FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழறிஞர் பேராசிரியர் மா. நன்னன் காலமானார்

தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன்(94) உடல்நலக்குறைவால் சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் இன்று காலமானார்.

Updated On : 7 நவம்பர் 2017, 11:09 am IST
பகிர்:

சென்னை: தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன்(94) உடல்நலக்குறைவால் சென்னை சைதாப்பேட்டை  உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.

திருஞானசம்பந்தன் என்ற இயற்பெயர் கொண்ட பேராசிரியர் நன்னன் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் எனும் கிராமத்தில் 1924-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி மீனாட்சி-மாணிக்கம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தன் ஊருக்கு அருகில் இருந்த திருமுட்டத்தில் 8-ஆம் வகுப்பு வரை படித்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவைகளில் பணிபுரிந்தார்.

மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராக 11.2.1980 முதல் 31.5.1983 வரை பணியாற்றினார். 

Advertisement

Advertisement

வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார். இவர் எழுத்தறிவித்தலில் நன்னன் முறை எனும் புதிய முறையை ஏற்படுத்தினார். தமிழ்நாடு பாடத்திட்டக் குழுவில் பணியாற்றி உள்ளார்.

சென்னைத் தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் கற்பித்தார். பல பாடநூல்களையும் துணைப்பாடநூல்களையும் எழுதிய நன்னன், 1990-2010 காலகட்டத்தில் சுமார் எழுபது நூல்களை எழுதியுள்ளார். 

மக்கள் தொலைக்காட்சியில் அறிவோம் அன்னைமொழி என்ற தலைப்பில் தமிழைப் பிழையின்றி எழுதவும், வாக்கியங்களை அமைக்கவும் நாள்தோறும் தகவலை வழங்கிவந்தவர் மா.நன்னன். நிகழ்ச்சியின் வாசகர்களை தமிழ்ப் பண்ணையார்கள் என்றே அழைத்து வந்தார்.

தமிழ்ப்பண்ணை நிகழ்ச்சியில் தினமும் காலை 7.30 முதல் 8 மணி வரை தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் உள்ள நிறை குறைகளையும், குறைகளுக்கான சரியான தீர்வுகளையும் ஆராய்ந்தார். 

தமிழ் செம்மல் விருது, பெரியார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ள மா.நன்னன், செம்மொழி, உலகத் தமிழ்மொழி மாநாட்டில் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 

பெரியார் கொள்கைகளின் மீது பற்று கொண்ட இவர் பெரியார் கொள்கைகள் குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “பெரியாரைக் கேளுங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெள்ளையனே வெளியேறு என்னும் போரிலும், திராவிட இயக்க உணர்வு பெற்றபின் தமிழிசைக்கிளர்ச்சி, இந்தி எதிர்ப்புப் போர் ஆகியவற்றில் கலந்துகொண்டும், தொடர் வண்டி நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்தும் சிறை சென்றுள்ளார்.

1942-ஆம் ஆண்டு முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், தொழிலாளரியல் ஆகியவை குறித்து பல மேடைகளில் பேசி வந்துள்ளார். 

இவருக்கு ந. பார்வதி என்ற வாழ்க்கைத் துணைவியும் வேண்மாள், அவ்வை என்ற மகள்களும் அண்ணல் என்ற மகனும் உள்ளனர். 

