அடிப்படை வசதிகள் இல்லாத அம்பத்தூர் டாஸ் தொழிற்பேட்டை! தொழில் முனைவோர் கவலை!!
பல கோடி வரி செலுத்தியும் அடிப்படை வசதிகள் இல்லாததால் அம்பத்தூர் டாஸ் தொழிற்பேட்டையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பல கோடி வரி செலுத்தியும் அடிப்படை வசதிகள் இல்லாததால் அம்பத்தூர் டாஸ் தொழிற்பேட்டையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் முனைவோர் கவலை அடைந்துள்ளனர்.
அம்பத்தூர் டாஸ் தொழிற்பேட்டை 1996-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 50 சிறு, குறு தொழில் நிறுவனங்களுடன் தொடங்கப்பட்ட இந்த தொழிற்பேட்டையில் தற்போது 300-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இங்கு ஆட்டோமொபைல்ஸ், வேளாண்மை, மருத்துவத்துறை கருவிகள் உள்ளிட்ட பல துறை தொடர்பான உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த தொழிற்பேட்டையில் உள்ள 27 சாலைகள் கடந்த 2012-ஆம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் மூலம் சீரமைக்கப்பட்டன. அதன் பிறகு முறையாக பராமரிக்கப்படாததால் சாலைகள் சேதமடைந்தன. தொடர்ந்து 2020- ஆம் ஆண்டு புதை சாக்கடை பணிகள் தொடங்கி முடிவடைந்தன. இதையடுத்து இங்குள்ள அனைத்து சாலைகளும் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் தொழிலாளர்கள் தினமும் இரு சக்கர வாகனங்களில் அவதிப்பட்டு சென்று வருகின்றனர்.
உற்பத்தி செய்த பொருள்களை நிறுவனங்களில் இருந்து கொண்டு செல்ல வாகனங்களும் வர மறுக்கின்றன. இதனால் உற்பத்தி பொருள்களை ஏற்றுமதி செய்யமுடியவில்லை.சிறு மழை பெய்தால் கூட சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கும். மழைநீர் செல்ல வடிகால் வசதியும் இல்லை. பருவமழையின் போது மழைநீர் தொழில் நிறுவனங்களில் புகுந்து உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், மூலப்பொருள்களும் சேதமடைந்து விடுகின்றன. தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடுகிறது.
மேலும் சாலைகளில் உள்ள மின் விளக்குகளும் சரிவர எரிவது இல்லை. இதனால் தெருக்களும் இரவில் இருளில் மூழ்கி கிடக்கின்றன. மேற்கண்ட காரணங்களால் வேலை முடிந்து இரவில் தொழிலாளர்கள் அவதிப்பட்டு சென்று வருகின்றனர்.
இருளை பயன்படுத்தி தொழிலாளர்களிடம் இருந்து பணம், கைப்பேசிகளை மர்ம நபர்கள் பறித்து செல்கின்றனர். இது குறித்து தொழிலாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பது இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாததால், டாஸ் தொழிற்பேட்டையில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து டாஸ் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் கூறியது, எங்களது தொழிற்பேட்டையில் அடிப்படை வசதிகளை செய்து தரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் அம்பத்தூர் மண்டல அதிகாரிகளை சந்தித்து பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். இருந்த போதிலும் சாலைகளை சீரமைக்கவும், வடிகால் வசதி செய்யவும், மின் விளக்குகளை எரியச் செய்யும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து உற்பத்தியாளர்கள் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தியும் பயனில்லை.
எங்களது தொழிற்பேட்டையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வெளிநாட்டவர்கள், உள்நாட்டில் உள்ள பெரிய நிறுவனத்தினர் வர தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் உற்பத்தி குறைந்து வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. பல கோடி வரி செலுத்தியும் மாநகராட்சி நிர்வாகம் எங்களை கண்டு கொள்ளவில்லை. முதல்வர் ஜோசப் விஜய், எங்கள் தொழிற்பேட்டை மீது கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் டாஸ் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் ஒன்று திரண்டு அம்பத்தூர் சிடிஹெச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.