FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
குழந்தைகள் உலகம்

நீதிக் கதைகள்! கற்பது என்பது கற்பவரின் ஆர்வத்தைப் பொறுத்தது!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:59 pm IST
நீதிக் கதைகள்! கற்பது என்பது கற்பவரின் ஆர்வத்தைப் பொறுத்தது! - படம்: சிறுவர் மணி
பகிர்:

மகாபாரதத்தில் கெளரவர்களும், பாண்டவர்களும் குலகுரு துரோணாச்சாரியாரிடம் கல்வி கற்று வந்தனர். அது சமயம் அர்ஜுனன் மட்டும் அனைத்து கலையிலும் சிறந்து விளங்கினான். அது துரியோதனனுக்குப் பொறாமையையும், எரிச்சலையும் தந்தது. அதனால் தனது தாத்தா பீஷ்மரிடம், துரோணர் அர்ஜுனனுக்கு மட்டும் சிறந்த முறையில் கற்பிப்பதாகக் கூறினான்.

பீஷ்மரும் துரோணரிடம் இது பற்றிக் கேட்டார். துரோணர் பதில் ஏதும் கூறாமல் பீஷ்மரை மாணவர்கள் இருக்கும் பகுதிக்கு அழைத்து வந்தார். அர்ஜூனனை அழைத்து ஆற்றில் தண்ணீர் எடுத்து வரப் பணித்தார். அர்ஜுனனும் தண்ணீர் எடுத்துவரச் சென்று விட்டான்.

ஆற்றிற்குச் செல்லும் வழியில் உள்ள மரத்தடிக்கு பீஷ்மரையும் துரியோதனையும் அழைத்து வந்தார் துரோணர். துரியோதனனிடம் ஒரு மந்திரத்தைச் சொல்லி, அந்த மந்திரத்தைத் தரையில் உள்ள மணலில் எழுதச் சொன்னார். பிறகு அந்த மந்திரத்தைச் சொல்லி மரத்தின் மீது அம்பெய்தப் பணித்தார். என்ன ஆச்சரியம்! மரத்திலுள்ள அனைத்து இலைகளிலும் துளைகள் விழுகின்றன. மூவரும் பாடசாலை செல்கின்றனர்.

Advertisement

Advertisement

அர்ஜுனனும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பாடசாலைக்கு வந்தான். துரோணர் அர்ஜுனனிடம், பாடசாலையில் உள்ள மரத்தின் அனைத்து இலைகளிலும் துளையிடச் சொல்கிறார். அர்ஜுனன் சற்றும் யோசிக்காமல் வில் எடுத்து அம்பு எய்தினான்.

அனைத்து இலைகளிலும் துளைகள் விழுகின்றன. பீஷ்மருக்கு ஒரே ஆச்சரியம்!

அர்ஜுனனை அழைத்து, "இந்தக் கலையை துரோணர் கூறும்போது நீ இல்லையே..., எப்படி உனக்கு இந்த வித்தை தெரிந்தது?" என்று வினவினார்.

அதற்கு அர்ஜுனன், "நான் வரும் வழியில் ஒரு மரத்தின் அனைத்து இலைகளும் துளையிடப் பட்டிருப்பதைக் கண்டேன். அருகில் மணலில் ஏதோ எழுதியிருப்பதையும் பார்த்தேன். இது குலகுரு கற்றுத் தந்த வித்தையாக இருக்கலாம் என்று ஊகித்து மனப்பாடம் செய்து கொண்டேன்! இங்கு நான் வந்ததும் குலகுரு துளையிடச் சொன்னதும் நான் அந்த மந்திரத்தைச் சொல்லி அம்பெய்ய துளைகள் அனைத்து இலைகளிலும் விழுந்தன. எனது ஊகம் சரியானதென்று இப்போது உணர்ந்தேன்" என்றான்.

பிறகு துரோணர் துரியோதனனிடம் வேறு ஒரு மரத்தைக் காண்பித்துத் துளையிடச் சொன்னார். துரியோதனனோ அம்மந்திரத்தை மறந்து விட்டான்.

துரோணர் பீஷ்மரைச் சற்று நேரம் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

பீஷ்மர் துரியோதனனிடம், "கற்பது என்பது கற்பவரின் ஆர்வத்தைப் பொறுத்தது!" என்று கூறிவிட்டுச் சென்றார்.

துரியோதனன் தலைகுனிந்தான்.

summary

A moral story that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments