அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் வாழ்க்கை வரலாறு!
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் எம்எல்ஏ போஸ்(69) இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
சென்னை: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் எம்எல்ஏ போஸ்(69) இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த போஸூக்கு, இன்று அதிகாலை திடீரென மாரடைப்பால் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை சோதித்த மருத்துவர்கள் அவரது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஏ.கே.போஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பெற்றோர்: மதுரையில் ஜீவா நகரில் வசித்து வரும் ஏ.கே. போஸ் டிராவல்ஸ் அதிபர். இவருடைய பெற்றோர் கருப்பத்தேவர்.
மனைவி: பாக்யலட்சுமி. 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
கல்வி: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 1993-ஆம் ஆண்டு எம்.ஏ அரசியல் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.
அரசியல்: எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்து வந்த போஸ், 23வது வயதில் அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 2003 முதல் 2006 வரையும், 2011 முதல் 2012 வரை என 2 முறை அதிமுகவின் மதுரை மாவட்ட செயலாளராக இருந்துள்ளார்.
2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பரபரப்பான அரசியல்வாதியாக தொகுதி வாசிகளுக்கு தெரியாததால் பலருக்கும் இவரைப் பற்றி தெரியவில்லை என்பதே தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது.
பேரவை உறுப்பினராக... பின்னர், 2006-ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக பேரவைக்கு சென்றார். 2007-ஆம் ஆண்டு பேரவையில் நடைபெற்ற அமளியில் தொப்பியை சபாநாயகர் மேஜை மீது வீசியதாக பத்து நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தார்.
2011-ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கப்படவே, போஸ், மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறையாக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பேரவைக்கு சென்றார்.
2016-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் மீண்டும் வடக்குத் தொகுதியில் போட்டியிட மனு அளித்தவர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் சேர்த்து முயற்சி செய்து வந்தார். ஆனால், ஜெயலலிதா அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த நிலையில், பேரவைத் தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே உடல் நலக்குறைவால் எஸ்.எம்.சீனிவேல் காலமானர்.
இந்த நிலையில் உடல் நலம் குறைவு காரணமாக ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில், திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் போஸ் போட்டியிட்டு வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பேரவைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு எஸ்.எம்.சீனிவேல் வெற்றி பெற்றார். ஆனால், அவர் உடல் நலம் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதன்பின்னர் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.கே. போஸ் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.