ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையின்றி செயல்படும் காரைக்கால் காவல்துறை
ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையின்றி காரைக்கால் காவல்துறை செயல்பட்டுவருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் காரைக்கால் மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை
ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையின்றி காரைக்கால் காவல்துறை செயல்பட்டுவருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் காரைக்கால் மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிக்கவேண்டுமென காரைக்கால் மக்களிடையே வலியுறுத்தப்படுகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை போராட்டக் குழு ஆர்ப்பாட்ட பிரசாரமும் நடத்தவுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுவர் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றவராகவும், காவல்துறை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்படுபவர் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றவராகவும் நியமிக்கும் வழக்கம் இருந்தது, அண்மை காலத்தில் இவை மாற்றப்பட்டுவிட்டது.
காரைக்கால் ஆட்சியராக ஐ.ஏ.எஸ். அல்லாத அதிகாரியும், காவல்துறையில் காவல் கண்காணிப்பளர் ஐ.பி.எஸ். அல்லாத அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் காவல்துறையில் எஸ்.எஸ்.பி. என்கிற பதவியில் ஐ.பி.எஸ். அதிகாரி புதுச்சேரியில் பணியிலிருந்தவாறு, காரைக்கால் பொறுப்பை கூடுதலாக கவனிக்க புதுச்சேரி அரசு ஏற்பாடு செய்துள்ளது.
Advertisement
Advertisement
இதுபோன்ற நியமனத்தால் காரைக்கால் மக்கள் நிர்வாக ரீதியிலும், காவல்துறையின் ரீதியிலும் பல்வேறு சிரமங்களை அனுபவித்துவருகின்றனர்.
காரைக்கால் எஸ்.எஸ்.பி. பணியை புதுச்சேரியிலிருந்தவாறு வி.ஜே.சந்திரன் கூடுதல் பொறுப்பாக கவனித்துவந்தார். அவர் ஹைதராபாத்தில் நடக்கவுள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சியில் பங்கேற்க செல்லவுள்ளதாகவும், அவருக்கு பதிலாக காரைக்கால் எஸ்.எஸ்.பி. கூடுதல் பொறுப்பை புதுச்சேரி காவல்துறை எஸ்.எஸ்.பி. ஏ.கே.கவாஸூக்கு வழங்கியுள்ளதாக புதுச்சேரி காவல்துறை தலைமை அறிவித்துள்ளது.
காரைக்காலுக்கு நிரந்தரமாக ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இந்த நடவடிக்கையின் மூலம் தெரியவருகிறது.
காரைக்கால் மாவட்டத்துக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிதான் வேண்டுமென கேட்கும் காரைக்கால் மக்கள், இதற்காக ஓரிரு காரணங்களையும் விளக்குகின்றனர். காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தை ஆட்சியர் கவனிக்கிறார். அரசுத் துறை ஒவ்வொன்றுக்கும் தலைவர் உள்ளார். அலுவல் நேரம் காலை முதல் மாலை வரை இருக்கும்போது, அதிகாரி முதல் ஊழியர் வரை காலை 10 மணிக்கு அலுவலகத்தில் சென்றால்கூட 50 சதவீதத்தினரை பார்க்கமுடியவில்லை. அடுத்த இருக்கையில் உள்ளவரைக் கேட்டால், பெர்மிஷனில் சென்றுள்ளார், இப்போது வந்துவிடுவார் என்கின்றனர்.
மாலை நேரத்தில் சென்றால்கூட இதுபோன்ற நிலையையே பெரும்பாலான அலுவலகத்தில் காணமுடிகிறது. இதனால் எந்த பலனையும் பெறமுடியவில்லை. இதுகுறித்து இப்போதைய ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தால், கண்டிப்பான உத்தரவு, ஆய்வுகள் மேற்கொள்வார் என்கின்றனர். எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த நிதி பெரிய பிரச்னையாக புதுச்சேரி அரசுக்கு இருப்பதை ஏற்கும் மக்கள், மக்களின் சாதாரண மேலே கூறிய பிரச்னைகள் போன்றவற்றை தீர்க்க நிதி தேவையில்லை, அதிகாரிகளின் நடவடிக்கையே அவசியம் என்கின்றனர்.
காவல்துறையை பொருத்தமட்டில், காவல்நிலையங்களில் பிரச்னை குறித்து புகார் வாங்கப்படுவதே இல்லை. கட்டப் பஞ்சாயத்து மூலம் தீர்வு காணவே முயற்சிக்கின்றனர். போக்குவரத்து காவல்நிலையத்தாரோ, விபத்து நடந்து இறந்தோர் தரப்பிலும், எதிர் தரப்பிலும் ஆதாயம் தேடும் செயல்பாட்டிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். ஊர்க்காவல் படையினரோ, எந்தவொரு காரைக்கால் பதிவு இல்லாத வெளியூர் வாகனங்களையும் சாலையில் சுதந்திரமாக செல்ல விடுவதில்லை. பணம் பறிக்கும் அவலச் செயலில் ஈடுபடுகின்றனர். இதற்கு மாவட்டத் தலைவராக ஐ.பி.எஸ். அதிகாரி இருந்தால், நடுநிலையான, உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள்.கண்டிப்பு இருக்குமெ நம்புகின்றனர் காரைக்கால் மக்கள்.
இதுகுறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், யூனியன் பிரதேசத்தை கனிக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்கின்றனர் மக்கள்.
இவ்விரு தலைமை பொறுப்பும் தகுதியானவர் நியமிக்கவேண்டிய கோரிக்கையை வலியுறுத்தி காரைக்கால் போராட்டக் குழு இன்று வியாழக்கிழமை காரைக்காலில் ஆர்ப்பாட்ட பிரசாரத்தை நடத்தவுள்ளது. இந்த போராட்டம் மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் விழித்துக்கொள்ள வாய்ப்புண்டு எனவும் போராட்ட அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.