நன்னன் எழுதி வெளிவந்த நூல்கள்: 
- இவர்தாம் பெரியார் 3 சுயமரியாதை - 2012 ஏப்ரல் 
- இவர்தாம் பெரியார் 1 . தோற்றம் (வரலாறு) - 2001 செப்டம்பர் 
- இவர்தாம் பெரியார் 2 . போர் (வரலாறு) - 2001 அக்டோபர் 
- உரைநடையா? குறை நடையா? (மூன்றாம் பதிப்பு) 
- எல்லார்க்குந் தமிழ் - 1985 (குறிப்பு - ஆங்கிலமொழியை அறிந்தோர் ஆசிரியர் ஒருவரின் உதவியின்றி தாமே தமிழைப் படிக்கவும், எழுதவும் பெரும் அளவுக்கு உதவும் நோக்கத்தோடு இச்சிறுநூல் உருவாக்கப்பட்டது.) 
- எழுதுகோலா? கன்னக்கோலா? - 2008 சூலை 
- கல்விக் கழகு கசடற எழுதுதல் - 2005 சூன் 
- கெடுவது காட்டுங் குறி - 2009 சூலை 
- கையடக்க நூல்கள் 
- சும்மா இருக்க முடியவில்லை - 2012 ஏப்ரல் 
- செந்தமிழா? கொடுந்தமிழா? 
- செந்தமிழைச் செத்த மொழியாக்கிவிடாதீர் 
- தடம் புரள்கிறதா தமிழ் உரைநடை 
- தமிழ் உரைநடை போகிற போக்கு.., - 2003 அக்டோபர் 
- தமிழ் எழுத்தறிவோம் 
- தமிழியல் - தொல், எழுத்தும் சொல்லும் தொடருடன் - 2012 ஏப்ரல்
 தமிழைத் தமிழாக்குவோம் - 1 
- தமிழைத் தமிழாக்குவோம் - 2 
- தமிழைத் தமிழாக்குவோம் - 2 
- தவறின்றித் தமிழ் எழுதுவோம் தவறின்றித் தமிழ் எழுதுவோம் (வழுக்குத் தமிழ்) 
- தளர்ச்சியின் கிளர்ச்சி பாகம் 1 
- தளர்ச்சியின் கிளர்ச்சி பாகம் 2 
- திருக்குறள் மூலமும் விளக்க உரையும் - 2012 ஏப்ரல் 
- தொல் - பேராசிரியர் உரைத்திறன் - 2012 ஏப்ரல் 
- நல்ல உரைநடை எழுத வேண்டுமா? - திறனாய்வும் தீர்ப்பும் 
- நல்ல உரைநடை எழுத வேண்டுமா? (மூன்றாம் பதிப்பு) 
- நன்னன் கட்டுரைகள் 
- புதுக்கப்பட்ட பதிப்புகள் 
- பெரியார் கணினி (இரு தொகுதிகள்) 
- பெரியார் பதிற்றுப் பத்து - 2007 சனவரி 
- பெரியாரடங்கல் - 2004 மே 
- பெரியாரியல் 1 . பொருள் - 1993 
- பெரியாரியல் 2 . மொழி - 1993 செப்டம்பர் 
- பெரியாரியல் 3 . இலக்கியம் - 1993 செப்டம்பர் 
- பெரியாரியல் 4 . கலை - 1993 திசம்பர் 
- பெரியாரியல் 5 . தாம் - 1994 ஏப்பிரல் 
- பெரியாரியல் 6 . கல்வி - 1996 ஆகசுடு 
- பெரியாரியல் 7 . ஒழுக்கம் - 1997 அக்டோபர் 
- பெரியாரியல் 8 . திருமணம் - 1998 செப்டம்பர் 
- பெரியாரியல் 9 . கடவுள் - 1998 சூலை 
- பெரியாரியல் 10 . மதம் - 1998 சூலை 
- பெரியாரியல் 11 . பார்ப்பனியம் - 2000 ஆகசுடு 
- பெரியாரியல் 12 . சாதி - 2000 சூலை 
- பெரியாரியல் 13 . அரசியல் - 2002 அக்டோபர் 
- பெரியாரியல் 14 . சுயமரியாதை - 2003 அக்டோபர் 
- பெரியாரியல் 15 . பகுத்தறிவு - 2004 திசம்பர் 
- பெரியாரியல் 16 . கட்சிகள் - 2004 திசம்பர் 
- பெரியாரியல் 17 . வாழ்க்கை - 2004 திசம்பர் 
- பெரியாரியல் 18 . மனிதன் - 2005 சூலை 
- பெரியாரியல் 19 . தொழிலாளர் - 2005 சூலை 
- பெரியாரியல் - தாம் பெரியாரின் உவமைகள் 
- பெரியாரின் உவமைகள் - 1998 ஆகசுடு 
- பெரியாரின் குட்டிக் கதைகள் 
- பெரியாரின் குட்டிக்கதைகள் - 1998 ஆகசுடு 
- பெரியாரின் பழமொழிகள் 
- பெரியாரின் பழமொழிகள் - 1998 ஆகசுடு 
- பெரியாரின் புத்துலகு 
- பெரியாரின் புத்துலகு 
- பெரியாரைக் கேளுங்கள் 
- பெரியாரைக் கேளுங்கள் - 24 குறுமங்கள் 
- பெரியாரைக் கேளுங்கள் (தொகுப்பு) 
- பைந்தமிழுரைநடை நைந்திடலாமா? - 2006 சூலை 
- வாழ்வியல் கட்டுரைகள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பேராசிரியர் மா. நன்னன் அவர்களின் பிரிவு தமிழுக்கு மாபெரும் இழப்பு என அறிஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments