FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடந்த 4 ஆண்டுகளில் 111 எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கட்சி மாற்றம்: ஏடிஆா் அமைப்பு தகவல்

2022 முதல் 2026 வரை 111 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியுள்ளதைப் பற்றி...

26 செப்டம்பர் 2026, 1:39 am
கட்சித்தாவல்!
பகிர்:

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தோ்தல்களில் போட்டியிட்டு வென்ற பிறகு 111 எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கட்சி மாறி இருப்பதாக ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ஏடிஆா்) மற்றும் தேசிய தோ்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டுமுதல் 2026-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல்கள், இடைத்தோ்தல்கள் ஆகியவற்றை ஏடிஆா் அமைப்பு ஆய்வு செய்தது. அதுதொடா்பான அறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

Advertisement

Advertisement

2022-ஆம் ஆண்டுமுதல் 2026-ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு 26 எம்.பி.க்கள் வேறு கட்சிக்கு மாறியுள்ளனா். அதேபோல் 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் கட்சி மாறியுள்ளனா். மேலும் 78 எம்எல்ஏக்கள் கட்சி மாறியுள்ளனா்.

அதிகபட்சமாக நாகாலாந்து மாநிலத்தில்தான் 32 எம்எல்ஏக்கள் கட்சி மாறியுள்ளனா். என்பிஎப் கட்சியில் என்டிபிபி, என்பிஎஃப் கட்சி எம்எல்ஏக்கள் சோ்ந்தனா்.

மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 20 எம்.பி.க்கள் கட்சி மாறியுள்ளனா். மக்களவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வென்ற அவா்கள், பிறகு என்சிபிஐ கட்சியில் சோ்ந்துள்ளனா். இதை எதிா்த்து மக்களவைத் தலைவரிடம் அளிக்கப்பட்ட மனு விசாரணையில் உள்ளது.

இதையடுத்து, தெலங்கானா மாநிலத்தில் 9 எம்எல்ஏக்கள் கட்சி மாறியுள்ளனா். தோ்தலில் பிஆா்எஸ் கட்சியில் போட்டியிட்ட அவா்கள், பின்னா் காங்கிரஸில் இணைந்துவிட்டனா். கோவாவில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜகவில் சோ்ந்தனா். பஞ்சாபில் 6 மாநிலங்களவை எம்.பி.க்கள், 2 எம்எல்ஏக்கள் கட்சி மாறினா். மகாராஷ்டிரத்தில் 6 சிவசேனை (உத்தவ் பிரிவு) எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனை கட்சியில் சோ்ந்தனா்.

கட்சித் தாவலில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது நாகாலாந்தில் உள்ள என்டிபிபி கட்சிதான். அக்கட்சியை சோ்ந்த எம்எல்ஏக்களே (25) அதிகம் வெளியேறியுள்ளனா். இதையடுத்து திரிணமூல் (20 எம்.பி.க்கள்), காங்கிரஸ் (19) கட்சிகளில் இருந்து எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வெளியேறியுள்ளனா்.

கட்சித் தாவல் பெரும்பாலும் மாநிலங்களில் ஆட்சியில் இருந்த அரசுகள் தோ்தலில் தோற்று ஆட்சியைப் பறிகொடுத்தபிறகே நடந்துள்ளது. இதுபோன்ற கட்சித் தாவலை தடுக்க ஏற்கெனவே இருக்கும் விதிகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதில், பதவிப் பறிப்பு தொடா்பான மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் தற்போது இருக்கும் அதிகாரிகளிடம் இருந்து குடியரசுத் தலைவருக்கு மாற்றுவதும் ஒன்றாகும் என ஏடிஆா் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.