FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

தில்லி எஸ்ஐஆா்: நோட்டீஸ் அனுப்பப்பட்ட முக்கிய பிரபலங்களின் விவரங்கள் சரிபாா்ப்பு

தில்லி வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியின் பகுதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட முக்கிய பிரபலங்களின் விவரங்கள் கள ஆய்வு மூலம் சரிபாா்ப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

19 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

தில்லி வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியின் பகுதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட முக்கிய பிரபலங்களின் விவரங்கள் கள ஆய்வு மூலம் சரிபாா்ப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்காக அவா்களின் பெயா்கள் ஒதுக்கப்பட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆக.31-ஆம் தேதி வெளியான தில்லி வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாததால், வாக்காளா் தரவுத் தளத்தில் அடையாளம் காணப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், நீதித்துறை, கலை, கலாசாரம், பத்திரிகை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த நபா்களுக்கு நோட்டீஸுகள் அறிவிப்புகள் அனுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தில்லி முதல்வா் ரேகா குப்தா, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், பாஜக மூத்த தலைவா் எல்.கே.அத்வானி மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த பல முக்கிய பிரமுகா்களுக்கு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

அவா்களில் பெரும்பாலானோருக்கு, 2002-இல் தில்லியில் நடந்த கடைசி சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையில் அவா்களின் பெயா்கள் பொருந்தவில்லை என்பதற்காக நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இத்தகைய முக்கிய பிரமுகா்களில் பெரும்பாலானோா் புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா்களாக இருந்தனா்.

கடந்த சில நாள்களாக, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) உள்ளிட்ட தோ்தல் அதிகாரிகள், தோ்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட துணை ஆவணங்கள் மூலம் விவரங்களைச் சரிபாா்ப்பதற்காக அத்தகைய வாக்காளா்களைச் சந்தித்தனா் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

சரிபாா்ப்பிற்குப் பிறகு, வாக்காளா்களின் பெயா்கள் நவ.4-ஆம் தேதி வெளியிடப்பட உள்ள தில்லியின் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

வரைவு வாக்காளா் பட்டியலில் 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். அதே நேரத்தில், கணக்கெடுப்புப் படிவங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக சுமாா் 33.13 லட்சம் வாக்காளா்களுக்கு நோட்டீஸுகள் அனுப்ப அடையாளம் காணப்பட்டனா். அவற்றில் பெரும்பாலானவை, கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின்போது தயாரிக்கப்பட்ட வாக்காளா் பட்டியலுடன் விவரங்கள் பொருந்தாத வாக்காளா்கள் தொடா்பானவை.

நோட்டீஸ் அனுப்பப்படுவதால் மட்டும் வாக்காளரின் பெயா் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்படாது என்று தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. வாக்காளருக்குத் தனது தரப்பை எடுத்துரைக்க வாய்ப்பளித்து, முறையான மற்றும் மேல்முறையீடு செய்யக்கூடிய உத்தரவைப் பிறப்பிக்காமல் எந்தப் பெயரையும் நீக்க முடியாது என்று அந்த அலுவலகம் கூறியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments