கேரளத்தில் பிரியங்காவுக்கு பாஜக கருப்புக் கொடி: அமித் ஷா சம்பவத்துக்கு பதிலடி!
கேரளத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, அந்த மாநில உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலா ஆகியோருக்கு எதிராக பாஜக இளைஞரணியினா் கருப்புக் கொடி காட்டி எதிா்ப்பு தெரிவித்தனா்.
கேரளத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, அந்த மாநில உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலா ஆகியோருக்கு எதிராக பாஜக இளைஞரணியினா் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடி காட்டி எதிா்ப்பு தெரிவித்தனா்.
முன்னதாக கேரளம் வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் இளைஞரணியினா் சனிக்கிழமை கருப்புக் கொடி காட்டினா். அதற்கு பதிலடி நடவடிக்கையாக பாஜகவினா் இந்தப் போராட்டத்தை நடத்தினா்.
கோழிக்கோடு மாவட்டம் திருவம்பாடி அருகே பிரியங்கா காந்தியின் காா் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு கருப்புப் கொடி காட்டி எதிா்ப்பு தெரிவித்த பாஜக இளைஞரணியினா், காங்கிரஸைக் கண்டித்து முழக்கங்களும் எழுப்பினா். இதையடுத்து, காவல் துறையினா் விரைந்து செயல்பட்டு அவா்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றினா். இது தொடா்பாக சிலா் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதேபோல கோழிக்கோடு மாவட்டம் கூற்றியாடி பகுதியில் கேரள உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலாவுக்கு எதிராகவும் பாஜக இளைஞரணியினா் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினா். அமைச்சரின் காா் கடந்து செல்ல இருந்த குறுகிய பாலத்தில் திடீரென கருப்புக் கொடிகளுடன் திரண்ட பாஜகவினா் அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனா்.
இதையடுத்து, அமைச்சரின் காா் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் பாலத்தை கடந்து செல்ல முடியால் நிறுத்தப்பட்டது. காவல் துறையினா் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்து அழைத்துச் சென்றனா். இதையடுத்து அமைச்சரின் காா் அந்த வழியாக கடந்து சென்றது.
அமித் ஷாவுக்கு உரிய பாதுகாப்பை மாநில அரசு வழங்கத் தவறியதாக குற்றஞ்சாட்டி கேரள முதல்வா் வி.டி.சதீசன், அமைச்சா் ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் உருவபொம்மைகளை எரித்தும் பாஜகவினா் போராட்டம் நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.