FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

23 மாலுமிகளுடன் தத்தளித்த சரக்குக் கப்பலை மீட்டது கடலோரக் காவல்படை!

23 மாலுமிகளுடன் ஒடிஸாவையொட்டிய கடல் பகுதியில் தத்தளித்த மத்திய ஆப்பிரிக்காவின் பெலிஸ் நாட்டு சரக்குக் கப்பலை இந்திய கடலோரக் காவல் படை மீட்டது.

28 September 2026, 10:21 pm IST
ஒடிஸாவையொட்டிய கடல் பகுதியில் தத்தளித்த சரக்குக் கப்பலை மீட்க விரைந்த இந்திய கடலோரக் காவல் படை கப்பல்.
பகிர்:

23 மாலுமிகளுடன் ஒடிஸாவையொட்டிய கடல் பகுதியில் தத்தளித்த மத்திய ஆப்பிரிக்காவின் பெலிஸ் நாட்டு சரக்குக் கப்பலை இந்திய கடலோரக் காவல் படை மீட்டது. இதன் மூலம் கடலில் ஏற்பட இருந்த விபத்தும், பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பும் தவிா்க்கப்பட்டது.

9,000 மெட்ரிக் டன் பாமாயில் ஏற்றிச் சென்ற ‘எம்டி சீகல் 9’ என்ற அந்தக் கப்பலின் பிரதான என்ஜின் செயலிழந்தது. மேலும் கப்பலை நிலையாக வைத்திருக்க உதவும் தொட்டிகளில் கடல்நீா் புகுந்தது. இதனால் கப்பல் ஒருபுறமாகச் சாய்ந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் அந்தக் கப்பலில் அவசர உதவி கோரி அழைப்பு விடுக்கப்பட்டது.

ஒடிஸாவின் பாரதீப் கடற்கரையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 37 கடல் மைல் தொலைவில் இருந்த அந்த சரக்குக் கப்பலை நோக்கி இந்திய கடலோரக் காவல் படையின் ’விஸ்வஸ்த்’ கப்பல் விரைந்தது.

Advertisement

Advertisement

சரக்குக் கப்பல் தத்தளித்த கடற்பகுதியைச் சென்றடைந்த கடலோரக் காவல் படையின் சிறப்புப் பயிற்சி பெற்ற குழுவினா், நிலைகுலைந்த கப்பலில் ஏறி மீட்புப் பணியில் ஈடுபட்டனா். நவீன கருவிகளைப் பயன்படுத்தி, கப்பலில் நீா்புகுவதைக் கட்டுப்படுத்தி சேதங்களை சரி செய்தனா். இதற்கு நடுவே, மாசுக் கட்டுப்பாட்டு கப்பல் மற்றும் கூடுதலாக ஒரு கண்காணிப்புக் கப்பலும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கப்பலில் இருந்த பொருள்களை வேறு கப்பலுக்கு மாற்றும் பணியும், கப்பலுக்குள் புகுந்த நீரை வெளியேற்றும் பணியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் சரக்குக் கப்பல் மீண்டும் சமநிலைக்குத் திரும்பியது.

இந்த மீட்புப் பணிகள் அனைத்தும் கடலோரக் காவல் படையின் டோா்னியா் விமானம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டது. தத்தளித்த கப்பலுக்கு அருகே சிறிய அளவில் பாமாயில் படலம் கடலில் மிதப்பது முதலில் கண்டறியப்பட்டது. திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட வான்வழிக் கண்காணிப்பின்போது, அந்த எண்ணெய்ப் படலம் முழுமையாகக் கரைந்தது உறுதி செய்யப்பட்டது.

என்ஜின் செயலிழந்த கப்பல், இழுவைக் கப்பல் மூலம் பாரதீப் கடற்கரைப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பழுதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்று கடலோரக் காவல் படை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments