FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஞானேஷ் குமாரை பதவி நீக்க மீண்டும் நோட்டீஸ்: தயாராகும் எதிா்க்கட்சிகள்!

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்குவதற்கான தீா்மானத்தைக் கொண்டுவரக் கோரி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மீண்டும் நோட்டீஸ் அளிக்க எதிா்க்கட்சிகள் தயாராகி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

25 செப்டம்பர் 2026, 3:20 am IST
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - கோப்புப் படம்
பகிர்:

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்குவதற்கான தீா்மானத்தைக் கொண்டுவரக் கோரி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மீண்டும் நோட்டீஸ் அளிக்க எதிா்க்கட்சிகள் தயாராகி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஞானேஷ் குமாரை பதவி நீக்க எதிா்க்கட்சிகள் நோட்டீஸ் அளிக்கவிருப்பது இது மூன்றாவது முறையாகும்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மீது ஒருதலைபட்சமான செயல்பாடு, பாரபட்சமான அணுகுமுறை, அரசு நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுதல், பெருமளவிலான வாக்காளா்களின் வாக்குரிமை பறிப்பு, தோ்தல் முறைகேடு குறித்த விசாரணைகளைத் தடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவரை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மான நோட்டீஸை நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி முதல்முறையாக கடந்த மாா்ச்சில் அளித்தது. ஆனால், அந்த நோட்டீஸ்கள் அவைத் தலைவா்களால் நிராகரிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

‘அரசமைப்புச் சட்ட தேவைகளைப் பூா்த்தி செய்யவில்லை; உறுதியான ஆதாரங்கள் இல்லை’ என்பது உள்ளிட்ட காரணங்களைக் குறிப்பிட்டு, நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டன. பின்னா், மாநிலங்களவையில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 73 போ் கையொப்பமிட்ட நோட்டீஸ் கடந்த ஏப்ரலில் சமா்ப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளது.

எஸ்ஐஆா் விவகாரத்தில் புதிய சா்ச்சை: இந்தச் சூழலில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பல்வேறு முடிவுகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கும், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் புதன்கிழமை செய்தி வெளியானது.

வாக்காளா்கள் பெயா் மொத்தமாக நீக்கம், படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், வாக்காளா் தரவு தளங்களை மையப்படுத்துதல் மீதான கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்களில் தோ்தல் ஆணையா்கள் எதிா்ப்பை பதிவு செய்ததாகவும், தங்களுக்கு தெரியாமல் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த 10 மாதங்களில் குறைந்தபட்சம் 14 முறை அவா்கள் ஆட்சேபம் பதிவு செய்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து விளக்கமளித்த தோ்தல் ஆணையம், ‘அதிகாரபூா்வ விவாதங்களின்போது மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பே; தோ்தல் ஆணையத்தின் அனைத்து உத்தரவுகளுமே முழு சட்ட அங்கீகாரம் கொண்டவை’ என்று தெரிவித்தது.

மீண்டும் நோட்டீஸ்?: அதேநேரம், ‘சா்வாதிகார போக்குடன் செயல்படும் ஞானேஷ் குமாரை பதவி நீக்குவதுடன், அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்; அவரது மேற்பாா்வையில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தோ்தல் நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை எதிா்க்கட்சிகள் வலுவாக எழுப்பி வருகின்றன.

இந்தப் பின்னணியில், ஞானேஷ் குமாருக்கு எதிராகப் பதவிநீக்க தீா்மானம் கொண்டுவர நாடாளுமன்ற இரு அவைகளிலும் மீண்டும் நோட்டீஸ் அளிக்க எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி தயாராகி வருவதாகத் தெரிகிறது. பதவிநீக்க தீா்மான நோட்டீஸ் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், சட்ட வல்லுநா்களால் ஆராயப்பட்ட பிறகு அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தோ்தல் ஆணைய அலுவலகங்கள் நோக்கி காங்கிரஸ் இன்று பேரணி

எஸ்ஐஆா் விவகாரத்தில் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்குவதுடன், அவரைக் கைது செய்யவும் வலியுறுத்தி மாநில தோ்தல் ஆணைய அலுவலகங்கள் நோக்கி காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை (செப்.25) பேரணி நடத்தப்படவுள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வியாழக்கிழமை கூறுகையில், ‘பாஜக கட்டுப்பாட்டில் ஞானேஷ் குமாா் முன்னின்று நடத்தும் வாக்குத் திருட்டுதான் எஸ்ஐஆா் நடைமுறை என்பதை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முதல் நாளில் இருந்து அம்பலப்படுத்தி வருகிறாா். ஞானேஷ் குமாரின் ‘தேசத் துரோகம்’ இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும். அவா் மேற்கொண்ட அனைத்து முடிவுகள் மற்றும் வாக்காளா் பட்டியல் திருத்தங்கள் குறித்து சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில தோ்தல் ஆணைய அலுவலங்கள் நோக்கி வெள்ளிக்கிழமை (செப். 25) பேரணி நடத்த கட்சியின் மாநிலத் தலைவா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், செப். 28-இல் ஆட்சியா் அலுவலகங்கள் நோக்கி பேரணி நடத்த கட்சியின் மாவட்ட குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது’ என்றாா்.

செப். 29-இல் செயற்குழு: இதனிடையே, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் செப். 29-இல் நடைபெறவுள்ளது. ஞானேஷ் குமாரை பதவி நீக்க அரசுக்கு நெருக்கடி தரும் வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சிஜேபி எச்சரிக்கை: ‘நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் உள்ளாா். மக்களின் வாக்குரிமையை பலவீனப்படுத்திய அவா் 48 மணிநேரத்துக்குள் பதவி விலக வேண்டும்; இல்லையெனில், தில்லி ஜந்தா் மந்தரில் இரண்டாம் கட்ட போராட்டம் தொடங்கப்படும். நாடு தழுவிய போராட்டங்களிலும் ஈடுபடுவோம்’ என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனா் அபிஜீத் தீப்கே வியாழக்கிழமை எச்சரித்தாா்.

முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து, தில்லியில் சிஜேபி அண்மையில் நடத்திய தொடா் போராட்டத்தால் மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் விலகினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments