கமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!
கமேனியைக் கொல்ல வான்வெளியிலிருந்து பறந்து வந்த நீல சிட்டுக்குருவி எனப்படும் இஸ்ரேல் ஏவுகணை பற்றிய தகவல்கள்..
ஈரான் நாட்டின் உச்ச தலைவர், தலைமை மதகுரு அலி கமேனியை, இஸ்ரேல் படை, ப்ளூ ஸ்பேரோ எனப்படும் ஏவுகணையைக் கொண்டுத் தாக்கிக் கொன்றது பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.
ஈரானிய தலைவர் கமேனியின் இருப்பிடும், அவரது நடமாட்டம், அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு முறைகள் குறித்து பல ஆண்டுகளாக புலனாய்வு அமைப்புகள் நடத்தி வந்த தீவிர கண்காணிப்பின் இறுதியில், அவர் மீதான தாக்குதல் மிகக் கச்சிதமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் கூட்டாக நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா்.
Advertisement
Advertisement
அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த சனிக்கிழமை பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தின. ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள், ஏவுகணை-ட்ரோன் ஏவுதளங்கள், ராணுவ தளங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
தலைநகா் டெஹ்ரானில் ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனியின் அலுவலக வளாகத்தைக் குறிவைத்தும் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் கமேனி கொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த தாக்குதலுக்கு ரகசியமாகத் திட்டமிடப்பட்டது குறித்து தற்போது தகவல்கள் கசிந்து வருகின்றன.
ஓரிரு நாள்களில் முடிவெடுத்து இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை. பல ஆண்டுகளாக மிக சாதுர்யமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், தீவிர கண்காணிப்பு, மேம்படுத்தப்பட்ட ஏவுகணை தொழில்நுட்பம், ஈரானிய தலைவரின் நடமாட்டம், அதுவும் தெஹ்ரானின் இதயம் போன்ற பகுதியில் தாக்குதல் நடத்துவதுதன் துல்லியத் தன்மை என பலவும் ஒருங்கிணைந்ததாக உள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை கமேனி, அவரது அலுவலகம் அமைந்துள்ள பாஸ்டியர் சாலைக்கு வந்துள்ளார். அங்குதான் உயர்நிலைக் கூட்டம் நடந்தது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக, அதற்கு முன்பு வரை அவர் பூமிக்கடியில் இருக்கும் பதுங்கு தளங்களில்தான் இருந்துள்ளார். ஆனால் அவர் உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்கிறார் என்ற தகவல் கிடைத்த ஒரு சில வினாடிகளில் அந்த அலுவலக வளாகத்தில் ஏவுகணைகள் வீசப்படுகின்றன. கமேனி கொல்லப்படுகிறார். அவருடன் பல மூத்த அதிகாரிகளும் கொல்லப்படுகிறார்கள்.
நீல சிட்டுக்குருவி... இந்த தாக்குதலை நடத்தப் பயன்படுத்தப்பட்டது ப்ளூ ஸ்பாரோ ஏவுகணை. இஸ்ரேலிய போர் விமானத்திலிருந்து ஏவப்பட்ட மிகவும் அதிநவீன ஆயுதம் இது.
ரஃபேர் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்பினால் உருவாக்கப்பட்டதுதான் ப்ளூ ஸ்பாரோ ஏவுகணை. இது இஸ்ரேலின் மிக மேம்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளின் குடும்பத்தைச் சேர்ந்தது. இஸ்ரேலின் எஃப்-15 கழுகு போர் விமானத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது. போர் விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை, முதலில் வளிமண்டலத்தின் விளிம்பை நோக்கி வேகமாக உயர பறந்து, பிறகு செங்குத்தான பாதையில் அதன் இலக்கை நோக்கித் திரும்பியிருக்கிறது.
இந்த நீல சிட்டுக்குருவி என்று அழைக்கப்படும் ப்ளூ ஸ்பாரோ மூன்று வகைகளை உள்ளடக்கிய ஒரு பெரிய ஏவுகணை குடும்பத்தைக் கொண்டிருக்கிறது. இவை பிளாக் ஸ்பாரோ, ப்ளூ ஸ்பாரோ மற்றும் சில்வர் ஸ்பாரோ என பெயரிடப்பட்டவை. ஒவ்வொன்றும் சோதனை மற்றும் போரின் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வகை பாலிஸ்டிக் ஆயுதங்களைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை.
