FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

உள்ளகப் பயிற்சி கிடைக்காமல் தவிக்கும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி மாணவர்கள்!

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள மருத்துவமனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக (இன்டர்ன்ஷிப்) பல மாதங்களாகக் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது.

Updated On : 22 ஜூன் 2026, 8:19 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஆர்.மோகன்ராம்

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள மருத்துவமனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக (இன்டர்ன்ஷிப்) பல மாதங்களாகக் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது.

இந்தியாவில் மருத்துவப் படிப்பின் மீதான ஆர்வம் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் குறைவாகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணங்கள் பல லட்சங்களை எட்டுவதாலும், பல மாணவர்கள் "நீட்' தேர்வில் தகுதி பெற்று சீனா, பிலிப்பின்ஸ், நேபாளம், வங்கதேசம், கிர்கிஸ்தான், ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று 6 ஆண்டுகள் மருத்துவப் பட்டப் படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர்ந்து படிக்கின்றனர்.

Advertisement

Advertisement

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு முடிந்த பிறகு, இந்தியாவின் பயிற்சி மருத்துவர் (ஹவுஸ் சர்ஜன்) பயிற்சிக்கு இணையான ஓராண்டு உள்ளக மருத்துவப் பயிற்சியையும் அவர்கள் நிறைவு செய்கின்றனர். பின்னர், இந்தியாவில் மருத்துவம் செய்ய அனுமதி பெறுவதற்காக கடினமான மருத்துவத் தகுதித் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் எஃப்எம்ஜிஇ (ஃபாரின் மெடிக்கல் கிராஜுவேட் எக்ஸாமினேஷன்) வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்விலும் வெற்றி பெற வேண்டும். இதற்குப் பிறகும், இந்தியாவில் மருத்துவப் பதிவு பெறுவதற்காக மீண்டும் ஓராண்டு பயிற்சி பெற வேண்டிய கட்டாயம் பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

காத்திருக்கும் மாணவர்கள்: இந்த நிலையில், கரோனா தொற்று காலத்தில் வெளிநாட்டிலேயே உள்ளகப் பயிற்சியை முழுமையாக முடித்திருந்தால், அவர்கள் இந்தியாவில் மீண்டும் அந்தப் பயிற்சியைச் பெறத் தேவையில்லை என்றும், நேரடியாகப் பதிவு வழங்கலாம் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தின.

ஆனால், தமிழ்நாட்டில் இந்த நடைமுறையை முழுமையாகச் செயல்படுத்தாததால், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 1,700 மாணவர்கள் உள்ளகப் பயிற்சிக்காக நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர். மாதந்தோறும் அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உள்ளகப் பயிற்சி இடங்களே வழங்கப்படுவதால், மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக, அவர்கள் மருத்துவராகப் பணியாற்ற முடியாததுடன், முதுநிலை படிப்புகளைத் தொடரும் வாய்ப்பும் தாமதமாகிறது.

மாணவர்களின் எதிர்பார்ப்பு: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காதவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நாடும்போது, உள்ளகப் பயிற்சிக்காக ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது மட்டுமன்றி, பல இடங்களில் உதவித்தொகை, தங்குமிடம், உணவு போன்ற அடிப்படை வசதிகளும் வழங்கப்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு மாறாக, பல மாநிலங்களில் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் உள்ளகப் பயிற்சி வழங்கப்படுகிறது என்றும், இந்தப் பயிற்சி கட்டணமின்றி, ஊதியத்துடன் அளிக்கப்படுவதாக மாணவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆனால், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் வழங்கப்படும் தற்காலிக தகுதிச்சான்று பெறுவதற்கே நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை ஆகிறது என்றும், பிற மாநிலங்களில் இதே செயல்முறை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் நிறைவடைகிறது என்றும் மாணவர்கள் கூறுகின்றனர். இந்தத் தாமதம், ஏற்கெனவே மருத்துவப் பட்டமும், வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் வென்று தகுதியும் பெற்ற இளைஞர்களின் வாழ்க்கையையும், மருத்துவப் பணியில் சேரும் வாய்ப்பையும் பெரிதும் பாதிக்கிறது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் விரைந்து செயல்படுத்தி, உள்ளகப் பயிற்சி ஒதுக்கீட்டை அதிகரித்து வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு விரைவாக மருத்துவப் பதிவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முதல்வர் தீர்வு காணக் கோரிக்கை: குறிப்பாக, வெளிநாட்டிலேயே உள்ளகப் பயிற்சியை முழுமையாக நிறைவு செய்து, தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்த அனைத்து நிபந்தனைகளையும் நிறைவு செய்த மாணவர்களுக்கு, இந்தியாவில் மீண்டும் உள்ளகப் பயிற்சி பெற வலியுறுத்தாமல் பல மாநிலங்கள் நிரந்தர மருத்துவப் பதிவு வழங்கியுள்ளன. இதே நடைமுறையை தமிழக அரசும் செயல்படுத்தி, தகுதியான மாணவர்களுக்கு நேரடியாக நிரந்தர மருத்துவப் பதிவு வழங்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய வேண்டுகோளாகும். இந்த பிரச்னையின் தீவிரத்தை முதல்வர் ஜோசப் விஜய் கவனத்தில் கொண்டு, தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப தொடர்புடைய துறைகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு வழங்க வேண்டும் என்பதே ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments