தில்லி காவல் நிலையத்தில் ராகுல் காந்தி தர்னா! என்ன நடந்தது?
தில்லி காவல் நிலையத்தில் ராகுல் காந்தி தர்னாவில் ஈடுபட்டிருப்பது பற்றி...
தில்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்துக்கு வெளியே அமர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தில்லியில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் மீது பெல்லட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரை காவல்துறையினர் ஏற்காததால் ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருகிறார்.
பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர் சாஹில் லோச்சவ், கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வழக்கறிஞருடன் சென்று தில்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை புகார் எண் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தில்லி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்துக்கு பாதிக்கப்பட்ட இளைஞருடன் சென்று, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, அதன் நகலை அளிக்குமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய காவல்துறை துணை ஆணையர் தொடர்ந்து மறுப்பதால், காவல் நிலையத்துக்கு வெளியே அமர்ந்து ராகுல் காந்தி தர்னாவில் ஈடுபட்டு வருகிறார்.
முதல் தகவல் அறிக்கை பதியும் வரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஜூலை 20 ஆம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. பெல்லட் குண்டு விவகாரம் தொடர்பான புகார் குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் பெல்லட் குண்டு பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Rahul Gandhi stages a sit-in at the Delhi police station - What happened?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.