ரத்தம், கண்ணீர், விடாமுயற்சி: மொராக்கோவின் நம்பிக்கை நாயகன் இஸ்மாயில் சைபாரி!
மொராக்கோ அணியினை அடுத்த சுற்றுக்கு முன்னேற்றிய இஸ்மாயில் சைபாரியின் தன்னம்பிக்கை மிகுந்த வாழ்க்கைப் பயணம் குறித்து...
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் மொராக்கோவின் நட்சத்திர வீரர் இஸ்மாயில் சைபாரி (25 வயது) கடைசி பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து, அணியை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிறிய வயதில் நடக்க முடியாத, கால்கள் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்ட இஸ்மாயில் சைபாரி தற்போது மொராக்கோ அணியை அடுத்த சுற்றுக்கு முன்னேற்ற முக்கியமான காரணமாகியுள்ளார். அவரது விடாமுயற்சியான கதை பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கிறது.
ரத்தம்
Advertisement
Advertisement
ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் மொராக்கோ அணியும் நெதர்லாந்து அணியும் மெக்சிகோவின் மான்டேரி திடலில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு மோதின.
இந்தப் போட்டி ரெகுலர் டைம்மிங்கில் (ஸ்டாப் உள்பட) 1-1 என சமநிலையில் முடிந்ததால், ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. அங்கும் ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது. பெனால்டியில் 3-2 என மொராக்கோ வென்றது.
இந்தப் போட்டியில் இஸ்மாயில் சைபாரிக்கு கூடுதல் நேரத்தில் நெதர்லாந்து வீரருடன் மோதியதால் (120’) வலது கண்ணிற்கு மேல் அடிப்பட்டு ரத்தம் சொட்டியது. இதற்காக நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், வேறு உடை மாற்றப்பட்டது.
பெனால்டியில் கடைசி கோலை இஸ்மாயில் சைபாரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இவருக்கு முன்னதாக, கேப்டன் ஹகிமி பெனால்டியை தவறவிட்டதும் ரசிகர்கள் பதற்றமாகிவிட்டார்கள். ஆனால், சைபாரி நிதானமாக கோல் அடித்து, உற்சாகத்தில் தனது புதிய ஜெர்ஸியைக் கழற்றி திடலில் சுற்றினர்.
கண்ணீர்
இந்தச் சிறப்பான போட்டிக்குப் பிறகு, திர்டலுக்கு வந்திருந்த தனது தாயைக் கட்டி அணைத்து கண்ணீர் வடித்தார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகின்றன.
விடாமுயற்சி
இஸ்மாயில் சைபாரி தனது சிறுவயதில் கால்கள் இரண்டும் உள்நோக்கி வளைந்திருந்ததால் அவரால் நடக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர், சிகிச்சைக்குப் பிறகு கால்கள் நேராக்கப்பட்டது.
நேர்காணல் ஒன்றில் (214) பேசிய சைபாரி, ”மருத்துவர்கள் என் அம்மாவிடன் என்னால் கடைசி வரை ஒழுங்காக நடக்க முடியாது என்றார்கள். எனது கால்கள் மிகவும் குறுகலாக உள்நோக்கி இருந்தன. அதனால், இயந்திரங்களைப் பொறுத்த வேண்டியிருந்தன. எனக்கு எல்லோரையும் போல வழக்கமான கால்கள் கிடைக்க எனது அம்மா பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
நான் கால்பந்து வீரராகவோ மற்ற எதுவாகவோ ஆக விரும்பவில்லை. சாதாரணமாக நல்ல உடல்நிலை இருந்தாலே போதும் என்றிருந்தேன். ஆரோக்யமான உடலுக்கு கடவுளுக்கு நன்றி” எனக் கூறியிருந்தார்.
பின்னர் 14 வயதில் உடல் பருமன் காரணமாக கிளப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது, அணிக்காக முக்கியமான பெனால்டியில் கோல் அடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றியுள்ளார். இவரது கதை விடாமுயற்சியின் சின்னமாக இருப்பதாக சமூக வலைதளத்தில் கால்பந்து ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.
ஃபிஃபாவின் சிறப்பு போஸ்டர்
ஆப்பிரிக்க அணியான மொராக்கோ கடந்த உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியது. இந்த முறையும் அந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த உலகக் கோப்பையில் இஸ்மாயில் சைபாரி 4 போட்டிகளில் 3 கோல்கள் அடித்துள்ளார். ஜூன் 13 - பிரேசிலுக்கு எதிராக கோல், ஜூன் 19 - ஸ்காட்லாந்து எதிராக கோல், ஜூன் 24 - ஹைதிக்கு எதிராக் கோல் அடித்துள்ளார். இன்று, நெதர்லாந்துக்கு எதிராக பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றிக்கான கோல் அடித்து அசத்தியுள்ளார்.
இந்த அபாரமான விளையாட்டைப் பாராட்டி ஃபிஃபா உலகக் கோப்பை தனது அதிகாரபூர்வ பக்கத்தில் சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
Blood, tears, and perseverance: Morocco's hero of hope, Ismael Saibari!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.