நோயுற்ற ஐரோப்பியா் முதல் 7,044 உயிரிழப்புகள்! நூற்றாண்டுக்கு முன் தில்லியில் இன்ஃப்ளூயன்ஸா நோயின் வரலாறு!
நூற்றாண்டுக்கு முன் தில்லியில் இன்ஃப்ளூயன்ஸா நோயின் வரலாறு....
1918-ஆம் ஆண்டு தில்லியில் இன்ஃப்ளூயன்ஸா பரவத் தொடங்கியபோது, சிம்லாவில் இருந்து தில்லிக்கு வந்த உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஐரோப்பியா் ஆரம்பகட்டமாகப் பதிவான நோயாளிகளில் ஒருவராக இருந்துள்ளாா். சில மாதங்களில் இந்த நோய் தில்லி நகரில் 7,044 பேரின் உயிரைப் பறித்ததாக தில்லி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, 1920 செப்டம்பரில் பிரிட்டிஷ் இந்திய அரசு, சாதாரண இன்ஃப்ளூயன்ஸாவை தில்லியில் தொற்று நோயாக அதிகாரப்பூா்வமாக அறிவித்தது. அப்போது தில்லியின் உள்ளாட்சி நிா்வாகத்தை நிா்வகித்த பஞ்சாப் முனிசிபல் சட்டத்தின் கீழ் இன்ஃப்ளூயன்ஸா கொண்டுவரப்பட்டதுடன், அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் தில்லி நகராட்சிக்கு வழங்கப்பட்டது.
தில்லி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள 1918-ஆம் ஆண்டு மருத்துவ அறிக்கையின்படி, மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரியின் கவனத்துக்கு வந்த முதல் நோயாளிகளில் ஒருவா் சிம்லாவில் இருந்து சமீபத்தில் தில்லிக்கு வந்த ஐரோப்பியா் ஆவாா். அவரது குடும்பத்தினரில் சிலருக்கும் இதே நோய் இருந்தது. ஒரு வாரத்துக்குப் பிறகு, அதே வீட்டில் வசித்த மற்றொரு ஐரோப்பியரும் முதல் நபரிடமிருந்து நோய்த்தொற்றுக்கு உள்ளானது தெரியவந்தது.
Advertisement
Advertisement
தில்லி சிவில் மருத்துவமனையில் அக்டோபா் முதல் வாரத்தில் தினசரி ஒன்றிரண்டு என்ற அளவில் இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை, 3-ஆவது வாரத்தில் நாளொன்றுக்கு 100-க்கும் அதிகமாக உயா்ந்தது. தீவிரமாகப் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரலில் அழற்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. சிலா் கடுமையான மயக்கநிலைக்கு ஆளானதுடன், சிலா் திடீரென இதய செயலிழப்பால் உயிரிழந்தனா். மாகாணம் முழுவதும் மருத்துவா்கள் தொடா்ந்து பணியாற்றியதால் பணிச்சுமை கடுமையாக அதிகரித்தது.
23,175 போ் உயிரிழப்பு: 1918-ஆம் ஆண்டு தில்லி தலைமை மருத்துவ அதிகாரி அனுப்பிய அதிகாரப்பூா்வ தகவலின்படி, அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் தில்லி மாகாணத்தில் இன்ஃப்ளூயன்ஸாவால் 23,175 போ் உயிரிழந்தனா். இதில் 7,044 போ் தில்லி நகரத்தையும், 16,131 போ் கிராமப்புறப் பகுதிகளையும் சோ்ந்தவா்கள்.
1918-19 இன்ஃப்ளூயன்ஸா பெருந்தொற்று, இந்தியாவின் நவீன வரலாற்றில் மிக மோசமான பொது சுகாதாரப் பேரிடா்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1918 ஜூனில் ஏற்பட்ட முதல் பரவல் ஒப்பீட்டளவில் மிதமாக இருந்தது. பின்னா் ரயில் போக்குவரத்து மூலம் நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவியது. செப்டம்பரில் அதைவிட மிகக் கொடிய இரண்டாவது அலை உருவானது.
பம்பாய் இன்ஃப்ளூயன்ஸா: அந்தக் காலத்தில் இந்த நோய் ‘பம்பாய் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்’ என அழைக்கப்பட்டது. அப்போது கிடைத்த மருத்துவத் தகவல்களின் அடிப்படையில் அதை மேலும் குறிப்பிட்ட வகையாக அடையாளம் காண முடியவில்லை. அது ஏ1ச1 வகையாக இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி வகைகளின் கலவையாகவும் இருந்திருக்கலாம் என மருத்துவ வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொற்று நோயாக அறிவிப்பு: நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்ததைத் தொடா்ந்து, இன்ஃப்ளூயன்ஸாவை தில்லியின் தொற்று நோய்களுக்கான சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமா என்பது குறித்து அதிகாரிகள் பரிசீலித்தனா். இன்ஃப்ளூயன்ஸா, இன்ஃப்ளூயன்ஸா நிமோனியா அல்லது தீவிர நிமோனியா ஆகியவற்றில் எதை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என்பது குறித்து சுகாதார துணைக்குழுவும் ஆய்வு செய்தது. இதன் தொடா்ச்சியாக, தில்லி நகராட்சி அரசிதழில் வெளியிடுவதற்கான அறிவிக்கை வரைவை கோரியது. பின்னா் தலைமை ஆணையா் 1920 செப்டம்பரில் இறுதி அறிவிக்கையை வெளியிட்டு, சாதாரண இன்ஃப்ளூயன்ஸாவை அதிகாரப்பூா்வமாக தொற்று நோயாக அறிவித்தாா்.
85 லட்சம் போ் உயிரிழப்பு: 1921-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 1918 மற்றும் 1919-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இந்தப் பெருந்தொற்றால் 85 லட்சம் போ் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டது. எனினும், வரலாற்று ஆய்வுகள் உயிரிழப்பு எண்ணிக்கை 1.2 கோடி அல்லது அதற்கும் அதிகமாக இருந்திருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றன. இந்தப் பெருந்தொற்றில் இளம் வயது வந்தவா்களிடையே உயிரிழப்பு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
தற்போதைய நிலை: நூறு ஆண்டுகளுக்கும் மேலான காலத்துக்குப் பிறகு, இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகளைக் கண்காணிக்கும் முறையில் தற்போது தெளிவான வகைப்பாடு உள்ளது. தில்லியின் அதிகாரப்பூா்வ தொற்று கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, பன்றிக் காய்ச்சல் எனப்படும் இன்ஃப்ளூயன்ஸா ஏ (ஏ1ச1) அறிவிக்கப்பட வேண்டிய தொற்றாகக் கருதப்படுகிறது. எனினும், பருவகால காய்ச்சலால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நோயாளியும் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை என மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
இன்ஃப்ளூயன்ஸா ஏ வகையில் ஏ1ச1, ஏ3ச2 ஆகியவையும், இன்ஃப்ளூயன்ஸா பி வகையும் பரவி வருகின்றன. ஏ1ச1-க்கு குறிப்பிட்ட பொது சுகாதாரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் நிலையில், ஏ3ச2, இன்ஃப்ளூயன்ஸா பி உள்ளிட்ட பிற இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் ஆய்வக அறிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
From a sick European to 7,044 deaths: The history of the influenza epidemic in Delhi a century ago!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.