இந்த ஏவுகணை சுமார் 6.5 மீட்டர் நீளம் மற்றும் தோராயமாக 1,900 கிலோ எடை கொண்டது. இது கிட்டத்தட்ட 2,000 கிலோமீட்டர்களைக் கொண்ட இலக்கை தாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது, இது தொலைதூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும்.
எப்படி இயக்கப்படுகிறது இந்த ஏவுகணை? ப்ளூ ஸ்பாரோ ஏவுகணை, ஏவப்பட்டதும், ஒரு உயரமான பாலிஸ்டிக் பாதையையை நோக்கி பயணப்படுகிறது. இதனால், இந்த ஏவுகணையை இடைமறித்துத் தாக்குதல் மிகவும் கடினமாகிறது. முதலில் ஒரு போர் விமானத்திலிருந்து ஏவப்பட்டவுடன், ஏவுகணையின் ராக்கெட் மோட்டார் அதை மேல் வளிமண்டலத்தை நோக்கி மிக வேகமாக செலுத்துகிறது. அதிகபட்ச உயரத்தை அடைந்த பிறகு, அதே வேகத்தில் ஏவுகணை திரும்பி, வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைகிறது. ஏவுகணை, அதன் இலக்கை மிக அருகில் நெருங்கும்போது, அதனுள் இருக்கும் வழிகாட்டும் தொழில்நுட்ப அமைப்புகள், இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வகையில் ஏவுகணையின் பாதையை மிகச் சரியாக மாற்றியமைக்கின்றன.
இந்த மேம்பட்ட திறன் காரணமாக, எதிரிகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் ஏவுகணையை கண்டுபிடிக்க இயலாமல், எதிரி நாட்டின் கட்டுப்பாட்டு மையங்கள், வான் பாதுகாப்பு நிறுவல்கள் மற்றும் பெரிதும் வலுவூட்டப்பட்ட தொழில்நுட்ப கூட்டுக் கலவைகளால் தாக்க முடியாமல், ஏவுகணை, தங்கள் நிலப்பரப்பில் எவ்வித தடையும் இன்றி நுழைய அனுமதிக்கிறது.
அதாவது, ஏவுகணையின் அதிவேகம், வளிமண்டலத்துக்கு வெளியிலிருந்து வருவதால் அதன் தொடக்க உயரம் மற்றும் சூழ்ச்சித்திறன் ஆகியவற்றின் காரணமாக அதை இடைமறிக்க முயற்சிக்கும் தற்காப்பு அமைப்புகள் அதனைக் கண்டறிந்து எதிர்வினையாற்றுவதற்கான நேரத்தை கணிசமாகக் குறைத்து வந்த வேலையை கச்சிதமாக செய்து முடிக்கிறது.
இஸ்ரேலின் சிக்னல் புலனாய்வுப் பிரிவான யூனிட் 8200, கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக சேகரித்த உளவுத்துறை தாக்குதல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தப் பிரிவு இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக கமேனியைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வலையமைப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து வந்துள்ளது.
புலனாய்வு அதிகாரிகள் கமேனியின் நெருங்கிய மெய்க்காப்பாளர்களின் வேலை அட்டவணைகளைக் கண்காணித்தனர், தகவல்தொடர்புகளை இடைமறித்து கேட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல், கமேனியின் அலுவலக வளாகத்துக்கு அருகில் இருந்த கண்காணிப்புக் கருவிகளையும் ஊடுருவியிருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஸ்டர் தெருவைச் சுற்றியுள்ள போக்குவரத்து கேமராக்கள் அப்பகுதியில் மக்களின் நடமாட்ட முறைகளைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரண்டு பத்தாண்டுகால உளவுத்துறை முயற்சியின் காரணமாக அப்பகுதியில் இருந்த பாதுகாப்பின் சுற்றுகள், வளாகத்தைச் சுற்றியுள்ள தகவல் தொடர்பு உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை தங்களுக்கு உதவுபவையாக மாற்ற உதவியிருக்கிறது.
இந்த குறைபாடுகள் அனைத்தையும் தங்களுக்கு சாதகமானவையான மாற்றப்பட்டு அவை ஒரு வரைபடம் போல திட்டமிடப்பட்டு, இறுதித் தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படித்தான், இஸ்ரேலியப் படைகள் கமேனியின் உயர்நிலை சந்திப்புக் கூட்டம் நடக்கும் இடத்தை துல்லியமாக குறிவைக்க முடிந்தது என்கின்றன தகவல்கள்.
Information about the Israeli missile called the Blue Sparrow that flew from space to kill Khamenei.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.