நீதிக் கதைகள்! நண்பர்களை காட்டு; உன்னைப் பற்றி சொல்கிறேன்!
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.
ராமுவின் தந்தைக்கு கவலையாக இருந்தது. அவன் ஆசிரியை அவரிடம், "ராமுவின் சேர்க்கை சரியில்லை. அவனுடைய நண்பர்கள், படிப்பில் ஆர்வமற்று, ஊரைச் சுற்றுபவர்கள், வீட்டுக்கு அடங்காதவர்கள், இவர்களுடன் ராமு நட்பு பாராட்டுவதினால், இவனுடைய படிப்பு கெடுவதுடன், இவனுடைய நற்பண்புகளையும் இழக்க நேரிடும்" என்று கூறினார்.
வீட்டுக்கு வந்து ராமுவிடம் விசாரித்தார். "நான் நல்லாத்தானே படிக்கிறேன்; மதிப்பெண் வாங்குறேன்; என் நண்பர்களைக் குறை கூற வேண்டாம்'' என்று அசட்டையாகப் பதில் கூறிவிட்டு அகன்றான்.
அன்று, பள்ளி கோலாகலமாக இருந்தது. மாவட்ட அதிகாரி, அந்த ஊர் விவசாயிக்கு விருது வழங்கும் விழா நடைபெற இருந்தது. பள்ளியின் திடல் வளாகம் முழுமையும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
Advertisement
Advertisement
மாவட்ட அதிகாரி பேசுகையில், விவசாயியைப் பாராட்டி, "ஐயா 5 வருடமாகத் தொடர்ந்து விருது பெறுகிறீர்கள். சிறந்த விவசாயி என்ற பட்டத்தை எப்படி தக்க வைத்துக் கொள்கிறீர்கள்? அதுமட்டுமின்றி, அக்கம்பக்கம் உள்ள வயலில் உழுபவர்களுக்கும், நல்ல வீரியமான சிறந்த விதைகளை நீங்களே தருகிறீர்களாம்... என்ன காரணம்" என்று கேட்டார்.
அதற்கு விருது பெற்ற அந்த விவசாயி, "ஐயா... என் வயல் மட்டும் செழித்தால் போதாது ஐயா, என் வயலுக்கு அருகில் இருக்கும் நிலத்தில் பயிரும் வலிமையான செழிப்புடனிருப்பது மிகவும் முக்கியம். காத்துல, பறவையினாலே மகரந்தச் சேர்க்கை நடக்கும். அப்போ, பக்கத்துலே உள்ள நிலத்துலே பயிர் சோகையா இருந்தா, அது என் பயிரையும் பாதிக்கும்.
அதனாலதான் சிறந்த வீரியமான விதைகளை என் அக்கம் பக்க நிலங்களில் விதைக்கத் தந்து விடுவேன்.
இதனால் என் பயிரும் அமோகமாக வளரும். அவர்கள் நிலமும் செழிப்புடன் இருக்கும்.
அக்கம் பக்கம் நல்லா இருந்தாத்தானே ஐயா, நாமும் நல்லாயிருக்க முடியும்? நம்ம வீட்டுக்கு ரெண்டு பக்கமும், திருடனும், ரவுடியும் குடியிருந்தால் நாம் நிம்மதியா இருக்க முடியாதே!" என்று கூறி அமர்ந்தார். கைதட்டல் சத்தம்... எழுந்தது. ராமுவின் மனத்தில் அந்த சப்தம்... கடப்பாறை இடியாய் விழுந்தது.
ராமுவுக்கு அப்பாவின் கவலை புரிந்தது. கூட்டாளிகளின் போக்கு சரியில்லை என்பதை மனம் உணர்ந்தது. உடனே, "உன் நண்பர்களை காட்டு; உன்னைப் பற்றி சொல்கிறேன்" - என்ற அறிஞரின் வாக்கும் நினைவில் எழ... இனி அவர்களுடன் சேரக் கூடாது என்ற உறுதியை பூண்டான் ராமு. அவன் கைதட்டலும் பலமாய் ஒலித்தது.
A moral story that children should know.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.