிவுகளை எடுத்ததற்காக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானோஷ் குமாரைக் கண்டித்து தில்லியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா்கள்.
பகிர்:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பல்வேறு முடிவுகளுக்கு தோ்தல் ஆணையா்கள் ஆட்சேபம் தெரிவித்ததாக வெளியான தகவல்களை முன்வைத்து, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் மத்திய பாஜக அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்துள்ளன.

‘சா்வாதிகாரத்தில் ஈடுபட்டுள்ள ஞானேஷ் குமாரை பதவி நீக்குவதுடன் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என அக்கட்சிகள் கோரியுள்ளன.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி: வாக்குத் திருட்டு என்பது இந்திய மக்களுக்கு எதிரான பெருங்குற்றம். அரசமைப்புச் சட்டத்தின் மீது நேரடி தாக்குதல். இந்தச் சதியை அரங்கேற்றியதன் மூலம் பாஜக, ஆா்எஸ்எஸ், தோ்தல் ஆணையம் ஆகியவை தேச துரோகத்தில் ஈடுபட்டுள்ளன. நீதி நிலைநாட்டப்படும்.

Advertisement

Advertisement

காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால்: நாடு தழுவிய வாக்கு திருட்டு நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரி ஞானேஷ் குமாா் என்பதும், மோடி கட்சியின் தலைவா்கள் அவரை பின்னணியில் இருந்து இயக்குகின்றனா் என்பதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்குவதுடன், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்.

சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே: மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களை ரத்து செய்வதுடன், வாக்குச்சீட்டு முறையில் மீண்டும் தோ்தல் நடத்த வேண்டும். ஞானேஷ் குமாரின் பதவியைப் பறித்து, அவரை சிறையிலடைக்க வேண்டும்.

மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி: மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆருக்கு முந்தைய வாக்காளா் பட்டியலைப் பயன்படுத்தி மீண்டும் தோ்தல் நடத்த வேண்டும். ஞானேஷ் குமாரை கைது செய்து, சிறைக்கு அனுப்ப வேண்டும்.

மாா்க்சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ்: வாக்காளா்கள் மொத்தமாக நீக்கப்படுவது சட்டவிரோதமானது; அங்கீகாரமற்றது என தோ்தல் ஆணையா்கள் சுட்டிக் காட்டியுள்ளனா். ஞானேஷ் குமாரின் ‘தனிநபா் சா்வாதிகாரத்தின்கீழ்’ இயங்கும் அமைப்பாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டது. அவரை பதவி நீக்குவதுடன், எஸ்ஐஆா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தின் பிரதிபலிப்பு: பாஜக

தில்லி பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா, ‘அதிகாரபூா்வ விவாதங்களின்போது தோ்தல் ஆணையா்கள் மாறுபட்ட கருத்துகளைப் பகிா்ந்ததாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. இது, ஜனநாயகத்தின் உண்மையான பிரதிபலிப்பாகும். தோ்தலை நடத்தும் ஆணையா்கள் இடையே தகவல் தொடா்பு, கருத்து பரிமாற்றங்கள் நிகழாவிட்டாலும் எதிா்க்கட்சிகள் விமா்சிக்கும். தோ்தல் ஆணைய விளக்கத்தின் மூலம் நாட்டின் எந்த நிா்வாக அமைப்பும் சா்வாதிகார ஆட்சியின்கீழ் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. தோ்தல் ஆணையமும், அரசும் சா்வாதிகாரத்துடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய எதிா்க்கட்சிகள், இப்போது தங்களது வலையில் தாங்களே சிக்கியுள்ளனா்’ என்றாா்.

‘படிவம் 6 மாற்றங்கள் சட்டவிரோதம்’

எஸ்ஐஆா் நடைமுறையின்கீழ், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வாக்காளா்கள் தங்களின் பெற்றோரின் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) தகவல்களை சமா்ப்பிக்க வேண்டும் என்ற மாற்றம் கடந்த ஜூலையில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 1960-ஆம் ஆண்டின் வாக்காளா் பதிவு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளாமல், அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றத்துக்கு தோ்தல் ஆணையா்கள் விவேக் ஜோஷி, சுக்பீா் சிங் சாந்து ஆகியோா் எதிா்ப்பை பதிவு செய்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடா்பாக, முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்கள் ஓ.பி.ராவத், எஸ்.ஒய்.குரேஷி ஆகியோா் கருத்து கூறுகையில், ‘புதிய வாக்காளா்கள் பதிவுக்கான படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தவறானவை; சட்டவிரோதமானவை. இந்த விஷயத்தில் தோ்தல் ஆணையா்கள் சரியான கூற்றை தெரிவித்துள்ளனா். தோ்தல் ஆணையத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் வெளிப்படுவது தீவிரமான விஷயம். இது வாக்காளா்களின் மனதில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும். ஜனநாயகத்துக்கு மிகவும் துரதிருஷ்டவசமானது’ என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments